|
video
சிட்டி யூனியன் வங்கியின் செயல் இயக்குநர் காமகோடியை
சென்னை ஆன்லைன்-க்காக ஹெச் ராமகிருஷ்ணன் பேட்டி கண்டார்.
ராமகிருஷ்ணன் - உங்களுடைய சிறு பிராயம்,
பிறந்தது, வளர்ந்தது இவை பற்றி.. கொஞ்சம் சொல்லுங்களேன்.
காமகோடி
- நான் பிறந்த ஊர் சென்னைதான். சென்னையில் இசபெல்
மருத்துவமனையில் பிறந்தேன். என்னுடைய சொந்த கிராமம்
திப்பிராஜபுரம். கும்பகோணத்திலிருந்து 7 கிலோ மீட்டர்
தூரத்தில் உள்ள மன்னார்குடி சாலையில் இருக்கிறது.
என்னுடைய அந்தகாலத்து பண்டைய அக்ரஹாரம். நமது கலாச்சார
ஆன்மீக விஷயங்கள் நிறைந்து இருந்த ஊர் அது. இன்னமும்
அப்படியே நிறைந்து இருக்கிறது. ஐந்தாவது வரையில் அந்த
கிராமத்தில்தான் நான் படித்தேன். ஒரு பஞ்சாய்த்து
பள்ளிக்கூடத்தில். அதற்கு பிறகு ஆறாவது வகுப்பிலிருந்து
கும்பகோணத்தில் கணித மேதை ராமானுஜம் அவர்கள் படித்த
டவுன் ஹை ஸ்கூலில் படித்தேன். கிட்டத்தட்ட 140 ஆண்டுகள்
பாரம்பர்யமிக்க பள்ளிக்கூடம் அது.
அதன் பிறகு பொறியியல் படிப்பதற்காக அண்ணாமலைப்
பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். இதற்கிடையே
திருச்சிராப்பள்ளி ஆர் ஈ சி - மண்டல பொறியியல்
கல்லூரியில் இடம் கிடைத்தது. அங்கு நான் வேதியியலில்
பொறியியல் பட்டம் பெற்றேன். அப்போது கல்லூரியிலேயே
நடந்த வளாகத் தேர்வில் ரிலையன்ஸ் நிறுவனத்தில் வேலை
கிடைத்தது.
1995-லிருந்து 98-ஆம் ஆண்டுவரை மூன்றாண்டுகள் அந்த
நிறுவனத்தில் திட்ட பொறியாளராக வேலை பார்த்தேன்.
1998-ல் ஹாங்காங்கில் சீனப் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ
படித்தேன். திரும்ப சென்னை வந்து ஒரு பிபிஓ நிறுவனம்
ஒன்றை ஆரம்பித்து நடத்தினோம். ஒருவேளை உரிய நேரத்திற்கு
முன்னதாகவே நாங்கள் துவக்கியதாலோ என்னவோ, அதை வலுவான
முறையில் நடத்த முடியாமல் போயிற்று.
பிறகு 2003-ம் ஆண்டில் நான் சிட்டி யூனியன் வங்கியில்
துணை பொது மேலாளராக நான் பொறுப்பேற்றுக் கொண்டேன்.
2005-ல் பொதுமேலாளராகவும், 2006-ல் செயல்
இயக்குநராகவும் பொறுப்பேற்றுக் கொண்டேன்.
ராம - நீங்கள் வேதியியல் பட்டம் படிக்கும்போது
வாழ்க்கையில் என்னவாக ஆகவேண்டும் என்று விரும்புனீர்கள்?
காம - மனம்விட்டு சொல்லவேண்டும் என்றால், அப்படி
எந்தவிதமான விருப்பமோ, ஆசையோ, அபிலாஷையோ எனக்கு
இருக்கவில்லை. அவ்வப்போது செய்து கொண்டிருக்கும் விஷயங்களை
நல்லவிதமாகச் செய்யவேண்டும், நல்ல பெயர் வாங்கவேண்டும்
என்பதுதான் எப்போதுமே எனது விருப்பமாக இருந்திருக்கிறது.
முக்கியமாக எனது தந்தையிடம் நல்ல பெயர் வாங்கவேண்டும்
என்பது மட்டுமே என் மனதில் இருந்தது. கடவுள் அருளினால்,
நான் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் சரியான பாதையில்
அமைந்திருந்தது என்றே சொல்லலாம்.
டாக்டராகவோ, இன்ஜினியராவோ மற்றும் வங்கி அதியாரியாகவோ
ஆகவேண்டும் என்ற எந்தவிதமான குறிக்கோளுடன் நான்
பணியாற்றியதில்லை. எது எப்படி வருகிறதோ, அதை அப்படியே
ஏற்றுக் கொள்வது என்ற மனநிலை உள்ளவன் நான்.
ராம - ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஒரு நல்ல
வேலையிலிருந்தபோது அதைவிட்டுவிட்டு எம்பிஏ
படிக்கவேண்டும் என்ற எண்ணம் வந்தது பற்றி....
காம - ரிலையன்ஸில் இருந்த மூன்றாண்டுகள் மிகவும்
அபாரமான மனநிறைவுள்ள அனுபவம். தொழில் ரீதியாக முழு
திருப்தி ஏற்பட்ட ஒரு காலகட்டம் அது. அதே நிலையில்
தொடர்ந்து நீடித்தால் 4, 5 ஆண்டுகளில் ஒரு விதத்
தேக்கநிலை ஏற்பட்டுவிடும் என்று எண்ணிணேன்.
முதுநிலை பட்டம் பெற்றால்தான் தொழில் ரீதியாக முன்னேற
முடியும் என்பதாலும், என்னுடன் பணியாற்றிய பலர்
முதுநிலை பட்டம் பெறுவதற்காக பல நாடுகளுக்குச்
சென்றதாலும் ஜி-மேட் தேர்வு எழுதி எம்பிஏ-வில் சேர
முடிவு செய்தேன்.
ஜி-மேட்டில் நல்ல மதிப்பெண் கிடைத்ததால், மணிலாவில்
உள்ள ஆசிய நிர்வாகக் கழகத்தலும், ஹாங்காங் சீனப்
பல்கலைக்கழகத்திலும் எனக்கு இடம் கிடைத்தது.
ஹாங்காங்கில் உள்ள சீனப் பல்கலைக்கழகத்தில் எமர்சன்
எல்க்ட்ரிக் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தின் பண உதவி
கிடைத்ததால் அங்கு சேர்ந்தேன்.
அது ஒரு அமெரிக்க நிறுவனம். ஒவ்வொரு ஆண்டிலும்
பொறியியல் பின்னணி கொண்ட ஒரு இந்திய மாணவருக்கு அவர்கள்
கல்வி உதவித் தொகை வழங்குகிறார்கள். இந்தியாவிலும்கூட
அவர்கள் இயங்கி வருகிறார்கள்.
ராம - அவர்களது கல்வி உதவியை பயன்படுத்தினால்,
அந்த நிறுவனத்திலேயே பணிபுரயவேண்டும் என்ற கட்டாயம்
எதுவும் எழவில்லையா....?
காம - அப்படி எந்த நிபந்தனையும் கிடையாது.
2000-ஆவது ஆண்டு என்பது, ஹாங்காங் பிரிட்டிஷ்
ஆட்சியிலிருந்து சீன ஆட்சிக்கு மாறிய காலக்கட்டம்.
பொருளாதாரத் தேக்க நிலை இருந்த காலம்.ஆதலால் நான்
அங்கிருந்து இந்தியா திரும்பவே விரும்பினேன்.
ராம - எம்பிஏ படித்து முடித்தவுடன் வங்கியில்
சேர்ந்தீர்களா..?
காம - இல்லை. எம்பிஏ படித்துக் கொண்டிருந்தபோது
உலக அளவில் வணிக திட்ட போட்டி ஒன்று நடைபெற்றது. பிபிஓ
கம்பெனி ஒன்று ஆரம்பிப்பதற்கான வணிக திட்டத்தை அமைத்து
போட்டியில் கலந்து கொண்டேன். அந்த போட்டியில் நான்
வெற்றியும் பெற்றேன்.
ஹாங்காங் சார்பில் அந்த போட்டியில் அமெரிக்காவில் நான்
கலந்து கொள்ள நேர்ந்தது. மூட்-கார்ப் என்ற அந்த போட்டி,
டெக்சாஸ் மாகாணத்தில் ஆஸ்டின் என்ற இடத்தில் இது
ஆண்டுதோறும் நடைபெறும். புதிய வியாபார கருத்துக்கள்
உள்ளவர்கள் அந்தந்த நாடுகளில் வெற்றிபெற்று இறுதிப்
போட்டிக்கு அமெரிக்கா செல்லவேண்டும். இப்படி திட்டம்
ஏற்கனவே தயாரித்துவிட்டதால், இந்தியாவுக்கு வந்து
பிபிஓ நிறுவனம் ஆரம்பித்து நடத்தினேன். அதன் பிறகுதான்
நான் வங்கியில் சேர்ந்தேன்.
ராம - சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் நீங்கள் ஒரு
கெளரவ பேராசிரியராக இருக்கிறீர்களே....... அந்த அனுபவம்...?
காம- எனக்கு ஆசிரியர் பணியில் நான் மிகவும்
ஆர்வம் கொண்டுள்ளேன். அந்த பல்கலைக்கழகத்தைச்
சேர்ந்தவர்கள் என்னிடம் கேட்டுக் கொண்டதால் எம்பிஏ
வகுப்பில் நான் பாடம் நடத்துகிறேன். அதோடு அங்கு
பிஹெச்டி -யும் செய்து கொண்டிருக்கிறேன்.
நிர்வாகத்துறையில் பல்வேறு பாடங்களை நான் அங்கு
மாணவர்களுக்கு சொல்லித் தருகிறேன். எல்லா துறைகளிலும்
இருப்பவர்களும் குறிப்பாக நிர்வாகத் துறையில்
இருப்பவர்கள்ஆசிரியர் பணியையும் மேற்கொண்டால், அந்தந்த
துறைகளில் புதிதுபுதிதாக உருவாகம் பல விஷயங்களை
புரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.
அதோடு மாணவர்களுடன் பழகுவதால் நாமும் இளைஞர்களாகவே
இருப்பதாகவே நினைத்துக் கொள்ள முடிகிறது. மாணவர்களும்
நிறைய கேள்விகள் கேட்பதால், நாம் தேர்ந்தெடுக்கும்
பாடத்தில் இன்னும் அதிகமாக நமது சிந்தனையைச் செலுத்த
முடிகிறது. ஆக அது எனக்கு ஒரு சுவையான அனுபவம்.
ராம - நீங்க பிஹெச்டி-யில் எந்த விஷயம் குறித்து
உங்கள் ஆராய்ச்சி உள்ளது?
காம - வங்கிப் பணிகளில் தொழில்நுட்பத்தை
பயன்படுத்துவது என்பது பற்றி ஆராய்கிறேன்., அது
தொடர்பாக 3, 4 கட்டுரைகளும் வெளியிட்டிருக்கிறேன்.
இன்னும் ஆறு மாதத்தில் பிஹெச்டி-க்கான ஆராய்ச்சி பணிகள்
முடிவுறும் என்று எதிர்பார்க்கிறேன்.
ராம- சிட்டி யூனியன் வங்கியின் இப்போதைய
வளர்ச்சிக்கு முக்கியமான காரணம் உங்களது தந்தை வி
நாராயணன் தான் என்பதில் ஐயமில்லை. அவரைப்பற்றி ஏதேனும்
சொல்ல முடியுமா..?
காம- 1904-ல் துவக்கப்பட்டது இந்த வங்கி. 100
ஆண்டுகளுக்கு மேல் தனியார் துறையில் இயங்கிவரும் ஒரே
வங்கி இதுதான் என்றால் அது மிகையாகாது.
உலக அளவில் 100 ஆண்டுகளுக்கு மேல் வெற்றிகரமாக இயங்கி
லாபப் பங்கையும் வழங்கியுள்ள ஒருசில வங்கிகளில் சிட்டி
யூனியன் வங்கியும் ஒன்று என்று பல நாடுகளைச் சேர்ந்த
முதலீட்டாளர்கள் எங்களிடம் கூறியிருக்கிறார்கள்.
துவக்கத்திலிருந்தே பலர் இந்த வங்கியை வழி நட்த்திச்
சென்றிருக்கிறார்கள். எனது தந்தை 1971-ஆம் ஆண்டு உதவி
செயலாளராக இந்த வங்கியில் சேர்ந்தார்.
1977-ல் செயலாளர் ஆனார். 1981-ல் வங்கியின் தலைவரானார்.
2004-ல் அவர் ஒரு விபத்தில் துரதிருஷ்டவசமாக காலமாகும்
வரையில் அதே பதவியில் நீடித்தார். இந்த 33 ஆண்டுகளில்
அவர் இந்த வங்கிக்காக பெரும் பணியாற்றியிருக்கிறார்.
அதற்கு முன்னதாகவே 1967-ல் ஓ ஆர் சீனிவாசன் தலைவராக
இருந்தபோதே இதை ஒரு மிகப்பெரும் நிறுவனமாக
மாற்றவேண்டும் என்று முனைப்புடன் இருந்தார். அவர்தான்
இந்த வங்கியின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தார்.
அவருக்குக் கீழேதான் எனது அப்பா வங்கிப் பயிற்சி
பெற்றார்.
அவருடைய ஆசிகளினால்தான் தம்மால் இந்த வங்கியை மேலும்
வளர்க்க முடிந்தது என்பதை என் அப்பா அடிக்கடி சொல்வார்.
அவர் அதில் சேர்ந்தபோது 25 கிளைகள் இருந்தன. இதை 130
கிளைகளாக விரிவுபடுத்தினார். அப்போது வைப்புத் தொகையும்,
கடன்களும் சேர்த்து ஐந்து கோடி ரூபாய்தான் இருந்தது.
அதை ஐயாயிரம் கோடி ரூபாயாக அவர் உயர்த்தினார். இன்று
அது 20 ஆயிரம் கோடி ரூபாயாக வளர்ந்திருக்கிறது. இன்று
இந்த வங்கிக்கு 182 கிளைகள் இருக்கின்றன.
என்னுடைய தந்தையின் வெற்றிக்கு முக்கிய காரணம், ஒரு
நிறுவனம் என்பது மனிதர்கள் உருவாக்குவது என்பதில்
அவருக்கு இருந்த திட நம்பிக்கையே. ஒவ்வொரு ஊழியர்
மீதும் கவனம் செலுத்தி அவர் இந்த நிறுவனத்தை வளர்த்தார்.
வாடிக்கையாளராக இருந்தாலும் சரி, ஊழியராக இருந்தாலும்
சரி, ஒரு வங்கிக் கணக்கிற்கான இடமாக இதை கருதாமல்
அதற்கும் மேலாக ஒரு நிலையான உறவை உருவாக்கும் அரங்கமாக
மாற்றிக் காண்பித்தார்.
இது அவருடைய மகத்தான பணி....Next Page
video |