ராமகிருஷ்ணன்: தமிழ் இலக்கியத்தில் உங்களுக்கு ஈடுபட எப்படி ஏற்பட்டது..?
சிவகுமார்: பள்ளிக்கூடத்திலேயே நான் தமிழில் நன்றாக படிக்கக்கூடிய மாணவன். மயிலை சிவமுத்து, தணிகை உலகநாதன் தமிழ்நாடு தழுவிய மாணவர் மன்ற தமிழ் தேர்வு நடத்துவாங்க. 22 பேர் முதல் வகுப்பில் தேறினோம். அதில் நானும் ஒருத்தன்.
அதோடு நாங்கள் திரைப்படம் பார்க்கத் துவங்கிய காலத்தில் பராசக்தி போன்ற படங்களுக்கு கலைஞரும் மற்றபடி ஏ பி நாகராஜன், ஏ கே வேலன் போன்றவர்கள் வசனங்களும் திரைப்படங்களுக்கு மெருகூட்டும். அந்த வசனங்கள் எல்லாம் படிக்க ஆரம்பிச்சேன். பிறகு கண்ணதாசன் பாடல் வரிகளால் ஈர்க்கப்பட்டு அவர்களுடைய பாடல்களை மனப்பாடம் செய்ய ஆரம்பித்தேன். ஒரு கால கட்டத்தில் கண்ணதாசன் கவிதைகளைவிட பாரதியார் கவிதைகள் உசத்தியாகத் தெரிந்தது. அவற்றை படிக்க ஆரம்பித்தேன். அதிலிருந்து கம்பனுக்குள்ள போனேன். கம்பன் இவர்களை எல்லாம்விட மேலானவராகத் தெரிந்தார். அப்படி படிப்படியா இலக்கியத்தில் ஈடுபாடு வளர்ந்தது.
ராம: கம்பராமாயணத்தில் உங்களை மிகவும் கவர்ந்த ஓரிரண்டு பாடல்கள்......?
சிவ: நிறைய பாடல்கள் இருக்கு. கம்பன், ராமன் அழகை எப்படி சொல்றார்னா....... காட்டுக்கு புறப்பட்டு போறாங்க. கொளுத்தும் வெயில். இவனோ நீலமேக சாமள வர்ணன். இவருடைய நீல வர்ணம் வெயிலை அப்படியே உள்வாங்கிக் கொள்கிறது. 105 டிகிரி வெயில் வந்து 95 டிகிரியாக குறைந்து போகிறது என்கிறார். அப்படிப்பட்ட ஒரு காந்தியுள்ளவன். கவர்ச்சியுள்ளவன். அழகானவன் ராமன் என்று சொல்லிவிட்டு, மனைவியோடும், இலக்குவனுடனும் இவண் போனான் என்று சொல்லும்போது....... மையிருட்டு என்றால் அது ரொம்ப கருப்பு ஒண்ணும் புரியாது. மரகதக் கல்னா ஆடாது, அசையாது. மழை மேகம்னா மழை பெய்தவுடனேயே ஓய்ந்து போகிறது. கடல் நீர் என்றால் உப்பு கரிக்கிறது. நீல வண்ணன் என்றால் இப்படி பலவகை இருக்கிறது. இதையெல்லாம் தாண்டின பேரழகன்டா நீ என்று ஒரு பாட்டில் கம்பன் சொல்கிறான்.
"வெய்யோன் ஒளி தன்மேனியில் விதிசோதியில் மறைய
பொய்யோ எனும் இடையாளோடும், இளையானோடும் போனான்
மையோ மரகதமோ மரி கடலோ, மழை முகிலோ
ஐயோ இவண் வடிவென்பதோர் அழியா அழகுடையான்" அப்படீங்கறார்.
பின்னாடி யுத்தம்னு வரும்போது கும்பகர்ணனும், விபூஷனும் எவ்வளவோ சொல்லிப் பார்க்கிறாங்க. அண்ணா உனக்கு எவ்வளவோ கீர்த்தி இருக்கு. புகழ் இருக்கு. ஊரான் பொண்டாட்டிய கொண்டு வந்து வச்சதுதான் பிரச்சினை. தயவு செய்து நீ அனுப்பிடுன்னும்போது அவன் பிடிவாதமா மறுக்கிறான்.
பெரிசா லங்கேஸ்வரன்ணு பெருமை சொல்றயே, அப்படீன்னு கும்பகர்ணன் கோவிச்சுகிட்டு ஒரு விஷயம் சொல்றான். ஒரு பாவமும் அறியாத ஒரு குற்றமும் செய்யாத ஊரான் மனைவிய கொண்டு வந்து சிறை வச்சிருக்கான். குறைவில்லாத பேரு-புகழுக்கு ஆசைப்படறான். வாய்கிழிய மானம் ரோஷத்த பத்தி பேசறான். ஈனக் காமத்துக்கு ஆசைப்படறான். மனுஷ பயலை பார்த்து நடுங்குறான். லங்கேஸ்வரா என்னடா பெருமை உனக்கு அப்படீன்னு ஒரு பாடடு சொல்றான். ஆசில் பரதாரம் அவை அம் சிறை அடைப்பேன்
மாசில் புகழ், காதல் உறுவேன் வளமைகூற
பேசுவது மானம் இடை பேணுவது காமம்
கூசுவது மானிடரை
நன்று நம் கொட்டமடா அப்படீன்னு சொல்லிட்டே போறான்.
ராம: ராஜாஜி, கல்கி, காண்டேக்கர், லாசரா துவங்கி சோ, கண்ணதாசன், வாலிவரை படித்திருக்கிறீர்கள். உங்களை மிகவும் கவர்ந்த எழுத்தாளர் யார்? ஏன்?
சிவ: அதாவதுங்க காண்டேக்கர் வந்து அசாத்தியமான மனிதர். கம்பன், துளசிதாசர் அந்த வகையில சேர்ந்தவர் காண்டேக்கர். லாசரா-ங்கிற மனிதர், அவருடைய கதையினுடைய சாரத்தைதான் ஏற்றுக் கொள்ள முடியுமே தவிர, அவருடைய கதையை மொழியில சொல்லவே முடியாது. லாசராவுடைய எழுத்துக்கள விமர்சனமே செய்ய முடியாது. கம்பனுடைய வரிகள் எப்படி தனித்துவம் வாய்ந்தவையோ, எப்படி அவற்றை பிரிக்க முடியாதோ, அதே மாதிரித்தான் லாசராவின் எழுத்துக்களும். லாசராவுடைய கதை ரெண்டு, மூணு வரியில நீங்களும் சொல்லலாம், நாணும் சொல்லலாம். அந்த மொழி அபாரமானது.
ராம: பாரதியார் பாடல்களில் உங்களை மிகவும் ஈர்த்த வரிகள்...?
சிவ: நாடகங்கள்ல நான் தொடர்ந்து நடிச்சிகிட்டு இருந்தபோது, உச்சரிப்பு ஸ்பஷ்ட்டமாக இருக்கும். நாடகங்கள் இல்லாத நாட்களில் படங்களில் நடிக்கும்போது, டப்பிங் போனோம்னா அதாவது குரல் பதிவின் நாக்கு கொஞ்சம் குழறும். அப்ப நாக்கை கூர்மைப்படுத்திக் கொள்வதற்காக நான் பாரிதியார் பாடல்களை படிப்பேன். அப்படி படிக்க படிக்க அது மனப்பாடம் அயிடுச்சி. அவருடைய எல்லா கவிதையும் சுலபமா இருக்கும். பொழிப்புரை தேவையில்லை. அவருடைய பாஞ்சாலி சபதம், பரம்பரைக் கவிஞருக்குள்ள ஆளுமையும், கம்பீரமும் நிறைந்த ஒரு கவிதை. அதபத்தி நிறைய பேசலாம். ஒரு சின்ன உதாரணம் மட்டும் சொல்றேன். எல்லாத்தையும் வச்சி இழந்தாச்சி. நாடு, நகரம், சேனை எல்லாத்தையும் வச்சிதான் இழந்திட்டான். சகலதும் வச்சி இழந்த பிறகு அஞ்சு பேரையும் வச்சி இழந்தாச்சி. கடைசியா வெற்றித் திருமகள் பாஞ்சாலியை வச்சி ஆடுறான். அத்தனையும் நீ மீட்டுக்கலாம். துரியோதனாதிகள் அத்தனை பேரையும் அடிமையாக்கலாம். பீஷ்மர் உட்பட திருதராஷ்ட்டிரர் உட்பட அத்தனை பேரையும் நீ அடிமையாக்கலாம். கடைசி வாய்ப்பு வெற்றித் திருமகள் பாஞ்சாலியை வச்சி ஆடு அப்படீன்னு சொன்னவுடனே, ஆடும்போது தலையாட்டிவிட்டான் தருமன் என்று பொங்கிப் பொங்கி அந்த பாஞ்சாலியோட பெருமையை பாரதி சொல்கிறான், " பாவியர் சபை தனிலே புகழ் பாஞ்சாலர் நாட்டினர் தவப்பயனை ஆவியில் இனியவளை உயிர்த்து அடிசுமந்து உலவி செய் அமுதை
ஓவியம் நிகர்த்தவளை அருளொளியினை, கற்பனைக்கு உயிர் அதனை
தேவியை நிலத்திருவை எங்கு தேடினும் கிடைப்பரும் திரவியத்தை
படிமிசை இசை உறவே நடை பயின்றிடும் தெய்வீக மலர்கொடியை
கடிகமழ் மின்னுருவை..................... அத மாதிரி பாரதிக்குள்ள போனா வெளிய வர முடியாது.
Part I  Part II  Part III  Part IV  Part V
|