| |
|
இந்த வார பிரபலம்.....6
|
ராம: குறைஞ்சது 150 பெண்களை தொட்டு தாலி கட்டியிருப்பீங்க......
சிவ: அதுல என்ன சந்தோஷம் உங்களுக்கு? இல்ல நீங்க கட்ட முடியலயேன்னு வருத்தப்படறீங்களா?... மந்திரம் ஓதி தாலி கட்டினேன்,
ராம:ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை பற்றி....
சிவ: எஸ் பி முத்துராமன் சார் சொன்னாரு. திரைப்படத்துறையை சேர்ந்தவங்களோட குழந்தைகளே கல்வி அறிவு இல்லாம கஷ்டப்படுது. அவங்களுக்கு எல்லாம் நீங்க உதவலாமே அப்படீன்னு பொதுப்படையா ஒரு கேள்வி கேட்டாரு. அப்ப நான் சொன்னேன். தமிழ்நாட்டு ரசிகர்கள் வந்து உலகத்திலேயே பொறுமையானவங்க. இத பாருங்க இதே காது. இதே ரெண்டு மூக்கு. இதே ரெண்டு கண்ணு. இதே வாய். இதே உதடு. கொஞ்சம் கொஞ்சம் மாறுதலா விக் வச்சிப்போம். வேற அதே முகம், அதே குரல். இந்த முகத்தோட வந்து பொறுமையா என்னுடைய 100 படத்தையும் பொறுமையா பார்த்த இந்த ரசிகப் பெருமக்களுக்கு ஏதேனும் நன்றி சொல்லனும்.
தமிழ் மக்களுக்கு ஏதேனும் நன்றி சொல்லனும்னு நினைச்சப்ப...... வயசாகப்போறவனுக்கு ஏதாவது மரியாதை பண்ணலாம். நோயாளிக்கு உதவலாம். அதைவிட ஒரு விதையை விதைச்சி செடியை நட்டு தண்ணீ உத்தினோம்னா அது பெரிய மரமாகி எத்தனை பேருக்கு உதவி பண்ணும்.?! அதற்கு இணையானது ஒரு பள்ளி மாணவனுக்கு செய்யக்கூடிய உதவி. மாணவனுக்கு உதவி பண்ணினோம்னா அவன் பரம்பரையே பெருசா வர்றதுக்கு வாய்ப்பு இருக்கு. எஸ்எஸ்எல்சி படிச்சி முதல்ல வர்ற மாணவர்களுக்கு ஆதித்தனார் பரிசு வழங்கறாங்க. அதே மாதிரி ப்ளஸ் டூ படிச்சி வர்ற மாணவர்களுக்கு 1979-ல என்னுடைய நூறாவது படம் வெளியே வந்தபோது, என்னுடைய தாயார் கரங்களால் எம்ஜிஆர் ஆசிர்வாதத்தோட சிவக்குமார் கல்வி அறக்கட்டளைய துவக்கினோம். இப்ப 29 ஆண்டுகளா பண்ணிட்டு வர்றோம். முதல்ல 25,000 ரூபாய் வங்கியில் டெபாசிட் பண்ணி, அதுல ஆயிரம் ரூபாய் முதல் பரிசு, ரெண்டாவது 750, மூன்றாவது 500 ரூபாய்ன்னு கொடுத்தோம். அதுக்கு அப்புறமா நாளாக ஆக கூட்டி கூட்டி, இப்போதைக்கு மாணவர்களுக்கு ஐம்பதாயிரம் வரைக்கும் பரிசு கொடுக்க ஆரம்பிச்சோம். சூர்யா வந்து அகரம் அறக்கட்டளை பாப்புலரான பிறகு, அதுவும் சிவகுமார் கல்வி அறக்கட்டளையும் சேர்ந்து இந்த ஆண்டு 5 லட்சம் ரூபாய் கிராமங்களில் கஷ்டப்படுகின்ற மாணவர்களை தேடிப்பிடிச்சி 30 குழந்தைகளுக்கு பங்குபோட்டு கொடுத்தோம்.
ராம:நீங்கள் பொம்மை பத்திரிகைக்காக சில ஆண்டுகளுக்கு முன் எஸ் பி பாலசுப்பிரமணியத்தை பேட்டி கண்டபோது ஆயிரம் நிலவே வா பாட்டு உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்றும், அத அடிக்கடி பாடிவேன் என்றும் கூறினீர்கள். அந்த பாட்டை கொஞ்சம் பாடுங்களேன்.
சிவ: பாட்டெல்லாம் பாடக்கூடாது. அவரோட அப்போ எடுத்த போட்டோ வை இன்னும் வச்சிருக்கேன். அதுல ஒரு விஷயம் என்னன்னா, எஸ்பிபி என்னைவிட மூணு வயசு சின்னவருன்னு நினைக்கிறேன். ரொம்ப சின்ன பையன். ஒல்லியா இருப்பான். பொம்மை ஆபிசுக்குள்ள நான் எஸ்பிபியை கட்டிப்பிடிக்கிற போட்டோ அந்த இதழில பிரசுரம் ஆகியிருக்கு. ஆனா இன்னைக்கு நான் அவனை கட்டிப்பிடிக்க முடியாது. ரொம்ப வளர்ந்துட்டாரு. உருவத்திலயும் வளர்ந்துட்டாரு.
ராம: பலவிதமான அனுபவங்கள் உங்கள் வாழ்க்கையில் இருக்கு. திரைப்படத்துறையிலும் சரி ஓவியத் துறையலும் சரி, மற்றவங்களுக்கு உதவி பண்ற தன்மையிலும் சரி. இந்த அனுபவத்தில மனுஷ வாழ்க்கைன்னா என்னன்னு நினைக்கிறீங்க?
சிவ: சகல ஜீவ ராசிகளிலும் மகத்தான பிறப்பு என்பது, மனிதப்பிறப்புத்தான். ஏன்னா, ஹெச் ராமகிருஷ்ணன் அப்படீங்கறவரு, 1975-ல சென்னையில தொலைக்காட்சி துவங்கும்போது, அந்த மனுஷன் செய்தி படிச்சிட்டிருப்பாரு. அப்ப வந்து நான் அவரை உத்துப் பார்த்திருக்கேன். குரல் ஸ்பஷ்ட்டமா உச்சரிப்பு எல்லாம் தெளிவா இருக்கும். கணீரென்ற வாசிப்பு. அந்த மனிதனை சற்று ஏறக்குறைய 30, 32 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பேன்னு நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கல. ஓரளவு அவர் பற்றி எனக்கு தெரியும். அந்த மனிதன் வந்து இங்க உட்கார்ந்துட்டு ஒரு 42 ஆண்டு திரைப்பட வாழ்க்கை, ஏழாண்டு ஓவியத் துறை வாழ்க்கை, அதுக்கு முன்னாடி வாழ்ந்த கிராமப்புற வாழ்க்கை எல்லாத்தையும் சாரா பிழிஞ்சு ஒரு ரெண்டு மணி நேரத்துல ரெக்கார்டு பண்ணுவார்ன்னா...... இந்த ரெக்கார்ட் பண்றதுக்கான விஷயத்தை மனுஷனால தானே நினைவில வச்சிக்க முடியும். மனிதப் பிறவியாலதானே அதை திரும்பச் சொல்ல முடியும். இந்த வாய்ப்பு வேறு எந்த பிறவிக்கு இருக்கு? இந்த உலகிலேயே மகத்தான மனிதப்பிறவியை கொடுத்தமைக்காக ஆண்டவனுக்கு நான் எப்பவுமே நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
ஒரு சின்ன குட்டி கதை சொல்றேன். ஒரு ராஜா என்ன பண்ணினாராம், எல்லா புலவர்களையும் கூப்பிட்டு கம்பன், ஒட்டகூத்தன், புகழேந்தி இப்படி எல்லோரையும் கூப்பிட்டு, ஐயா வண்டி வண்டியா நீங்கள் எல்லாம் எழுதிட்டீங்க. ஆனா மனுஷனுக்கு வாழ்க்கைல துன்பம் உச்சத்திற்கு வரும்போது, அவனை தற்கொலையிலிருந்து காப்பாற்றுவதற்கு சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், கம்பராமாயணம், இதெல்லாம் காப்பாத்த மாட்டேங்குது.
ஒரு மனிதனுக்கு வாழ்க்கை வெறுத்துபோய், அந்த ரெண்டு வரியை படிக்கும்போது அய்யையோ நாம தற்கொலை பண்ணிக்க நினைச்சோமே, வாழ்க்கை மகத்தானது என்று பளிச்சின்னு சொல்ற மாதிரி ரெண்டு வரியை எடுத்துக்குடுங்க. ஆயிரம் வராகன் பரிசு. என்று ராஜா அறிவித்தார்.
அவங்க போனதுக்கப்புறம் ராஜாவின் மெய்க்காப்பாளர் வந்து என்ன விஷயம்னு கேட்டான். ராஜா எல்லாத்தையும் சொன்னாரு. அவன் சிரிச்சான். இதையெல்லாம் அவங்ககிட்ட போய் கேட்கறீங்களே, படிச்சவன் பாட்டைக் கெடுத்தான், எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான். இவங்களுக்கு என்ன தெரியும் அப்படீன்னான். முக்காலமும் - கடந்தகாலம், நிகழ் காலம், வருங்காலத்தையும் உணர்ந்த மாமுனிவர்கள்தான் இதைச் சொல்ல முடியும் அப்படீன்னான்.
பிரபு, பெரிய மகாராஜா இருக்கும்போது நான் வேலைக்கு வந்து சேர்ந்தேன். வட நாட்டுலருந்து சாமியார் எல்லாம் வந்தாங்க. அவங்க பணிவிடைக்காக என்னை அனுப்பிச்சாரு. விருந்தினர் மாளிகை அரண்மனையை தாண்டி ஆத்தோரமா இருந்திச்சி. நான் காலைல எழுந்திருச்சி, வாசல் தெளிச்சி, கோலம் போட்டு தண்ணீர் பிடிச்சி வச்சி சாமியாருக்கு துணிமணி எல்லாம் துவச்சி போட்டு, மாட்டுலருந்து பால் கறந்து எல்லா பணிவிடையும் பண்ணினேன். ரொம்ப நாள் கழிச்சி சாமியார் திரும்பி போறபோது, நான் முற்றும் துறந்த முனிவன்னு நினைச்சிகிட்டு இருந்தேன். ஆனா நீ பண்ணிய பணிவிடையை பார்த்தபோது எங்க அப்பா அம்மா ஞாபகம் வந்திச்சி. நானோ ஒரு ஆண்டிப்பண்டாரம். உனக்கு குடுப்பதற்கு என்கிட்ட ஒண்ணுமில்ல அப்படீன்னு சொல்லிட்டு திரும்பிப் பார்த்தாரு.
அந்த பனை மரத்துல இருந்து ஒரு ஓலையை பிச்சிட்டு வான்னாரு. அதுல ஏதோ எழுதி, ஆபத்து வந்து சோதனையான காலம் வந்தா, இந்த ஓலையை எடுத்து படிச்சி பாரு. அதை வாங்கி வந்து நான் ஒரு சட்டிக்குள்ள வச்சிருக்கேன். பெரிய மகாராஜாவும், நீங்களும் என்ன நல்லமாதிரி வச்சிருக்கீங்க அதனால அத பார்க்குற சந்தர்ப்பம் வரல அப்படீன்னான். அடடா அத முதல எடுத்துட்டு வான்னு ராஜா சொன்னார்.
இல்லீங்க. தற்கொலை பண்ணிக்கக்கூடிய நேரத்துலதான் அத படிக்கணும்ணு சொல்லியிருக்காருன்னான்.
இல்ல அதை எடுத்துகிட்டு வான்னாரு ராஜா. அவன் அதை எடுத்திட்டு வந்தபோது, ராஜா அதை மடிச்சி மோதிரத்திற்குள் அந்த ஓலையை வச்சிட்டாரு. ஒரு ஆறு மாத இடைவெளியில பக்கத்து ஊரு ராஜா வந்து ஒரே நாள்ல அரண்மனையை கொளுத்திட்டு, மகாராணியை கொன்னுட்டு, இளவரசியை கடத்திட்டு போயிட்டான்.
ராஜா எஞ்சியிருந்த ஒரு வெள்ளைக் குதிரையை எடுத்துகிட்டு, 50,60 மைல்களுக்கு அப்பால் பறந்து போய் ஏற்காடு மலை மாதிரி ஒரு மலை உச்சியில ராஜா நிக்கறாரு. கீழே பார்த்தால் நாலாயிரம் அடி பள்ளத்தாக்கு. ஆஹா வாழ்க்கை முடிஞ்சு போச்சுன்னு நினைக்கும்போது, பார்த்தா கையில அந்த ஓலை இருந்திச்சி. அத எடுத்தாரு படிச்சாரு.
அதுல என்ன இருந்திச்சி?
மூணே மூணு வார்த்தை இருந்திச்சி
"இதுவும் கடந்து போகும்"
இதுவும் கடந்து போகுமா? இந்த ஆபத்து கடந்து போகுமா? எனக்கு இன்னொரு வாழ்க்கை இருக்கா? குதிரையைவிட்டு இறங்கினாரு. இரவு நேரம் வந்திருச்சி. குதிரையை பிடிச்சிகிட்டு கீழ போனாரு. அங்க இருந்த ஆதிவாசிகள் எல்லாம் ராஜாதான் வந்திருப்பது என்பதை தெரிந்து கொண்டு, பிரபு நீங்க உயிரோடு இருக்கீங்களா... உங்களையும் கொன்னுட்டாங்கன்னு நினைச்சோம். நீங்க எங்கயும் போகவேண்டாம்னு சொல்லி கூடவே வச்சி காப்பாத்தினாங்க. அந்த ஆதிவாசிகளுக்கு எல்லாம் ராஜா குதிரை சவாரி, போர் பயிற்சி எல்லாம் சொல்லிக் கொடுத்து அவங்க அத்தனை பேரையும் அழைச்சிட்டு வந்து, ஆக்கிரமித்த ராஜாவை வீழ்த்தி அரண்மனையை மீட்டுட்டார்.
பழையபடி பதவியேற்பு விழாவுக்கு போகும்போது, மானாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம். மேலருந்து பூ போடுறாங்க. ராஜா ஜேஜேன்னு ஊர்வலமா போயிட்டிருக்காரு. பக்கத்துல மூச்சு இறைக்கற மாதிரி ஒரு சத்தம். பார்த்தா....... அந்த மெய்க்காவலர் தாத்தா ஓடி வர்றார். பிரபு ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன். கவலை வரும்போது துன்பம் வரும்போது ஓலையைப் பார்க்கனும்ணு சொன்னேன். அதேமாதிரி ரொம்ப சந்தோஷம் வரும்போதும் ஓலையைப் பார்க்கணும்ணு முனிவர் சொல்லியிருக்காரு அப்படீன்னான்.
"இதுவும் கடந்து போகும்"
இந்த சந்தோஷமும் கடந்து போகும். இதுவும் நிலையானது இல்லை. கிரீடத்தையும், பாதுகையையும் எடுத்து வண்டியில வச்சிட்டு ராஜா வெறுங்காலோட நடந்து போனார்.
இதுலருந்து என்ன தெரியறதுன்னா.... உலகிலேயே மிக அற்புதமானது மானிட வாழ்க்கை. மையிருட்டாக இருந்தாலும் விடியலை நோக்கி விநாடி விநாடியாக நடந்து கொண்டே போகிறது.
கண்ணதாசன் சொல்றான். எடுத்து வைக்கின்ற அடிகள் எல்லாம் வழுக்குகிறது என்றால், மேற்கொண்டு அடியெடுத்து வைக்காதே. அங்கேயே நின்றுவிடு. முடிவை கடவுள் இடத்தில் விட்டுவிடு, அவர் மீது நம்பிக்கை இருந்தால். இல்லையென்றால் காலத்திடம் விட்டுவிடு. நடுக்கடலில் தத்தளிக்கும் ஆளே இல்லாத படகுகூட என்றோ ஒருநாள் ஏதோ ஒரு கரையை போய்ச் சேரும். மகனே மயங்காதே என்பார்.
அதனால மானிட வாழ்க்கையில் எத்தனை சோதனை வந்தாலும் இந்த மாதிரி ஒரு வாழ்க்கை கிடைக்கவே கிடைக்காது. இந்த மானிட வாழ்க்கை இறைவன் கொடுத்த மகத்தான வாழ்க்கை. இதை முழுமையாக வாழவேண்டும் என்று சொல்லி விடை பெறுகிறேன் வணக்கம்.
ராமகிருஷ்ணன்: மிக்க நன்றி
முற்றும்.
Part I  Part II  Part III  Part IV  Part V
|
|
|
|
|
|
|
|
|
|
|
 |
|
|
 |
|
Shopping Chennaionline
|
|
|
|
|
|