ராம: உங்கள் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை... அப்படீன்னு எதைச் சொல்லலாம்..?!
சிவ: திருப்புமுனை என்று ஒரு நாலு ஐந்தை சொல்லலாம். எந்தவித லட்சியமும் இல்லாமல், மிகக் கடினமாக படித்து வகுப்பில் நாலாவது ஐந்தாவது இடத்தை பெற்று வந்தேன். பி இ படித்து என்ஜீனியர் ஆகவேண்டும் என்ற எண்ணத்துடன் காம்போஸிட் மேத்ஸ் எடுத்து படித்து வந்தேன். அப்பதான் எங்க ஊருக்கு ஓராசிரியர் பள்ளி என்ற ஒன்றை காமராஜர் துவக்கி வைத்தார் 1956-ல். அந்த அரசுப் பள்ளிக்கு என் பள்ளியில் படித்த குமாரசாமி என்ற ஒருவர்தான் ஆசிரியராக வந்தார். அவர்தான் முதன்முதலில் "நீ வந்து ஓவியத் துறையில் நல்ல சிறப்பான திறமை இருக்கிறதே, அதை ஏன் படிக்கக்கூடாது" என்று சொன்னார். ஓவியத்திற்கு என்று படிப்பு இருக்கும் விஷயமும், ஒரு கல்லூரி இருக்கும் விஷயமும் அவர் சொல்லித்தான் தெரிந்துகொண்டேன்.
அதன்பிறகு கோயம்புத்தூருக்குச் சென்று பொறியியல் படிப்பு படிக்கவேண்டிய ஒருவன், முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டமாதிரி, சென்னை நோக்கி வந்தது ஒன்று, அதற்கு எனது ஒன்றுவிட்ட மாமா உதவி செய்தது ஒருவிஷயம். துறை மாறி ஓவியனாகி இந்தியா முழுவதும் சுற்றி ஆறு ஆண்டுகள் ஓவியம் வரைந்தது, என்னுடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை என்று சொல்லலாம்.
அவ்வளவு கஷடப்பட்டு ஓவியங்கள் எல்லாம் வரைந்த பின்னர், "நீ வந்து சின்ன தவறு பண்ணிட்ட. ஒரு 400 ஆண்டுகளுக்கு முன் இந்த ஓவியங்கள் வந்திருந்தால், சரியாக இருந்திருக்கும்". நீ வரைந்திருப்பவை எல்லாம் மறுமலர்ச்சி காலத்திய ஓவியங்கள். "1500-ஆம் ஆண்டுக்குள் நீ பிறந்திருந்தால் சரியா இருந்திருக்கும்" என்று என்னிடம் கூறியபோது நான் அதிர்ச்சியடைந்தேன்.
எந்தவொரு துறையை நேசித்து சாகும்வரை செய்யவேண்டும் என்று வந்தோமோ அந்தத் துறையைவிட்டு வேறு துறைக்கு போக வேண்டும் என்ற நிலைமை ஏற்படலாம் என்று புலம்பிக் கொண்டிருந்தபோதுதான் திரைப்படத் துறைக்கு வந்தேன். இது இரண்டாவது திருப்புமுனை.
ராம: ஒரு போர்க்களத்தின் நடுவே உங்களால் எப்படி ஒரு புத்தபிட்சுவாக இருக்க முடிந்தது?
சிவ: இதற்கு என்னுடைய பள்ளி ஆசிரியர்களுக்குத்தான் நான் முதலில் நன்றி சொல்லனும். என்னுடைய சிறு வயதிலிருந்தே, "ஆண் என்பவன் கொஞ்சம் முயன்றால் இறைவனை இறக்கிவிட்டு அங்கேபோய் உட்கார்ந்து விடலாம்" என்று அவர்கள் எனக்கு அறிவுறுத்தி தவ வலிமையினால் மிகுந்த ஆளுமை பெற முடியும் என்பதை உணர்த்தினார்கள்.
எங்களுக்கெல்லாம் விவேகானந்தர்தான் ஒரு முன்மாதிரியாக விளங்கியவர். திருமணம் வேண்டாம், காதல் வேண்டாம், ஏதேனும் சாதிக்கவேண்டும் என்ற மனோபாவத்தை எங்களுக்கு ஏற்படுத்தினார்கள். சிந்தனையே மாறிப்போவதற்கு அவர்கள்தான் அடிப்படைக் காரணம்.
ராம : எந்தவொரு சபலத்திற்கமே நீங்கள் ஆளானதில்லையா?
சிவ : அதாவது இயல்பாக எங்களுக்கு அந்த மாதிரி சூழல் இருந்தது. எப்படியென்றால், ஒரு குடிகாரன் வீட்டில் ஒரு பையன் குடிக்காமல் இருப்பது சிரமமான விஷயம். எங்கள் வீட்டை எடுத்துக் கொண்டீர்களேயானால், காபி, டீ சாப்பிடும் வழக்கம் இயல்பாக கிடையாது.
பிறகு சென்னைக்கு வரவேண்டும் என்றபோதே விவேகானந்தர் ராமகிருஷ்ணரை சொல்லி சொல்லி, நமது உடல் ஒரு மிகப்பெரிய ஒரு கருவி. இது ஒரு பெரிய வாகனம். சந்திர மண்டலத்திற்கு போகவேண்டும் என்றால் கூட இது வழியாகத்தான் செல்லவேண்டும். ஆதலால் இந்த உடலை பராமரிக்க வேண்டும்.. காப்பாற்றவேண்டும்., என்று வலியுறுத்தினார்கள்.
இதை காப்பாற்றுவதற்கு என்ன வழி என்றபோது, புகை பிடிக்கக்கூடாது, மது அருந்தக்கூடாது. முடிந்தால் புலாலை குறைத்துக் கொள்ளலாம், பிற மாதருடன் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது, சூதாடக்கூடாது இப்படி முதலிலிருந்தே இந்த முறையில் என்னை வளர்த்து விட்டார்கள். அதனால் எனக்கு பெரிய சலனங்கள் எதுவும் இல்லாமல் போய்விட்டது.
23 வயது வரைக்கும் நான் அப்படியே வாழ்ந்துவிட்டேன். திரைப்படத் துறைக்குச் செல்லும்போது இது எனக்கு ஒரு பெரிய பலமாக இருந்தது.
ஓவியக் கல்லூரியில் நான் கடைசி நான்கு,ஐந்து,ஆறு என்ற மூன்றாண்டுகளில் நாங்கள் பெண்களை உட்கார வைத்து அப்படியே ஓவியம் வரைவோம். அப்போதே நமது மனம் உறுதியாகிவிடும். உடையணியாமல் வயது வந்த ஒரு பெண் உன் முன்னால் வந்து நின்றால்கூட உன் மனதில் எந்த சலன உணர்வும் வரக்கூடாது என்ற மனக்கட்டுப்பாடு வேணும்கிற மாதிரி ஒரு பயிற்சியை நான் சிறு வயதிலேயே எடுத்துக் கொண்டு விட்டேன்.
மது தொடவேயில்லையா, புகை பிடித்ததே இல்லையா என்று நீங்கள் கேட்டீர்கள். அந்த கேளவிகளுக்கு நான் பொய் சொல்லக்கூடாது. நானும் மேஜர் சுந்தரராஜனும் ஒரு நாடகத்திற்கு போயிருந்தபோது, மேடை திடீரென உள்வாங்கி மேஜர் சுந்தரராஜன் உள்ளே போய்விட்டார். நடித்துவிட்டு திரும்பிப் பார்த்தால் மேஜரைக் காணோம்.
கை மட்டும் வெளியே இருக்கிறது. ஆள் மட்டும உள்ளே போய்விட்டார். அதாவது தொங்கிக் கொண்டிருக்கிறார்.
உடனே நாடகத்தை நிறுத்தி பாளையங்கோட்டை மருத்துவமனையில் ஸ்கேன் செய்து பார்த்தால், நல்லவேளை எதுவும் நிகழவில்லை.
என்னை பேபி பேபி என்று தான் அவர் அழைப்பார்.
அன்றிரவு அவர் என்னிடம், ஒரு விநாடி ஆகியிருந்தால் நான் செத்துப்போயிருப்பேன்லியா என்று கேட்டார்.
என்னுடைய ஆரோக்கியத்திற்காக, என்னுடைய சந்தோஷத்திற்காக ஒரு வாய் சாப்பிடவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அவருடைய நன்மைக்காக நான் அபப்டியே செய்தேன். பீடி சிகரெட்டை பொறுத்தவரையில் படங்களில் பேச வழியில்லை. வண்டிச்சக்கரம் படத்தில் படம் பூராவும் கிட்டத்தட்ட வாயில் பீடி இருக்கும். நெஞ்சுக்குள்ள காற்றை வாங்கி மூக்கு வழியா நான் விடமாட்டேன். என்னுடைய பசங்கள் சூர்யாவும், கார்த்திக்கும்கூட என்னை கிண்டல் செய்வார்கள். "உனக்கு ஒரு இழவும் தெரியாது. நீ யெல்லாம் பெரிய ஆக்டர் ஆயிட்ட" என்பார்கள்.
பீடி, சிகரெட்டையெல்லாம் உள்வாங்கி நெஞ்சுக்குள் வைத்துக் கொண்டு பிறகு மெதுவாக மூக்கு வழியாக வெளியே விடவேண்டும். அந்த பாவத்தை பண்ணக்கூடாது என்பதற்காக வாய்க்குள் வைத்துக் கொண்டு புகையை சூப்பராக வட்ட வட்டமாக வெளியே விடுவேன். இதை என் பசங்க கண்டு பிடித்துவிட்டாங்க. "நீ திருடன் ஏமாத்திக்கிட்டு இருக்க என்று அவர்கள் சொல்வார்கள். அப்படி படங்களுக்காக மட்டும்தான் நான் பிடித்திருக்கிறேன்.
விலைமாதர்களை பொறுத்தவரையில் அவர்கள் வீடுகளுக்கு போய் நான் படம் வரைஞ்சிருக்கேன். அந்த பெண்களிடம் ஊர் கதையெல்லாம் பேசி நான் படம் வரைஞ்சிருக்கேன்.
சூது என்பது ராமன் பரசு ராமனுக்காக குதிரை பந்தய மைதானத்திற்கு சூட்டிங் போயிருக்கோம். இதுதான் என்னுடைய அனுபவங்கள்.
|