| |
|
இந்த வார பிரபலம்...தொடர்ச்சி (3)
|
ராம: எம் ஜி ஆர் பற்றி நீங்க என்ன சொல்றீங்க?
சிவ:உலகத்தின் மிக உயர்ந்த குணம் என்னவென்றால், அன்பு காட்டுவது என்கிறார்கள். பிற மனிதனை நேசிப்பதைவிட உயர்ந்த விஷயம் எதுவும் பண்ண முடியாது என்று சொல்கிறார்கள். அதாவது காசு பணம் கொடுப்பது வேறு. துணி மணிகள் அளிப்பது வேறு. ஒருவரை பார்த்தவுடன் உடனடியாகச் செய்வது அன்பு செலுத்துவது. அதை செய்தவர் எம் ஜி ஆர். அவரை மிகப் பெரிய நடிகர் என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் எல்லோரையும் நேசித்த மிகப் பெரிய மனிதர். தான-தர்மம் பண்ணுவதில் அவர் என்எஸ்கே-யின் நேரடி வாரிசு.
என் எஸ் கே இவருக்கெல்லாம் குருநாதர், தான-தர்மம் பண்ணுவதில். ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன். 1941, 42-களில் எல்லாம் இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் பெரிசா இல்ல. அஷோக் குமார் படத்துல, கண்ணை நோண்டி எடுக்கக்கூடிய சேனாதிபதி கேரக்டர் செய்யச் சொல்றாங்க.. இவர் ஒரு ஆளை அனுப்பி கண்ணை நோண்ட வைக்கிறார். இப்படி ஒரு மிகச் சாதாரண கேரக்டர் செய்தவர். வால்டாக்ஸ் சாலையில் சுபாஷ் சந்திரபோஸ் ஏரியாவில் குடியிருக்கிறார். மேல ஒரு ஜிப்பா, உள்ள ஒரு முண்டா பனியன், நைலான் பெல்ட், வேஷ்டி உள்ள டிராயர் போட்டுட்டு, இரவுல வேஷடியையும், ஜப்பாவையும் தண்ணில ஊறவைச்சு சோப்பு போட்டு, காய்ஞ்ச பிறகு ஒரு சொம்பில நெருப்பைக் கொட்டி அதை வைச்சிகிட்டே இஸ்திரி பண்ணி, அந்த சட்டைய போட்டுகிட்டு, வால்டாக்ஸ் ரோடிலிருந்து நியூட்டன் ஸ்டுடியோ வரைக்கும் 7 அல்லது 8 கிலோ மீட்டர் நடந்து போவார் இல்ல பஸ்ல போவாரு.
அங்க போய் ரோல் கேட்டா, நீ ராஜகுமாரன் போல இருக்கயா. உனக்கு எப்படி ஐயா வேஷம் கொடுக்க முடியும் அப்படீன்னு கேப்பாங்க. அங்கருந்து புறப்பட்டு கோடம்பாக்கம் வருவாரு. இது வாகினி, ஏவிஎம் எல்லாம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி. அப்ப இருந்த ஸ்டூடியோவில வந்து ஏதாவது வேஷம் கேட்டா, சாரி உனக்கு வேஷம் கிடையாது அப்படீன்ம்பாங்க. இந்த மாதிரி மோசமான நம்பிக்கையில்லாத சூழ்நிலையில வாழ்ந்து கொண்டிருந்தபோது, இவரைவிட மோசமான சூழ்நிலைல ஒரு நடிகன் வந்து, அண்ணே! சாப்பிட்டு மூணுநாள் ஆச்சுன்னு சொன்னவுடனே பர்சுல பார்த்தா ஒரு பத்து ரூபா இருக்கும். இவரு காலைல எதுவும் சாப்பிடல. மதியம் உணவு சாப்பிடவேண்டும். அந்த பத்து ரூபாயில் அந்த நண்பருக்கு மூன்று ரூபாய் தானம் பண்ணுவாராம்.
தானம் என்பது அவருக்கு அன்னை சத்யபாமாவின் தாய்பாலிலிருந்து வந்திருக்கும். இப்ப உங்க கையில ஒரு ரூபாய் இருக்கும்போது, பத்து பைசா தானம் பண்ண மனசு வரலைன்னா, நீ ஒரு லட்சம் ரூபாய் வைச்சிருக்கும்போது நூறு ரூபாய் தானம் பண்ணவே மாட்ட. இருக்கற காச தானம் பண்ணக்கூடிய மனோபாவம் வேணும். அந்த மனோபாவம் எம்ஜிஆர்-கிட்ட இருந்தது.
எம்ஜிஆரை பற்றி எப்படி கடுமையாக விமர்சனம் பண்ணினாலும், அவருடைய கொடைத்தன்மையை யாருமே விமர்சித்ததில்லை.
என்னுடைய அனுபவத்தை சொல்கிறேன். முதன் முதலில் சந்தித்தபோது, சரியாஸனம் கொடுத்து என்னையும் பக்கத்தில் உட்கார வைத்தார். பேசும்போது நீயும் சின்ன வயசில் தந்தையை இழந்து, தாயாரால் வளர்க்கப்பட்டவன் என்று கேள்விப்பட்டேன். நானும் அப்படித்தான் என்றார். எங்க அம்மா ரொம்ப பாசத்தோட வளர்த்தாங்க. நானும் எம்ஜி சக்கரபாணியும் ஒரு தடவை பர்மாவுக்கு போலாம்னு கப்பலில் புறப்பட்டபோது, எங்கம்மா கடற்கரையில் நின்று கொண்டு அழதாங்க. நாங்க அழதோம், அவங்க அழதாங்க. இப்படியெல்லாம் நிறைய துன்பப் பட்டிருக்கோம். அப்படீன்னு சொன்னாரு.
நான் வந்து கொஞ்சம் குறும்போட எங்கம்மா அப்படி எல்லாம் அழ மாட்டாங்க சார்னு சொன்னேன். என்னையா என்பது போன்று ஒரு பார்வை பார்த்தார்? பொதுவா எங்கம்மா தன்னுடைய துன்பத்தை வெளிக் காட்ட மாட்டாங்க. கோழி வந்து பார்த்தீங்கன்னா அடகாத்து குஞ்சு பொறிச்சுட்டு நேரா போனவுடனே குப்பைல பறிச்சுகிட்டு சாப்பிடற மாதிரி பாவ்லா பண்ணி அந்த குஞ்சுகள சாப்பிட பழகிக் கொடுக்கும்.
மேல ஏதானும் கழுகு பறந்ததுன்னா, கொகோ கொகோ-ன்னு சத்தம் கொடுத்து எல்லா குஞ்சுகளையும் தன்னுடைய இறகுகளுக்குள்ள வச்சிக்கும். அந்த கழுகு சுத்தமா போன பிறகுதான் இறகிலிருந்து குஞ்சுகளை வெளியே விடும். எதுக்கு இறகை விரிச்சதுன்னு அந்த குஞ்சுகளுக்கு தெரியாது. அந்த மாதிரி எங்கம்மா வந்து எனக்கு கஷ்டங்களே தெரியாம வளர்த்தாங்க.
அப்ப எம்ஜிஆர் சொன்னாரு, "எங்க அம்மா சொல்வாங்க, ஒரு மனிதன் ஆண்மகன் வீரத்தைக் காட்டவேண்டும் என்றால், ஒரு சிங்கத்துக்கிட்டயும், புலிகிட்டயும்தான் வீரத்தை காட்டவேண்டுமே தவிர, அடிச்சாலும், உதைச்சாலும் 50 மைலுக்கு அப்பாலும் தள்ளிட்டு வந்தாலும், திரும்ப ஓடிவந்து உன் காலையே சுற்றிவரும் நாய்கிட்ட வீரத்தை காட்டகூடாது" என்று எங்கம்மா சொல்வாங்க அப்படீன்னு எம்ஜிஆர் சொன்னாரு.
நான் சொன்னேன். எங்கம்மா தத்துவம் எல்லாம் சொல்ல மாட்டாங்க. நான் படிச்சிகிட்டு இருக்கும்போது ஒரு தந்தி வந்திச்சி. "மதர் சீரியஸ் ஸ்டார்ட் இம்மீடியட்லீ" அப்படீன்னு ஒரு தந்தி வந்திச்சி. இருக்கற உலகத்துல அம்மா ஒருவர்தான் இருக்கிறார். அம்மாவும் போய்விட்டால் வாழ்க்கைல என்ன இருக்குது? நான் கடவுள வேண்டிக்கிட்டேன்.
ரயில்ல ஏறி உட்கார்ந்து வந்து கொண்டிருந்தேன். பேசின் பிரிட்ஜ் தாண்டும்போது உயிர் போகலாம். அரக்கோணம் தாண்டும்போது உயிர் போகலாம். சேலம் தாண்டும்போது உயிர்போகலாம், ஆனால் உயிரோட மட்டும் அம்மா இருந்துட்டா...! உலகமே அழிஞ்சாலும் நான் கடவுளை நம்புவேன். அப்படீன்ற முடிவோட நான் போனேன். அம்மா உயிரோட இருந்தாங்க. நான் பார்த்தேன். "இல்லப்பா நேத்து பருத்திக்காட்டுல வேலை செய்யும்போது கொஞ்சம் தலை சுத்தற மாதிரி இருந்து மயக்கமா விழுந்திட்டேன். என்னாச்சு ஏதாச்சுன்னு சுதாரிக்கறதுக்குள்ல இவங்க எல்லாம் தந்தி அடிச்சிட்டாங்க. எனக்கு நினைவு இருந்திருந்தால் நான் தந்தி அடிச்சிருக்க மாட்டேன். அப்படீன்னு சொன்னாங்க.
இன்னொரு மேட்டர் சொல்றேன் அப்படீன்னு நான் எம்ஜிஆர்-கிட்ட சொன்னேன். ஒரு தடவை நான் தில்லிக்கு கல்சுரல் டூர் போயிகிட்டு இருந்தேன். அப்ப அம்மா தாம்பு கயிறு எடுக்கறதுக்காக பரண் மேல ஏறினபோது சிலிப்பாகி கீழ விழுந்துட்டாங்க. கை எலும்பு ஒடிஞ்சு போச்சு. ஆறு மாசம் எனக்கு தகவல் கொடுக்காம, தொட்டில் போட்டு பாலக்காட்டுலர்ந்து மீன் எண்ணெய் கொண்டு வரச்சொல்லி, தொட்டில்ல கைய வைச்சிகிட்டு விடிய விடிய ஆட்டிகிட்டு இருப்பாங்களாம். ஒரே ஒரு வார்த்தை. இந்த கை ஒடிஞ்ச விஷயத்தை யாரேனும், மெட்ராஸ்ல என் பையன்கிட்ட தெரியப்படுத்தினீங்கன்னா, இங்க பக்கத்துல இருக்கற பாலுங்கிணத்துல விழுந்து செத்துபோயிறுவேன். அவன் கஷ்டப்பட்டு படிக்கப் போயிருக்கான். என் துன்பம் எல்லாம் அவனுக்கு தெரியக்கூடாது என்று சொல்லி அப்படியெல்லாம் என்னை வளர்த்தாங்க. அப்படீன்னு எம்ஜீஆர் கிட்ட சொன்னேன்.
ஷாக் ஆயிட்டாரு. அப்படிப்பட்ட ஆள் வந்து பொது மருத்துவமனையில் படுத்திருக்கும்போது தமிழ்நாடே வருத்தத்தில தள்ளாடிக்கிட்டு இருந்தபோது நான் மூணு முறை முயற்சி பண்ணி அவரை பார்க்க முடியல. நாலாவது முயற்சியில ஆர் எம் வீரப்பன் என்னை பார்க்கறதுக்கு அனுமதி அளித்தார். அண்ணே சம்பவம் நடந்தபோது நான் ஊருக்கு போயிருந்தேன். அதான் முன்னாடியே வர முடியல அப்படீன்னு சொன்னேன்.
"ஊருக்கு போயிருந்தியா? அம்மா... அம்மா செளக்கியமா..? அப்படின்னு விசாரித்தார். அந்த மனிதன் மூன்று குண்டு பாய்ந்து செத்துப் பிழைத்திருக்கிறார். எத்தனையோ சம்பவங்கள் நடந்துவிட்டன. அப்படியும், எங்கம்மாவை நினைவில் வைத்துக் கொண்டு கேட்கிறார் என்றால், அப்படியொரு தாய்ப்பற்று எம்ஜிஆருக்கு உண்டு.
ராம: அதே மாதிரி உங்க அம்மாவை வரவேற்பதற்காக முதலமைச்சர் அறையிலிருந்து எம் ஜி ஆர் ஓடோ டி கீழே இறங்கி...............
சிவ: எங்க அம்மா எந்த நடிகரையும் பார்க்கனும் ஆசைப்பட மாட்டாங்க. அன்னைக்கின்னு அவங்க ஜொரத்துல படுத்திருந்தாங்க. தூத்துக்குடியில ஒரு தியேட்டர் எரிஞ்சு போச்சு. அதுக்காக ஒரு நன்கொடை தரலாம்னு சொன்னபோது, எங்க வீட்டுக்கு பின்னாடிதான் எம்ஜிஆர் ஆபீஸ் இருந்தது. நான் போன் பண்ணி கேட்டேன். நீ வாப்பா. கோட்டைக்கு வா அப்படீன்னு சொன்னாங்க.
நான் அம்மாவிடம் சும்மா சொல்லி பார்த்தேன். எம்ஜிஆரை பார்க்க போறேன் வர்றீயான்னு கேட்டேன். ஜொரத்துல படுத்திருந்த அந்த பொம்பள, கண நேரத்தில ரெடியாயிடுத்து.
புரோட்டோ கால் கவனிக்க வேண்டிய முதலமைச்சர், அம்மா வர்றாங்கன்னு தெரிஞ்சவுடனே, அந்த மனுஷன், முதல் மாடியிலருந்து வேகவேகமா கீழ ஓடிவந்து கார் கதவுகளை திறந்து விட்டு, அம்மாவோட மேல ஏறிப்போகும் போது, இந்த ஆர்டர்லி போற மாதிரி பின்பக்கத்தை அம்மாவிடம் காண்பிக்கக்கூடாது என்று அவர் அம்மாவுக்கு முன்னாடி அம்மாவை பார்த்தபடியே, படிகளை பின்னோக்கி ஏறிக் கொண்டிருந்தார். அம்மாவை ஒரு நாற்காலி போட்டு உட்கார வைத்துவிட்டு பிறகு உட்கார்ந்தார். அப்படி யொரு மரியாதை அம்மாவிடம் காட்டுவார் அவர்.
(விமானத்தில் செல்லும்போது ஜெமினி கணேசன் கைரேகை பார்த்து வழங்கிய அறிவுரை, இயக்குநர் ஸ்ரீதரிடம் டயலாக் ஒப்பித்தச் சம்பவம், கலைஞர் கருணாநிதி, செல்வி ஜெயலலிதா, கமல், ரஜினி பற்றிய கருத்துக்கள், சிவாஜி பெண் பார்த்த சம்பவம், இளமையின் ரகசியம், இலக்கிய ஈடுபாடு, ஓவியக் கல்லூரி அனுபவம் இப்படி பல விஷயங்கள் பற்றி பதில் கூறுகிறார் அடுத்த பகுதியில்)...............தொடரும்.
Part I   Part II
First page 1 2 Second Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
 |
|
|
 |
|
Shopping Chennaionline
|
|
|
|
|
|