ராம: கலைஞர் கருணாநிதியோட சிறப்பு என்னன்னு நீங்க நினைக்கிறீங்க?
சிவ: கலைஞருக்கு ........ அவருக்கு போர் குணம் சார். போர் குணம்தான் அவரை இன்னிக்கு வரைக்கும் காப்பாத்தறது. கில்லர் இன்ஸ்டிங்ட் என்று சொல்லுவார்களே அதுதான். அந்த வெறி. இந்த வயசுலயும் அவருக்கு அந்த இயல்பு இருக்கு. இரண்டாவது... அவருக்கு உள்ள தமிழ் பற்று. மூன்றாவது அவருக்குள்ள கடுமையான உழைப்பு. நாலாவது நினைவாற்றல். இதுதான் சார் அவரை இந்த விநாடிவரைக்கும் காப்பாத்தறது.
ராம: செல்வி ஜெயலலிதாவிடம்....
சிவ: அதாவதுங்க... அற்புதமான ஒரு குடும்பப் பின்னணி, அவருடைய தந்தை, தாயாருடன் இருந்து, சித்தி சகோதர-கசோதரிகள் எல்லோரும் ஒரே குடும்பமாக வாழக்கூடிய சூழல் இருந்திருக்குமேயானால், அந்த மாதிரி ஒரு பாக்யசாலியை பார்த்திருக்கவே முடியாது. அதாவது ரொம்பத் துணிச்சலான ஒரு பெண்மனி.
இந்திராகாந்தியின் துணிச்சலைப் பற்றி ப்ளிட்ஸ் பத்திரிகை ஆசிரியர் கரஞ்சியா எழுதும்போது, "நேரு பெண்மை குணம் உள்ளவர். இந்திரா காந்தி ஆண்மை குணம் உள்ளவர்" என்று 1962-63 ஆம் ஆண்டு வாக்கில் எழுதியிருக்கிறார்.
அந்த மாதிரி பார்த்தோம்னா.... செல்வி ஜெயலலிதா ஆங்கிலம் அறிவு நல்ல உள்ளவங்க. சிக்கிரம் கிரகிக்கக்கூடிய தன்மை உள்ளவங்க. சீக்கிரம் முடிவு எடுக்கக்கூடியவங்க. இன்னொருத்தரை பற்றி வொர்ரி பண்ண மாட்டாங்க. முடிவெடுத்தா உடனடியாக செஞ்சி முடிக்கணும்னு நினைக்கக்கூடியவங்க. சரியான ஒரு குடும்பப் பின்புலம் இருந்திருந்தா... அவர்கள் பல படிகள் அரசியலில் பெரிய அளவில் தொடக்கூடியவங்க.
ராம: கலை உலக பீஷ்மர் என்று நீங்கள் யாரை ஏன் குறிப்பிடுவீங்க.
சிவ: ஒவ்வொரு கால கட்டத்துலயும் ஒவ்வொரு பீஷ்மர் இருப்பாங்க. எஸ் எஸ் வாசன் அவருடைய காலத்தில்... அதேபோல ஏ வி எம் செட்டியார். நீண்ட காலம் அதிகப்படியா பணியாற்றிய, கலைத் துறைக்காக வருத்திக் கொண்ட அவருடைய மனைவி என்று சொன்னால்.... கலைத் துறையைச் சொல்லவேண்டும்., அப்படிச் சொல்லக்கூடிய ஒரு ஆள் கே பாலச்சந்தர் என்று நினைக்கிறேன்.
அவரு மாதிரி வித்தியாசமான பாத்திரப் படைப்பு கொடுத்தவர். 35, 40 வருஷத்துக்கு மேல இரவு-பகலா ஒரு துறையை பற்றியே சிந்திக்கும் மற்றொருவரை பார்க்க முடியாது.
ராம: கமல்-ரஜினி பற்றி உங்கள் கணிப்பு..............
சிவ: அதாவது ரஜினி வந்து சார் மிக எளிமையான மனிதன் சார். அவரு பார்த்தா மேலோட்டமா தெரியுது. அவரை சீக்கிரமா யாரும் அசைக்க முடியாது. அவரு ஒரு முடிவு எடுத்தாருன்னா மாத்தமாட்டாரு. போலித்தனம் இல்லாத ஒரு மனிதர். குணத்தின் அடிப்படையில் அவர் யாருக்கும் தீங்கு இழைக்கக்கூடாது என்று நினைக்கக்கூடிய ஒரு அற்புதமான மனிதர்.
நடிப்புத் துறையில அவருக்கு கிடைச்ச அந்த புகழ் என்பது, உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருந்தால்..... அது இறைவனுடைய அருள் என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால் அவர் இரண்டு அடி எடுத்து வைத்தால், பத்து அடி தாண்டறார். அந்த மாதிரி அவரது வாழ்க்கை அமைந்திருக்கிறது.
கமல் எப்படீன்னா.... எங்கள் தலைமுறையில் நடிகன் அழகாக இருக்கவேண்டும். நடனம் தெரியணும், சண்டை போடத் தெரியணும், தமிழ் அழககாக பேசத் தெரியணும். டிரடிஷனலாக அதாவது பாரம்பரிய நெறிகள் படி அந்த வரிசையில் வந்த கடைசி நடிகர் என்று சொல்லலாம். மேடை நாடகங்களிலும் நடித்திருக்கிறார். நாங்களும் நாடகங்கள் நடத்தியிருக்கோம்.
இப்ப சூர்யா, அஜித், விஜய் போன்றவங்கெல்லாம் நாடக மேடைக்கு போனவங்க இல்ல. ஆக கமலுக்கு நாடக அனுபவம் உண்டு. திரைப்படங்களிலும் நீண்ட அனுபவம் உள்ளவர். அவருக்கு பாடத் தெரியும், கதை வசனம் எழுதத் தெரியும். படம் தயாரிக்கத் தெரியும். அவரே பிரமாதமாக நடனம் ஆடுவார். பைட் பண்ணுவாரு. அப்படி சகலமும் தெரிந்த... சிவாஜி வந்து நடிப்பில் அவருடைய எல்லையை தொட முடியாது என்றால்கூட... கமல் என்பவர், சிவாஜி அறியாத சில துறைகளிலும், அவர் கால் பதிக்காத சில துறைகளிலும் அதாவது தயாரிப்பிலும், பட இயக்கத்திலும், பாடல்கள் பாடுவதிலும், கதை வசனம் எழுதுவதிலும் அந்த மாதிரி பல்-கலைக் கலைஞனாக கமல் எனக்குத் தோன்றுகிறார்.
ராம: இது "ராஜபாட்டை அல்ல" என்று நீங்கள் உங்கள் வாழ்க்கை பாதையை நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அப்படியென்றால் அது என்ன பாதை...?
சிவ: இது ஒரு எளிய பையனுங்க. யானைகளும், தேர்களும், ராஜாக்களும் போகக்கூடிய ராஜ வீதி அல்ல. இது ஒரு ஒற்றையடிப் பாதை.
பள்ளிக்கூட வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி இல்லாத... கழிப்பிட வசதி இல்லாத ஒரு சின்ன ஊர்ல புறந்த ஒரு சாதாரண ஏழைக்குடும்பத்து பையன். அவன் நடந்து வந்தது பாதையிலேயே அல்ல. அவன் பாதம் பட்டு அதனால் ஏற்பட்ட பாதையில் நடந்து வந்தவன்.
அந்த புத்தகத்தில் என்னுடைய வாழ்க்கை வரலாற்றை சுருக்கி விட்டு, எண்பது சதவீதம்வரை திரைப்படத் துறையைச் சேர்ந்த ஜாம்பவான்களை பற்றி அதிகமாகச் சொல்லும் ஒருநூல். என்னைப் பற்றி ஒரு நூலிழை போல, ஒரு நார் போல இருபது சதவீதம்தான் இருக்கும்.
Part I  Part II  Part III
|