தமிழ்
Astrology
Classifieds
Cricket
Movies
TV Room
Education
Health
Hotels
IT
Maps
BSE/NSE Live
Music
News
City 360
Shopping
C-Digest
Videos
Air Fares
Friendship
Jobs
Kalyanam
Property
Download Songs
  தமிழ்
 in     
 
 
 
செம்மங்குடி நேர்காணல்
--  
(2001-ஆம் ஆண்டு செம்மங்குடியுடன் கண்ட பேட்டி, இதுவரை வெளிவராத பல சுவையான விவரங்களுடன்.)

கேள்வி : உங்கள் வாழ்க்கையை சங்கீதத்திற்காகவே அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறீர்கள். வேறு எந்தத் துறையிலும் உங்களுக்கு ஆர்வம் இல்லையா?

பதில் : எப்போதுமே ஆர்வம் இருந்ததும் இல்லை. இப்போது இருந்தாலும் நான் வேறு எந்தத் துறையிலும் எதுவும் செய்யவும் முடியாது. ராட்டை நூற்பேன், அந்த நூலை திருப்பூருக்கு அனுப்பி, துணி நெய்து அதைத்தான் நான் கட்டிக் கொள்வேன். ஒரு காலத்தில் நன்றாக, நிறைய நூற்பேன். இப்போது முடியவில்லை. இப்போது என் வயது 92. தினந்தோறும் நூல் நூற்க முடியவில்லை. இருந்தாலும் காந்திஜி பிறந்த நாள், நினைவு நாள் போன்ற நாட்களில் இப்போதும் நூற்கிறேன். அந்த காலத்துல நான் நூற்ற நூலினால் செய்த ஆடைகளை காஞ்சி பராமாச்சாரியாருக்கம், ராஜாஜிக்கும் கொடுப்பேன். எனக்கென்று கொஞ்சம் வைத்துக் கொள்வேன். இதுதான் எனக்கு தெரிந்த இரண்டாவது வித்தை.

கேள்வி : ஏன் வேறு எந்த ஆர்வமும் உங்களுக்கு சின்ன வயதில் இருக்கவில்லை?

பதில் : எங்கள் குடும்பம் ஒரு சங்கீதக் குடும்பம். வயலின் கலைஞர் திருக்கோடிகாவல் கிருஷ்ணய்யர் என்னுடைய மாமா. எனக்கு மாமா வீட்டு சொத்து சங்கீதம்.

கேள்வி : அந்த காலத்து சங்கீதம்......

பதில் : பாட்டு சொல்லிக் கொள்வதற்கு நிறைய சிரமம் இருந்தது. குருகுலவாசம்தான். குருவின் வீட்டில் போய் நாம் இருக்கவேண்டும். சாப்பாட்டுக்கு வழி இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். குருவுக்கு பணிவிடை செய்யவேண்டும். அதனால் எல்லோரும் போக மாட்டார்கள். இதையெல்லாம் தாண்டி பெரிய நிலையை எட்டவேண்டும் என்று எண்ணுவோர்தான் போவார்கள். அதனால் அதிகமான ஆட்கள் இருக்கவில்லை. நான் பன்னிரெண்டு வருஷம் குருகுல வாசம் இருந்தேன், எட்டு வயதிலிருந்து.

கேள்வி : நீங்கள் ஏன் வயலின் கற்றுக் கொள்ளவில்லை?

பதில் : என்னுடைய அண்ணா செம்மங்குடி நாராயணசாமி ஐயர் பெரிய வயலினிஸ்ட். அப்போது என்னுடைய சாரீரம் நன்றாக இருந்தது. அதனால பாட்டையே வைத்துக் கொண்டுவிட்டேன். அதற்கு பிறகு சாரீரம் மகரக் கட்டு வந்து உடைந்து கொஞ்சம் சிரமப்பட்டேன். அதிலிருந்தெல்லாம் தேறி, இப்போது ஒரு பாடகர் என்று உலகத்தார் ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள். பகவானுடைய அனுகிரஹகமும் குருநாதர்களின் அனுக்கிரஹமும் எனக்கு கிடைத்தது.

கேள்வி : நீங்கள் குருவின் பாணியை பின்பற்றினீர்களா? அல்லது .......

பதில் : அதை சொல்ல முடியாது. குருவுக்கு, அவரது சாரீரம் என்னென்ன பேசுமோ அதையெல்லாம் பாடினார். குருநாதருடைய வழியில என்னுடைய நிலைமைக்கு தகுந்தபடி, சாரீரத்தினுடைய தன்மைக்கு ஏற்ப, நான் பாடுகிறேன். அவர்கள் எல்லாம் இஷ்டப்படி வெளுத்து வாங்கினார்கள். குருவையே காப்பியடிக்க முடியாது. காப்பியடித்தாலும் நன்றாக இருக்காது. அவர்களை பரிகாசம் செய்வதுபோலதான் இருக்கும். அது அவ்வளவு சுகமாக வராது. பரிகாசம் என்பதற்கு, வேறு எனக்கு எந்த வார்த்தையும் புலப்படல. அவர்கள் சொல்லிக் கொடுத்த வழியில் பிசகாமல் பாடவேண்டும்.

கேள்வி : சங்கீதத்தினாலேயே குடும்பத்தை பராமரிக்க முடிந்ததா?

பதில் : நான் சம்பாதிப்பதற்காக பாட்டுக் கற்றுக் கொள்ளவில்லை. கற்றுக் கொண்ட பிறகு சம்பாதித்யத்திற்கு அவர்கள் என்னை அழைத்துக் கொண்டார்கள்.

கேள்வி : உங்கள் திருவிதாங்கூர் அனுபவம்....

பதில் : நான் அங்கு ஆஸ்தான வித்வான் ஆனது 1939. நான், ஜி என் பாலசுப்பிரமணியம், ராஜ மாணிக்கம் பிள்ளை, பாபா வெங்கட்ராமையா, பாலாக்காட்டு மணி ஐயர், முசிறி சுப்பிரமணிய ஐயர், தஞ்சாவூர் வைத்தியநாத ஐயர், ஆலத்தூர் சகோதரர்கள், வயலின் கோவிந்தராஜ பிள்ளை, மிருதங்கம் பழனி சுப்பிரமணிய பிள்ளை, திருவிடை மருதூர் வீருசாமி பிள்ளை - நாங்கள் எல்லோரும் ஆஸ்தான வித்வான் ஆனோம். ஆனால் முதலில் நானும், ஜிஎன்பி-யும்தான். 1940-ல் சுவாதி திருநாள் கீர்த்தனைகளை எல்லாம் பாகுபாடு செய்து, பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று விரும்பினோம். அப்போது 1939-லேயே காயகசிகாமணி ஹாகேச நல்லூர் முத்தையா பாகவதர் கீர்த்தனைகளை எல்லாம் தேடி எடுத்து ஒழுங்குபடுத்தினார்.

ஹெச். ராமகிருஷ்ணன்

Published on 11th Dec, 2007


Recommend this page

Mail us your feedback

 
மேலும்
 

Copyright © 2009, Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Phone: 91-44- 420 24601; 420 71942; 420 71943 - cibs@chennaionline.com - Copyright and Disclaimer - Privacy Policy
Pay Per Click Ads by pay per click advertising by Kontera