தமிழ்
Astrology
Classifieds
Cricket
Movies
TV Room
Education
Health
Hotels
IT
Maps
BSE/NSE Live
Music
News
City 360
Shopping
e-paper
Videos
Air Fares
Friendship
Jobs
Kalyanam
Property
Download Songs
  தமிழ்
 in     
 
 
 
செம்மங்குடி..தொடர்-2 நேர்காணல்
--  

கேள்வி : சுவாதி திருநாள் அகாடமியில் உங்கள் பணி எப்படி இருந்தது?

பதில் தொடர்கிறது: அவர் தேடிவைத்த பாடல்களை எடுத்து பங்கீடு செய்து பிரச்சாரம் செய்வதற்காக என்னை அழைத்தார்கள். 1940-லிருந்து நான்  திருவனந்தபுரத்தில்தான் இருந்தேன். அதற்கு முன் கும்பகோணம். கும்பகோணத்திலிருந்து 18 மைல் தொலைவில்தான் எங்க ஊர். கும்பகோணத்திற்கு  முன் திருவிடைமருதூரில் குருகுலவாசம். முதன்முதலில் கும்பகோணம் நாகேஸ்வர சுவாமி கோவிலில் பாடினேன். 1977-ல் அகில இந்திய காங்கிரஸ மகாசபை சென்னையில் கூடியது. அதில் இசைக்கு என்று ஒரு தனி பிரிவு இருந்தது. அதில் நான் பாடினேன். என்னுடைய சங்கீதத்திற்கும் மியூசிக் அகாடமிக்கும் ஒரே வயசு.

கேள்வி : சுவாதி திருநாள் அகாடமியில் உங்கள் பணி எப்படி இருந்தது?

பதில் : முன்னதாகவே ரங்கநாத ஐயர் என்று ஒருவர் கீர்த்தனைகளை எல்லாம் ஓரளவுக்கு ஸ்வரப்படுத்தி போட்டிருந்தார். அதையெல்லாம் மீண்டும் பண்படுத்தித்தான் போடவேண்டியிருந்தது. எல்லோரும் பாடும்படியான அளவுக்கு பண்ணி, அப்போது வெளிவந்து கொண்டிருந்த சுதேசமித்ரன் பத்திரிகையின் வார இதழில் வாராவாராம் ஒவ்வொரு கீர்த்தனையாக நான் போட்டுக் கொண்டு வந்தேன். அப்படி பரிச்சாரம் செய்தோம். ஆஸ்தான வித்வான்களையும் அவர்கள் போட்டுவிட்டார்களே! ஆஸ்தான வித்வான்கள் நவராத்ரியின்போது ஒருநாள் நவராத்ரி மண்டபத்தில் பாடவேண்டும். அதைத் தவிர, அரண்மனையில் நிகழ்ச்சிகளுக்கு எப்போதெல்லாம் அழைக்கிறார்களோ அப்போதெல்லாம் பாடவேண்டும். அந்த காலத்தில் சமஸ்தானங்கள எல்லாம் நல்ல நிலையில் இருந்தன. திருவிதாங்கூர் சமஸ்தானத்திலும், பிறகு கேரளம் உதித்த பிறகுமாக நான் மொத்தம் 23 ஆண்டுகள் அங்கே இருந்தேன். மத்திய அரசின் ஆல் இந்தியா ரேடியோவில் மூன்றாண்டுகள் தலைமை தயாரிப்பாளராக இருந்தேன். அந்த பதவி அப்போது தில்லியில்தான் இருந்தது. நான் தில்லி வரமுடியாது என்று கூறியதால், அந்த பதவியை சென்னைக்கு மாற்றினார்கள். அது 1957-ஆம் ஆண்டு. மூன்றாண்டுகளுக்கு பிறகும் நான் இங்கே நீடிக்கவேண்டும் என்று அப்போதைய மத்திய அமைச்சர் கேட்டுக்கொண்டார். நான் முடியாது என்று கூறிவிட்டேன். ஏனென்றால் என்னால் அளவுக்கு மேல் அபஸ்வரத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை. ரேடியோவில் பாடுவதற்காக ஏராளமானவர்கள் வருவார்கள். அவர்களை தெரிவு செய்யவேண்டும். இதைத் தவிர, சங்கீத சம்மேளனங்கள் அமைப்பதும் என்னுடைய வேலையாக இருந்தது.

கேள்வி : அப்போது சங்கீதத்தில் அபஸ்வரங்கள் அதிகமோ?
பதில் : எப்போதுமே உண்டு. ராகுகாலம், தியாஜ்யம் போன்றதுதான். நல்ல நாளாக பார்த்தாலும் ராகுகாலம் உண்டு. நல்லதும் நிறைய இருந்தது. எல்லோருமே நன்றாக பாடிவிட முடியாது. அதற்கு குரு அனுக்கிரஹம் வேண்டும். அந்த காலம் பொன்னான காலம். அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர், செம்பை வைத்தியநாத பாகவதர், ராம பாகவதர், ராஜரத்னம் பிள்ளை, வீருசாமி பிள்ளை, கோவிந்தசாமி பிள்ளை,  ராஜமாணிக்கம் பிள்ளை, பாப்பா வெங்கட்ராமையா, செளடையா, த்வாரம் வெங்கடசாமி நாயுடு, அழக நம்பி பிள்ளை இப்படி நிறைய பேர் இருந்தார்கள்.

கேள்வி : இப்போது இந்த அளவுக்கு இருக்கிறார்களா?

பதில் : நன்றாக பாடுவோர் நிறைய இருக்கிறார்கள். ரசிகர்கள் பெருகிவிட்டார்கள். அவர்களுடைய அபிப்பிராயமும் அதிகரித்து விட்டது. கேட்டுகேட்டு அவர்களால் நல்லதை தெரிந்தெடுக்க முடிகிறது. பாடகர்களை பொறுத்தவரையில், எண்ணிக்கையில் குறைவாக இருந்தபோது ஒவ்வொர ிகரத்தில் இருந்தார்கள். இன்றைக்கு நிறையபேர் இருப்பதால், பரவலாகிவிட்டார்கள். அதனால் யார் நன்றாக பாடுகிறார்கள்? யார் அதைவிட நன்றாக பாடுகிறார்கள்? என்று கூறுவது கடினம். ஒரு காலத்தில் சென்னையில் பெரிய டாக்டர் என்றால், டாக்டர் ரங்காச்சாரி. அப்படி ஒரு சிலர்தான இருந்தார்கள். இன்று எத்தனை பெரிய டாக்டர்கள் இருக்கிறார்கள். அப்படித்தான் சங்கீதத்திலும். நிறைய வளர்ந்திருக்கிறது. யார் அதிகம் உயர்ந்தவர்கள் என்பதை கண்டறிய, முடியவில்லை.

கேள்வி : இப்போதெல்லாம் குருகுலவாசம் கிடையாதே ?

பதில் : நடுவில் கொஞ்சகாலம் சிஷ்ய கிருஹப்பிரவேசம் இருந்தது. அதாவது சிஷ்யர்கள் வீட்டுக்கு குரு போய் சொல்லிக் கொடுப்பது இருந்தது.
இப்போது குரு என்பது டேப் தான். அதை வைத்துக் கொண்டு இப்போது எல்லோரும் பாடிவிடுகிறார்கள். அந்த காலத்தில் உட்கார்ந்து சொல்லிக் கொடுத்துத்தான் ஆகவேண்டும். இப்போது டேப்பை நான்குதடவை கேட்டு பாடிவிடுகிறார்கள். அந்த அளவுக்கு புத்திசாலிகள், எல்லோரும் இப்போது. அதிலும் பெண்கள் மிக நன்றாக பாடுகிறார்கள். அவர்களுக்கு வெளியில் மற்ற அலுவல்கள் எதுவும் இல்லாததால், கவனம் செலுத்த முடிகிறது. அந்த காலத்தில் ஒரு கீர்த்தனை பாடம் பண்ண, பல தடவை அலையவேண்டும். சுலபமாக கற்றுக் கொடுத்துவிட மாட்டார்கள். அப்படியே சொல்லிக்கொண்டாலும், குருவின் அடி எல்லாம் விழும். இந்த நாளில் ஏதேனும் சிஷ்யனை அடிக்க முடியுமா?

கேள்வி : இப்போது இசைக் கல்லூரிகள் வந்துவிட்டனவே?!

பதில் : இப்போதிருக்கும் கல்லூரிகளில் கற்றுக் கொண்டு பெரிய அளவில் முன்னுக்கு வந்துவிட முடியும் என்று சொல்ல முடியாது. காரணம், 30, 40
பேருக்கு சேர்ந்து எப்படி சங்கீதத்தில் பயிற்சி கொடுக்க முடியும்? எல்லோரையும் சேர்ந்து கத்தவிட வேண்டும். அதில் எது கிழிசல், எது விரிசல் என்று எப்படி கண்டு பிடிக்க முடியும்? கூட்டத்தில் கோவிந்தாதான். அதனால பர்ஃபெக்ஷன் வரும் என்று சொல்ல முடியாது. கல்லூரிகள் ஏற்பட்ட புதிதில மாணவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் இருந்தார்கள். இப்போது பாட்டுப் பாடினாலும் சரி, அழுதாலும் சரி எல்லோரையும் சேர்த்துக கொள்ளவேண்டி இருக்கிறது.

கேள்வி : இதை சரிசெய்வது எப்படி?

பதில் : என்ன செய்ய முடியும்? தேர்தல் வராம இருக்க முடியுமா? அப்படித்தான் இதுவும். சங்கீதம் என்றால், மிகவும் எளிது என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் இசைக் கல்லூரிகளில் கூட்டம் சேர்ந்து விட்டது. அங்கு தேறிவிட்டால், பள்ளிக்கூடங்களில் வேலையும் கிடைத்து விடுகிறது. இவர்கள் அங்கு போகும்போது இவர்களது வேலை, மணியடிப்பது, ஏதேனும் ஆசிரியர் வரவில்லை என்றால், அந்த வகுப்பை பார்த்துக கொள்வது ஆதலால் இசைக் கல்லூரிகள் எவ்வளவு வெற்றிகரமாக நடக்கும் என்று சொல்ல முடியவில்லை. ஆனால் நடக்கும். அவர்களுக்கு சம்பளமும கிடைக்கும்.

(தொடரும்...)

ஹெச். ராமகிருஷ்ணன்

Published on 11th Dec, 2007


Recommend this page

Mail us your feedback

 
மேலும்
 
 

Copyright © 2008, Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Phone: 91-44- 420 24601; 420 71942; 420 71943 - cibs@chennaionline.com - Copyright and Disclaimer - Privacy Policy