தமிழ்
Astrology
Classifieds
Cricket
Movies
TV Room
Education
Health
Hotels
IT
Maps
BSE/NSE Live
Music
News
City 360
Shopping
e-paper
Videos
Air Fares
Friendship
Jobs
Kalyanam
Property
Download Songs
  தமிழ்
 in     
 
 
 
செம்மங்குடி..தொடர்-3 நேர்காணல்
--  

கேள்வி : கர்நாடக இசைக் கலைஞர்கள் பலர் திரைப்படப் பாடல்களை இசைக்கிறார்கள். அதுபற்றி...

பதில் : எனக்கு சினிமாவை பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால் வயிற்றுப் பிழைப்புக்கு என்று வரும்போது பல வித்தைகளை செய்யவேண்டியிருக்கிறது. ஆத்மானுபவம் என்பது வேறு.

கேள்வி : கர்நாடக சங்கீகத்தைவிட சினிமா சங்கீதம் மக்களுக்கு அதிகமாக பிடிக்கிறது என்று நினைக்கிறீர்களா?

பதில் : அடிக்கடி ஏதேனும் காதில் விழுந்தது என்றால் அது பழகிப்போகும். டிவி மூலமாகவும், ரேடியோ மூலமாகவும் எதுஎது காதில் அடிக்கடி விழுகிறதோ, அது சுலபமாக வந்து விடுகிறது.

கேள்வி : பரதநாட்டியத்தை பற்றி......

பதில் : நாட்டிய அரங்கேற்றத்திற்கு நாற்பது ஐம்பதாயிரம் ரூபாய் செலவழிக்கிறார்கள். அதைத்தவிர, நாட்டியம் கற்றுக் கொள்வதற்கும் நிறைய பணம் கொடுக்கிறார்கள். இது பணக்காரர்களின் வித்தையாகிவிட்டது. விலை உயர்ந்த கலை. சங்கீதத்தைப் பொறுத்தவரையில் கேட்பதற்கு நன்றாக இருந்தால்தான் கேட்பார்கள்.

கேள்வி : ஒருசில வித்வான்களைத் தவிர மற்றவர்களின் கச்சேரிகளுக்கு அவ்வளவு கூட்டம் வருவதில்லையே!......

பதில் : சாஸ்திரீய சங்கீதத்தை எல்லோரும் ரசித்துவிட முடியாது. அதனால் எல்லா கச்சேரிகளுக்கும் கூட்டம் வந்துவிடாது. மிகச் சிறந்த ஒரு சிலருக்கு ஹால் ஃபுல்லாயிடும். சில கச்சேரிகளுக்கு போவதே கெளரவம் என்று நினைப்பவர்களும் உண்டு. இப்போது நமது சங்கீதம் இங்க மட்டுமில்ல, வெளிநாடுகளிலும் பரவியிருக்கு. தினம்தினம் ஒவ்வொருவர் அமெரிக்காவுக்கு போய் வந்து கொண்டிருக்கிறார்கள்.

கேள்வி : இப்போது பல மேற்கத்திய வாத்தியங்கள் கர்நாடக சங்கீதத்தில் வந்து விட்டனவே!.... சக்ஸஃபோன், மாண்டலின் போன்று......

பதில் : மாண்டலின் வந்ததில் எந்தத் தப்பும் இல்லை. அது கிட்டத்தட்ட ஃபிடில் மாதிரிதான். சக்ஸஃபோன் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது, ஆனால் மிகுந்த இரைச்சல். கல்யாண வரவேற்பு போன்ற நிகழ்ச்சிகளில் வாசிக்கலாம். அவர் மிக நன்றாகத்தான் வாசிக்கிறார். ஒரு குழுவை வைத்துக் கொண்டு வெளுத்து வாங்குகிறார்கள். அந்த காலத்தில் கர்நாடக இசைக்கு இவ்வளவு கூட்டம் வர முடியாது. மைக்கு கிடையாது. 200, 300 பேர்இருந்தாலே, பெரிய கூட்டம் என்று நினைப்போம். சென்னையில் சின்னச்சின்ன அரங்குகள் இருந்தன. இப்போது பிரம்மாண்டமான அரங்குகள். கலைஞர்களை பார்ப்பதற்கே வெளிநாடு செல்லவேண்டும். அதோடு இந்த மைக் அநேகம்பேருடைய காதை கெடுத்துவிட்டது. என்னுடைய காது செவிடாயிடுத்து. மைக்கை எந்த அளவுக்கு பயன்படுத்தவேண்டும் என்பது தெரியாமல், அதன் அளவை உயர்த்தி, காதை கெடுத்துவிட்டார்கள். பாடகர்களின் பின்னாலேயே ஒலிபெருக்கி வைக்கிறார்கள். என்ன செய்வது? மிருதங்கத்தில் கையை வைத்தாலே, இடிஇடித்ததைபோல சத்தம் கேட்கிறது. அதற்கும் மைக் வைக்கிறார்கள். சங்கீதத்தை முக்கியமாக கெடுத்தது மைக், ஃபேன். பாதி சத்தத்தை ஃபேன் சாப்பிட்டுவிடுகிறது. பாடுவது என்பதே காற்றில் அலைகளை உருவாக்குவதுதான். ஃபேன் இருந்தால், இந்த அலைகளை விழுங்கிவிடுகிறது. ஃபேன் இல்லை என்றால் வியர்க்கும் என்பார்கள். வியர்க்கும் என்றால், வீட்டிலேயே உட்கார்ந்து கொள்ளுங்கள். பாடகர்களுக்கு வியர்க்காதா? என்ன செய்யப்போகிறீர்கள்? ஒன்று செய்யலாம். ஏ சி-யை லேசாக வைக்கலாம். அப்படி வைத்து ஒரு சிறிய அரங்கமாக இருந்தால் நான்றாக இருக்கும். மைக் இல்லாத கச்சேரிதான் செய்வேன் என்று பாலக்காட்டு மணி ஐயர் சொன்னாரே அது நூற்றுக்கு நூறு சரியானது. யஹுதிமெனுஹின் என்ற உலகப் புகழ்பெற்ற வயலின் கலைஞருடன் நான் பேசிக் கொண்டிருந்தேன், திருவனந்தபுரத்தில் நான் இசைக் கல்லூரியில் முதல்வராக இருந்தபோது. நான் அப்போது ஸ்வாதி திருநாள் சங்கீத சபா செயலாளராக இருந்தேன். எங்களது சபாவில் ஒரு நிகழ்ச்சி நடத்தவேண்டும் என்று அவரிடம் கேட்டேன். அவர் சில கண்டிஷன் போட்டார். மைக் கூடாது. ஃபேன் போடக்கூடாது. கச்சேரி துவங்கும்போது கதவுகளை மூடிவிடவேண்டும். நடுவில் யாரும் வரக்கூடாது. போகவும் கூடாது. இடைவேளையின்போது உள்ளே வரலாம், போகலாம். பிறக கதவை மூடிவிடவேண்டும். இப்படி கண்டிஷன் போட்டார். இப்படிச் செய்தால் எப்படி கேட்க முடியும் என நான் நினைத்தேன். நான் நாலு பக்கத்திலும் போய் நின்று நிகழ்ச்சியை கேட்டேன். பரிசுத்தமாக கேட்டது. உயர்ந்த சங்கீதம் வேண்டும் என்றால் சத்தம் உதவாது. இப்போது சங்கீதம் இல்லை. சங்கீத இரைச்சல், மியூசிகல் நாய்ஸ்தான் இருக்கிறது. எனக்கும் இங்கிலீஸ் பேசத் தெரியும். மியூசிக் வேற, நாய்ஸ் வேற. மைக்கை எப்படி உபயோகிக்கவேண்டும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. மைக்குக்கு அடிமையாகக் கூடாது. சிறிய ஒலிபெருக்கிகளைத்தான் வைக்கவேண்டும். அலமாரி மாதிரி இரண்டு பெரிய ஸ்பீக்கர் வைத்து விடுகிறார்கள். நாய்ஸ்தான் வரும். மைக் இல்லாமல் இருந்தால், முழு நிசப்தம் இருக்கும். ஒலிபெருக்கி இருப்பதனால், பேசிக் கொண்டே கேட்கலாமே, அந்த மாதிரி ஆகிவிட்டது. அந்த காலத்தில் எல்லாம் அப்படிப்பட்ட சத்தமே இருக்காது. யாரேனும் சத்தம் போட்டால், காதைத் திருகி, வெளியே கொண்டு விட்டுவிடுவார்கள். நானே பார்த்திருக்கிறேன் பல கச்சேரிகளில். நான் ஒரு கல்யாண கச்சேரி பாடிக் கொண்டிருந்தபோது, இரண்டுபேர் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த பெண் வீட்டுக் காரர் அந்த இரண்டு பேரையும் அரங்குக்கு வெளியே அழைத்துபோய், இங்கு உட்கார்ந்து எவ்வளவு வேண்டுமானாலும் பேசிக் கொள்ளுங்கள் என்று சொன்னார். அப்படிப்பட்ட பெருமை இருந்தது சங்கீதத்திற்கு. இன்று மிகவும் பரவிப்போய்விட்டது சங்கீதம். இதை மறுபடியும் காப்பாற்ற வேண்டும் என்றால், பழைய முறையில், மைக் இருப்பது தெரியாத அளவுக்கு அதை பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் சங்கீதத்தை கேட்க முடியும். ஃபேன் இருக்கக்கூடாது. லேசாக ஏ சி இருக்கலாம். சப்தம் அலையக் கூடாது. ஃபேனில் உட்கார்ந்து பாடினால், சப்தம் அலையும். சுருதியுடன் சேர்ந்த மாதிரியே இருக்காது. ஆனால் என்னுடைய அனுபவத்தில் ஒன்று சொல்கிறேன். சங்கீதம் வளர்ச்சியடைந்திருக்கிறது.
சங்கீதம் காணாமல் போய்விடவில்லை. காணவில்லை என்று போலீஸிடம் புகார் கூற வேண்டிய அவசியம் இன்னமும் ஏற்படவில்லை.

(தொடரும்)

ஹெச். ராமகிருஷ்ணன்

மேலும் Published on 13th Dec, 2007


Recommend this page

Mail us your feedback

மேலும்
 
 

Copyright © 2008, Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Phone: 91-44- 420 24601; 420 71942; 420 71943 - cibs@chennaionline.com - Copyright and Disclaimer - Privacy Policy