|
மலேசியாவிலிருந்து வரும் செய்திகள், மகிழ்ச்சி
அளிப்பவையாக இல்லை. அங்கு சென்ற மாதம் தமிழர்கள்
நடத்திய ஆர்ப்பாட்டத்தை அடுத்து ஏற்பட்ட நிகழ்வுகள்,
தமிழ் நெஞ்சங்களை கவலையில் ஆழ்த்தியுள்ளன. தங்களது
நீண்டகால பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவே அவர்கள்
ஊர்வலமாகச் சென்றார்கள்.
அந்த நாட்டில் ஒரு வம்சாவளியினரையே துடைத்து
மாய்க்கும் வேலை நடந்து கொண்டிருப்பதாக அங்குள்ள
தமிழர்கள் எண்ணுகிறார்கள். இது அடிப்படை அற்ற எண்ணம்
அல்ல. தங்கள் பிரச்சினைகளை, இன்னல்களை, தங்களுக்கு
எதிராக இழைக்கப்படும் கொடுமைகளை ஐ.நா-வுக்கும், உலக
நீதிமன்றத்திற்கும், குற்றவியல் நீதிக்கான உலக
மன்றத்திற்கும் எடுத்துச் செல்லவேண்டும் என்று மலேசியத்
தமிழர்கள், கோலாலம்பூர், பிரிட்டிஷ் தூதரகத்திடம்
வழங்கிய மனுவில் கோரியிருந்தார்கள். இந்த நியாயமான
கோரிக்கைகளினால், ஆத்திரம் அடைந்த அந்நாட்டு அரசு தனது
எதேச்சாதிகார போக்குக்கு ஏற்ப, அந்த ஊர்வலத்திற்கு
அனுமதி வழங்க மறுத்ததோடு, தமிழர் தலைவர்களை கைது
செய்ததோடு, அமைதி பேரணியில் ஈடுபட்ட தமிழர்களை கலைக்க
தண்ணீர் குண்டுகளை பயன்படுத்தினார்கள். மலேசியா இன்று
இந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கிறது என்றால்,
அதில் அந்நாட்டு தமிழர்களின் பங்கு மிக
முக்கியமானதாகும். அரசியல், பொருளாதார, சமூக,
கலாச்சாரத் துறைகளில் தாங்கள் ஓரங்கட்டப்படுவதாக
மலேசிய தமிழர்களுக்கு நியாயமான ஒரு குறை இருக்கத்தான்
செய்கிறது.
மலேசிய மக்கள் தொகையில் எட்டு சதவிகிதத்தினர்
இந்தியர்கள். இவர்களில் எண்பது சதவிகிதத்தினர்
தமிழர்கள். மதத்தின் அடிப்படையில் பார்த்தால், மலேசிய
இந்தியர்களில் எண்பது சதவிகிதத்தினருக்கும் மேல், இந்து
சமயத்தைச் சேர்ந்தவர்கள்.
அங்குள்ள இந்தியர்களை பற்றி குறிப்பிடும்போது ஒரு
விஷயத்தை மனதில் கொள்ளவேண்டும். அங்குள்ள நடுத்தர
வர்க்க இந்தியர்கள், தமிழர்கள் அல்லாத இந்தியர்களும்,
இலங்கைத் தமிழர்களும்தான். இவர்கள் நல்ல நிலையில்
இருக்கிறார்கள். ஆனால் தொழிலாளர்களின் - அதாவது
இந்தியத் தமிழர்களின் - நிலைமை பரிதாபத்திற்குரியது.
அவர்கள் கல்வி கற்பது கடினம். தமிழ் ஆரம்பப் பள்ளிகள்
சரிவர பராமரிக்கப்படுவதில்லை. ஒருசில தமிழ் இளைஞர்களே
பல்கலைக்கழகத்திற்குள் நுழைய முடிகிறது. இவர்களது சமூக
நிலையும் மிகவும் தாழ்ந்தது.
கடைசியாக வந்துள்ள செய்தி, மேலும் கவலையளிப்பதாக
இருக்கிறது. தமிழர்களின் பிரச்சினைகளை உலகின்
கவனத்திற்கு கொண்டு வருவதற்காக இயங்கிக் கொண்டிருக்கும்
ஹின்ட்ராஃப் - அதாவது இந்து உரிமை இயக்கம் - அமைப்பின்
தலைவர் பி உதயகுமார் நேற்று ( டிசம்பர் 11) கைது
செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்டு, மீண்டும் கைது
செய்யப்பட்டிருக்கிறார். மனித உரிமை ஆர்வலர்களின் மீது
எதேச்சாதிகார அரசு மேற்கொள்ளும் கடுமையான நடவடிக்கையின்
ஒரு பகுதியாகவே நாம் இதை பார்க்க முடிகிறது.
இணையதளத்தில் அவர் தேசத் துரோக கருத்து தெரிவித்தார்
என்று கூறி அவரை கைது செய்தார்கள். அங்குள்ள அமர்வு
நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி, வழக்கை அடுத்த
மாதம் முதல் வாரத்திற்கு ஒத்திப்போட்டது. அவசரஅவசரமாக
அந்நாட்டு அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கை, அதன்
அணுகுமுறையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
எந்த நாட்டிலும் குடிமக்கள் அந்த நாட்டின் சட்ட
திட்டங்களுக்கு உட்பட்டுத்தான் வாழவேண்டும். இதில் இரு
கருத்துக்களுக்கு இடமில்லை. அதேசமயம், எந்த ஒரு
பிரஜையும் மனிதாபிமானமற்ற நிலையில் வாழவேண்டும் என்று
எதிர்பார்ப்பது , நாகரீக பண்புக்கு முரணானது. இது
மனிதனின் அடிப்படை உரிமை சம்பந்தப்பட்ட பிரச்சினை.
இந்த பொறுப்பை பண்புள்ள எந்த அரசும் தட்டிக் கழிக்க
முடியாது.
Read in English
ஹெச். ராமகிருஷ்ணன்
|