|
தமிழ்நாட்டில் கூட்டணி என்று ஒன்று இருக்கிறதா
இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் கூட்டணிக்
கட்சிகளிடையே வெளிப்படையாக தெரியும் நிகழ்வுகள் அவ்வளவு
சுவாரஸ்யமாக இல்லை. திமுக அரசை குறை சொல்ல ஒரு
சின்னஞ்சிறு வாய்ப்புக் கிடைத்தாலும் அதை லபக்கென்று
பிடித்துக் கொள்கிறார், பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ்.
அதுவும் சாதாரணமாக குறை கூறுவதில்லை. வாங்கு வாங்கு
என்று வாங்குகிறார். தமிழகத்தில் மின்துறை
நிர்வகிக்கப்படும் (!) விதத்தை கண்ணாபின்னாவென்று குறை
கூறினார். தமிழ்நாடே இருளில் மூழ்கியிருக்கிறது என்றார்.
அதோடு விடவில்லை. கடலூரில் தனியார் துறையில்
அமைந்துவரும் ஒரு மின் நிலையத்திற்கு அளவுக்கு மேல்,
அதுவும் விளை நிலங்களையே ஏன் ஒதுக்கியிருக்கிறீர்கள்
என்று சாடினார். தமிழக மின்துறை அமைச்சர் திரு ஆற்காடு
வீராசாமியின் உறவினர் ஒருவருக்கு அந்த மின்
நிலையத்துடன் தொடர்பு இருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
ஆற்காட்டார் சும்மா இருப்பாரா என்ன? கிட்டத்தட்ட ஒரு
மறுப்பு அறிக்கை வெளிவந்தது. கிட்டத்தட்ட என்று ஏன்
கூறினேன் என்றால், தமது உறவினருக்கு எந்தத் தொடர்பும்
இல்லை என்று அவரால் திட்டவட்டமாக மறுக்க
முடியவில்லைபோலும். மின் நிலையத்திற்கு விளை நிலத்தை
ஏன் கொடுத்தீர்கள் என்று டாக்டர் ராமதாஸ் கேட்டதற்கு,
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் கட்டி வரும் ஒரு
கல்லூரியே, ஆக்கிரமிக்கப்பட்ட புறம்போக்கு விளை
நிலங்களில்தானே உருவாகிறது என்று எதிர் கேள்வி
எழுப்பினார். 14 ஹெக்டேர் நிலத்தில் நெல் விளைவதாகவும்,
இங்கே ஏன் கல்லூரி கட்டுகிறார்கள் என்றும் அவரது
மொழியிலேயே பதில் கேள்வி கேட்டார். அடுத்து அங்கிருந்து
என்ன அஸ்த்ரம் வரப்போகிறதோ?
தொலைக்காட்சியிலும் கட்சிப்போர்கள் அவ்வப்போது
காட்சி அளிக்கின்றன. பாமக, தனது மக்கள்
தொலைக்காட்சியில் இந்த நல்ல விஷயத்தை அவ்வப்போது செய்து
வருகிறது. நேற்று (12.12) இரவு செய்தி அறிக்கையில்,
அமைச்சர் துரைமுருகனின் பேச்சுத்தான் முக்கிய செய்தி.
அவர் ஒரு சாதாரண நிகழ்ச்ச்யில் பேசும்போது தனக்கே உரிய
நகைச்சுவை பாணியில் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கை பற்றி
ஏதோ கூறியிருக்கிறார். அதன் ஒரு பகுதியை அமைச்சரின்
குரலிலேயே பாமக தொலைக்காட்சி ஒளிபரப்பி, தமிழகத்தில்
சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக திரு துரைமுருகனே
குற்றஞ்சாட்டியதைபோல காண்பித்தார்கள். இப்படி நடக்கும்
என்று திரு துரைமுருகன் கனவில்கூட நினைத்திருக்க
மாட்டார்.
தமிழகத்தில் கூட்டணிக்குள் ஏற்பட்டிருக்கும் தலைவலியை
நீக்க, தேவை ஒரு அனாசின்.
Read in English
ஹெச். ராமகிருஷ்ணன்
|