|
அன்று நெடுஞ்செழியனை எதிர்த்துத் தேர்தலில்
போட்டியிட்டு, சற்று அதிகமாகவே வாக்குகள் பெற்றவர் எஸ்
வி சேகர். அரசியல் ஆசை அப்போதே இருந்தது. கடந்த
தேர்தலில் அஇஅதிமுக சார்பில் திருமயிலையில்
போட்டியிட்டு வெற்றியும் பெற்றுவிட்டார். ஆயினும் தனது
பழைய பாசங்களையும் பற்றுக்களையும் உதறித்
தள்ளமுடியவில்லை. அஇஅதிமுக அரசியல் என்பது தனி ரகம்.
அதற்குள் விழுந்து எழுவது என்பது நயாகரா
நீர்வீழ்ச்சியில் விழுந்து எழுவதை விட சிரமம். இதை
அறியாமல் விழுந்தாரா அல்லது தெரிந்தே விழுந்தாரா என்பது
தான் புரியாத புதிர். அவருக்கு கட்சிப்
பொதுக்குழுவுக்கு அழைப்பு அனுப்பவில்லையாம்.
ஆனானப்பட்டவர்களையே அலட்சியம் செய்து பண்பட்ட கட்சி.
அதில் நேற்று முளைத்த எஸ் வி சேகர் எம்மாத்திரம்?
அழைப்பு இல்லாததால் ச.பே.உ பதவியை அவர் ராஜினாமா
செய்யப்போவதாக செவ்வாய் இரவே செய்தி கசிந்தது.
வானகரத்தில் பொதுக்குழு நடைபெறும் அதே வேளையில், கட்சி
ச.பே.உ, தலைமைச் செயலகம் வருகிறார்.
நாடகம்
தலைமைச் செயலகத்தில் சட்டப் பேரவைத் தலைவர்
அறைக்குச் செல்கிறார். அதற்குள் அங்கு குழுமிவிட்ட
கட்சி நிர்வாகிகள், அவரை வழிமறிக்கிறார்கள். 'நான் எனது
காருக்கு ஃபேன்ஸி எண் வாங்கத் தானே வந்தேன் என்று ஒரு
வசனம் பேசுகிறார். நான் எப்போதுமே இரட்டை இலை தான்
என்று, 'மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்' என்ற
புரட்சித் தலைவரிகளின் பாடல் வரிகளை நினைவூட்டும்
வகையில் கூறிவிட்டு கட்சி நிர்வாகிகள் அழைத்து -
மன்னிக்கவும், இழுத்துசெல்ல, அவர் பொதுக்குழுக்
கூட்டத்துக்கு அழையா விருதாளியாகச் செல்கிறார்.
அல்வா
இவர் செல்லும்போது, பொதுக் குழுக்கூட்டம் முடிந்து,
சாப்பாடு நடந்துகொண்டிருக்கிறது. '' உண்ணீர்
உண்ணீரென்றே ஊட்டாதார்தம் மனையில் உண்ணாமை கோடி பெறும்
'' என்ற ஒளவை மூதாட்டியின் அறிவுரையை அவர் மறந்து
விட்டார் போலும். பகல் உணவில் கட்சி, அல்வா பரிமாறியதோ
என்னவோ, எஸ் வி சேகர், பத்திரிகையாளர்களுக்கும், தம்மை
தேர்ந்தெடுத்த வாக்காளப் பெருமக்களுக்கும் அல்வா
கொடுத்தார், தாம் ஒரு நடிகர் என்பதை, அப்பியாச
வித்தைக்கு அழிவில்லை என்பதை மீண்டும்
நிரூபித்துவிட்டார்.. |