|
வாழையைடி வாழையாக வந்து கொண்டிருக்கும் ஒரு பழக்கத்தை
மாற்றவேண்டும் என்ற எண்ணமே புரட்சிகரமானது. மாற்ற
வேண்டும் என்பதற்காக மாற்றுவது ஒன்று. ஒரு
காரணத்திற்காக மாற்றுவது மற்றொன்று. மாற்றம் என்பது
வாழ்க்கையின் அடிப்படை. இந்தப் பிரபஞ்சத்தின் அடிப்படை
என்றுகூட சொல்லலாம். ஒரே ஆற்றில் இரண்டாவது தடவையாக
கால் வைக்க முடியாது என்று கூறுவார்கள்., அதாவது, காலை
எடுத்து மீண்டும் வைப்பதற்குள், தண்ணீர் ஓடியிருக்கும்.
ஆக, மாறிக் கொண்டே இருப்பதுதான் வாழ்க்கை. காலம் என்ற
சொல்லுக்கு பொருளே மாறுவது என்பதுதான். "கலயதி இதி
காலம்" என்பார்கள். அதாவது மாறுவது காலம். மாற்றுவதும்
காலமே.
காலத்தை நமது முன்னோர்கள் பங்கீடு செய்து
வைத்திருக்கிறார்கள். பூமி சூரியனை ஒரு தடவைச்
சுற்றிவரும் காலத்தை ஒரு ஆண்டு என்று
நிர்ணயித்திருக்கிறோம். இந்த காலத்தை 12-ஆக வகுத்து,
12 ராசி மண்டலங்களாக கணக்கிட்டிருக்கிறோம். இதில் முதல்
ராசி மேஷம். இந்த மேஷ ராசியில் சூரியன்
பிரவேசிக்கும்போது, சூரியன் உச்சத்திற்கு வரும்போது
சித்திரை மாதம் துவங்குகிறது. சூரியனுடைய வீடு
ஜோதிடப்படி, சிம்ம ராசி. மேஷத்திற்கு சூரியன் வரும்போது
அவன் லாப ஸ்தானத்தில் இருப்பான். இவ்வளவையும் கணக்கில்
கொண்டுதான் நமது முன்னோர்கள், சித்திரைத் திங்களை தமிழ்
புத்தாண்டாக வகுத்தார்கள்.
தைத் திங்களை தமிழ் புத்தாண்டாக மாற்றப்போவதாக நமது
முதலமைச்சர் மு கருணாநிதி அறிவித்திருக்கிறார்.
அவருக்கு தெரியாத விஷயம் இல்லை. பிரபவ, விபவ, சுக்கில,
பிரமோதூதா என்று 60 தமிழ் வருஷங்களின் பெயர்களையும்
அவர் ஒரு பிரவாகம்போல தங்குதடையின்றி சொல்வதை நானே
நேரில் கேட்டிருக்கிறேன். அப்படியிருக்க, தமிழ்
புத்தாண்டை தைத் திங்களுக்கு மாற்றுவது என்று அவர் ஏன்
முடிவு செய்தார் என்பது தெரியவில்லை.
தமிழர்களுக்கு தமிழ் மாதம் முக்கியமானது என்பதில்
எள்ளளவும் ஐயமில்லை. பொங்கல் திருவிழா, அறுவடைத்
திருவிழா, திருவள்ளுவர் தினம் இப்படி பல விழாக்கள்
ஒன்றுகூடி வருவது தைத் திங்களில்தான். இருப்பினும்
புத்தாண்டு என்பது, பல அம்சங்களைக் கொண்டது. தைத்
திங்களுக்கு ஒரேஒரு முக்கியத்துவம், தை முதல்தேதி தான்
உத்திராயண புண்ணியகாலம் துவங்குகிறது. ஆயினும்
பிரத்யக்ஷ தெய்வம் அதாவது கண்ணுக்கு தெரியும் கடவுள்
சூரியன்தான். அவர்தான் அதிபதி. அவர் உச்சத்திற்கு வரும்
காலத்தில், புத்தாண்டு துவங்குவதுதான் மக்களுக்கு நலன்
பயக்கும். தை மாதத்தில் ஜோதிடப்படி அவர் சொந்த
வீட்டிலிருந்து ஆறாம் பாவத்தில் இருக்கிறார். இந்த
நேரத்தில் புத்தாண்டை துவக்குவது நல்லதல்ல என்பது
ஜோதிடர்களின் கருத்து.
இதை மீண்டும் பரிசீலனை செய்து தமது முடிவை நமது
முதல்வர் மாற்றிக் கொள்வார் என்று நம்புவோமாக.
ஹெச். ராமகிருஷ்ணன்
|