கடவுள் இல்லை என்றால் இவ்வளவு அதிசயங்கள்
நடைபெறமுடியுமா? இந்த வினாவை எழுப்பியவர், இயக்குநர்
திலகம் கே. பாலசந்தர் தான். முன்னாள் குடியரசுத் தலைவர்
ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வாழ்க்கை சரிதம் அடங்கிய
குறுந்தகிட்டை வெளியிட்டுப் பேசுகையில் பாலசந்தர்,
தமக்கே உரிய பாணியில் மேலும் சொன்னார்:ஒரு ஆதி
சங்கரரும் ஒரு விவேகானந்தரும்- ஒரு ஹரிப்ரசாத்
செளராஸியாவும் ஒரு என். ரமணியும்- கடவுளின்
கருணையில்லாமல்,அருளில்லாமல் தோன்றியிருப்பார்களா? ஒரு
இளையராஜா தோன்றியிருப்பாரா? இதெல்லாம் வெறுமே அறிவியல்,
உயிரியல் நிகழ்வுகளாக மட்டுமே கருதப்பட முடியுமா என்று
அவர் கேள்வி எழுப்பினார்.
நிகழ்ச்சிக்கு நேரடித் தொடர்பு இல்லாவிடிலும்
கிரிக்கட் பூசலையும் அவர் தமது உரையில் குறிப்பிடத்
தவறவில்லை. ஹர்பஜன் சிங்குக்கு எதிரான இனப்
பாகுபாட்டுக் குற்றச்சாட்டைக் குறிப்பிட்ட அவர், அண்ணல்
காந்தியும் அப்துல் கலாமும் பிறந்த நாடு இது என்பதை
ஆஸ்திரேலிய வீரர்கள் உணர வேண்டும் என்று ஆணித்தரமாகக்
குறிப்பிட்டார்.
ரகசியம்!
அப்துல் கலாமின் நீண்ட முடியின் ரகஸியத்தையும்
பாலசந்தர் வெளியிட்டார். 'அவர் ஒரு பேச்சிலர்
(Bachelor). விண்வெளி ஏவுகணைகளைச் செலுத்துவதில்
ஏற்படும் இன்னல்கள், குடும்ப வாழ்க்கையின்
இன்னல்களைவிடக் குறைவானவையே' என்று, அப்துல் கலாம்,
மற்றும் குழுமியிருந்த ஆயிரக்கணக்கானவர்களின்
ஆரவாரத்துக்கிடையே பாலசந்தர் போட்டு உடைத்தார்.
இதைத் தமது உரையில் குறிப்பிட்ட அப்துல் கலாம், தாம்
ஒரு பேச்சிலர் மட்டும் அல்ல; பிரம்மசாரியும் கூட,
என்றார். இதற்கான வேற்றுமைகளைத் தாம் இப்போது
கூறப்போவதில்லை என்றும் அவர் சொன்னார்.
பாலசந்தர் நிகழ்த்திய உரையின் பிரதியை மறக்காமல்
அப்துல் கலாம் கேட்டு வாங்கிகொண்டார் என்பதையும்
சொல்லியேயாகவேண்டும். |