|
குறுகிய காலத்தில் அதிக ரசிகர்களை சம்பாதித்த இளம்
ஹீரோக்கள் ஒருசிலரின் பட்டியலில் விஷாலையும் சேர்த்துக்
கொள்ளலாம். மலைக்கோட்டை படத்தின் 125-வது நாள் விழா
சென்னை மியுசிக் அகாடமி அரங்கில் விஷால் ரசிகர்களின்
விஷில் சத்தங்களில் கோலாகலமாக நடந்து முடிந்தது. விழா
மேடையில் இருந்து இறங்கிய விஷாலிடம் பேசியதிலிருந்து,
'சத்யம்' என்ன ஆச்சு?
சத்யம்
முக்கால்வாசி முடிந்துவிட்டது. எடுத்துவரை டிப்பிங்,
எடிட்டிங் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழ்,
தெலுங்கு இரண்டு மொழிகளிலும் ஒரே சமயத்தில்
தயாரிப்பதால், ஒரே கேரக்டருக்கு தமிழ் வாய்ஸ்
பொருத்தமாக இருந்ததால், அடுத்து தெலுங்கு வாய்ஸுக்கு
யார் பொருத்தமாக இருக்கும் என்று மேட்சிங் பார்க்க
வேண்டும். அடுத்து ஹாரிஸ் ஜெயராஜுடன் தமிழ் பாடலுக்கு
தனி டியூன், தெலுங்கிற்கு தனி டியூன் இப்படி பல
விஷயங்களை உன்னிப்பாக செய்து வருகிறார் ராஜசேகர்.
எடுத்ததுவரை போட்டு பார்த்தோம். படம் திருப்தியாக
வந்திருக்கிறது. சத்யம் ஜுன் மாதம் ரிலீஸ் செய்யும்
ஐடியாவில் உள்ளோம்.
காமெடி ஹீரோ, சீரியஸ் ஹீரோ இதில் எது உங்களுக்கு
பிடிக்கும்?
காமெடி செய்வது சுலபமான காரியமில்லை.
மலைக்கோட்டையில் நான் காமெடி பண்ணியதற்கு
முழுக்கமுழுக்கக் காரணமானவர் இயக்குநர் பூபதி பாண்டியன்.
ஒரு டயலாக்கை சொல்லிக் கொடுத்துவிட்டு அதை எப்படி
சொன்னால் நன்றாக இருக்கும் என்பதை மிகச் சரியாக செய்து
காட்டுவார். அந்த படம் பார்த்துவிட்டு எனக்கே
ஆச்சரியமாக இருந்தது. படமும் 125 நாட்களை தாண்டி
ஓடிவிட்டது. சீரியஸ் ஹீரோ என்பதைவிட ஆக்ஷன் ஹீரோ என்பது
எனக்கு ரொம்ப பிடிக்கும்.
நாலு பைட், ஐந்து பாடல், ஹீரோ காமெடி இப்படி
பக்கா கமர்ஸியலான படங்களைத்தான் தேர்வு செய்கிறீர்களே
ஏன்?
ஒரு வளர்ந்துவரும் ஹீரோவுக்கு இது எல்லாம்
தேவைப்படுகிறது. ரசிகர்களும் என்னிடம் அதைத்தான்
எதிர்பார்க்கிறார்கள். கெட்டப் மாற்றி நடிக்கும்
ரிஸ்கான வேலைகளில் இப்போது இறங்கமாட்டேன். சத்யம் படம்
பாருங்கள். எல்லாம் பக்கா கமர்ஸியலாகவும்,
தரமானதுமாகவும் இருக்கும்.
சத்யம் படத்தில் நயன்தாராவின் கேரக்டர் என்ன?
நயன்தாரா டிவி டிப்போர்ட்டராக வருகிறார். இதுவரை
நயன்தாரா கிளாமராக பேசி நடித்திருப்பதை
பார்த்திருப்பீர்கள். இப்படத்தில் நகைச்சுவையிலும்
அமர்க்களப்படுத்தியுள்ளார். அவருடன் சென்னை-28
பிரேம்ஜியும் சேர்ந்து கொண்டு கலகலக்க வைக்கிறார்.
தமிழ் மாதிரி தெலுங்கிலும் உங்கள் படம் ஹிட்டாவது
எப்படி?
சண்டைக்கோழி படத்தை எடுத்து முடித்ததும் அதை
தெலுங்கில் ரீமேக் செய்யலாம். யாரை ஹீரோவாக வைத்து
எடுப்பது என்று டிஸ்கஸ் நடந்து கொண்டிருந்தது. அந்த
சமயம்தான் என் அப்பா அதை பந்தயம் கோழி-ன்னு டப்பிங்
செய்யலாம் என்றார். டப் செய்து வெளியிட்டோ ம்.
ஆந்திராவில் சூப்பர் டூப்பர் ஹிட். அதன் பிறகு பொகுரு
(திமிரு). பிரேம சதுரங்கம் (செல்லமே). பரணி (தாமிரபரணி).
பையா (மலைக்கோட்டை) என்று என்னுடைய படங்கள் எல்லாமே
தெலுங்கில் டப்பாகி பெரும் வெற்றி பெற்றன. இந்த
வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் ஆந்திரா முழுவதும்
டூர் சென்றோம். அப்போதுதான் அங்கு கிடைத்த வரவேற்பை
பார்த்து மிரண்டு போனேன். உண்மையிலேயே தெலுங்கில்
எனக்கு கிடைத்த வரவேற்பு இறைவன் கொடுத்த வரம்.
அதிர்ஷ்டம்னு சொல்லனும். இனி வரும் காலங்களில் நேரடி
தெலுங்கு படங்களிலும் நடிப்பேன்.
உண்மையைச் சொல்லுங்கள், உங்கள் காதலி யார்?
உண்மையைச் சொல்கிறேன். நான் பிரியாமணியையும்
காதலிக்கவில்லை. நயன்தாராவையும் காதலிக்கவில்லை. என்
காதலி யார் அதுதான் சஸ்பென்ஸ். இப்போதைக்கு என் சினிமா
கேரியர்தான் முக்கியம். என்னை நம்பி படம் எடுக்கும்
தயாரிப்பாளர்களுக்கு லாபம் தரவேண்டும். வாங்கும்
விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் சந்தோஷமாக
இருக்கவேண்டும். கல்யாணத்தைப் பற்றி துளிகூட
யோசிக்கவில்லை.
நீங்கள் விஜய் பாணியை பின்பற்றுவதாக
சொல்லப்படுகிறதே...!?
கண்டிப்பாக இல்லை. விஜயை தாண்டிப் போகனும். மற்றபடி
அவரோடு போட்டிபோடவேண்டும் என்று நினைத்ததில்லை. நான்
யார் பாணியையும் காப்பியக்கவில்லை. இன்றைய இளம்
ஹீரோக்கள் மத்தியில் போட்டியிருக்கிறது. ஆனால் யாரை
கண்டும் பொறாமை இல்லை. விஜய் என்னுடைய நல்ல நண்பர்.
சமீபத்தில்கூட அவரிடம் நான் போனில் பேசினேன்.
|