தமிழ்
Astrology
Classifieds
Cricket
Movies
TV Room
Education
Health
Hotels
IT
Maps
BSE/NSE Live
Music
News
City 360
Shopping
e-paper
Videos
Air Fares
Friendship
Jobs
Kalyanam
Property
Download Songs
  Tamil
 in
   
 
 
 
 
 
தசாவதாரம் விமர்சனம்

டகங்களால் உருவாக்கப்பட்ட மாபெரும் எதிர்பார்ப்பு என்னும் சுமையுடன் திரையரங்கிற்குச் செல்பவர்களுக்குத் தசாவதாரம் தருவது என்ன?. 70 கோடி செலவில் உருவான இந்தப் படம் எதிர்பார்ப்புகளுக்கு நியாயம் செய்கிறதா?

விஞ்ஞானி ஒருவருக்கு நடக்கும் பாராட்டு விழாவுடன் தொடங்குகிறது படம். இந்தியப் பிரதமரும் அமெரிக்க அதிபரும் தமிழக முதல்வரும் கலந்துகொள்கிறார்கள். விஞ்ஞானி பெருமாள் சிலை ஒன்றைப் பற்றிப் பேசுகிறார். கயாஸ் தியரி பற்றியும் விளக்குகிறார் (பிரபஞ்சத்தில் வெவ்வேறு இடங்களில் நடக்கும் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற நிகழ்வுகள் உண்மையில் ஒன்றையொன்று பாதிக்கக்கூடும் என்னும் அறிவியல் கோட்பாடு). அவரது உரையினூடே விரிகிறது தசாவதாரம் கதை.

12ஆம் நூற்றாண்டுக்கு நம்மை அழைத்துச் செல்கிறார் இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார். சைவ - வைணவ மோதல்கள் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் துடிப்புடன் காட்சிப்படுத்தப்படுகிறது. அசாத்தியமான கிராஃபிக்ஸ், ரவிவர்மனின் கேமரா, கமல், நெப்போலியனின் நம்பகமான நடிப்பு என்று நம்பிக்கை தரும் விதத்தில் தொடங்குகிறது படம். அங்கிருந்து 21ஆம் நூற்றாண்டுக்கு வருகிரது கதை. அமெரிக்க விஞ்ஞானி கமல் கோடிக்கணக்கான உயிர்களை அழிக்கக்கூடிய வைரஸ் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அதைக் கடத்தித் தீவிரவாதிகளிடம் விற்க முயல்கிறார் விஞ்ஞானிகளின் தலைவர். அதைக் காப்பாற்றும் / கைப்பற்றும் முயற்சியில் நடக்கும் களேபரங்களில் தவறுதலாக இந்தியாவுக்கு வந்துவிடுகிறது வைரஸ். அதைத் துரத்திக்கொண்டு வரும் விஞ்ஞானி கமலும் வில்லன் கமலும் மோதிக்கொள்கிறார்கள். விஞ்ஞானியைத் தீவிரவாதி என்று நினைத்துப் போலீஸ் துரத்துகிறது.

விறுவிறுப்பான படமாக உருவாவதற்கான கூறுகள் கதையில் இருக்கின்றன. சிறந்த நடிகர்களும் விறுவிறுப்பாகக் கதையைச் சொல்லத் தெரிந்த இயக்குநரும் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களும் இருக்கிறார்கள். ஆனால் பத்து வேடங்கள் என்று முடிவு செய்ததால் வலிந்து திணிக்கப்பட்ட அவதாரங்களும் அவற்றுக்கான காட்சிகளும் கதையின் ஓட்டத்திற்கு முட்டுக்கட்டை போடுகின்றன. கவர்ச்சி காட்டிச் செத்துப்போகும் ஷெராவத், கமலுடன் சேர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும் அசின் ஆகியோரும் சேர்ந்து கதையை நகர்த்த முயல்கிறார்கள்.

ரா ஏஜண்ட் கமல், பாட்டி கமல், ஜப்பான் கமல், நெட்டை கமல், சீக்கிய கமல், புஷ் கமல் என்று கமல் மயமான திரைக்கதை சுனாமியில் முடிகிறது. நூற்றாண்டுகள் கழித்துப் புரண்டு வரும் விஷ்ணு சிலை, முதல் காட்சிக்கான நியாயத்தை நிலைநாட்ட முயல்கிறது. ஆனால் கமலின் பல அவதாரங்களைப் போலவே இதுவும் கதையோடு ஒட்டவில்லை. கயாஸ் தியரி-யும் கைகொடுக்கவில்லை.

நாயுடு வரும் காட்சிகள் கலகலப்பாக இருந்தாலும் அவரை ரா ஏஜண்ட் என்று சொல்லுவதுதான் அசல் காமெடி. புஷ் வரும் காட்சிகளும் அப்படியே. பெரிதாகப் பேசப்பட்ட மேக்-அப் சமாச்சாரம் பல இடங்களில் பல்லை இளிக்கிறது. குறிப்பாக நெட்டை கமல் முகத்தில். வித விதமான சரும முகமூடிகளைப் போட்டுக்கொண்டு கமல் பல அவதாரங்கள் எடுப்பதைப் பார்க்கும்போது மாறுவேடப் போட்டிகள் நினைவுக்கு வருகின்றன. இத்தனை வேடம் போட்டு எதைச் சாதிக்க விரும்புகிறார் கமல்? கதையோடு ஒட்டாத வேடங்களால் என்ன பலன்? கதைக்காக வேடங்களா, வேடங்களுக்காகக் கதையா?

நல்ல அம்சங்கள் என்று பார்த்தால் 12ஆம் நூற்றாண்டுக் காட்சிகள் அற்புதமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. வசனங்கள் கூர்மையாக உள்ளன. ரவிவர்மனின் ஒளிப்பதிவு அபாரம். 'கல்லைக் கண்டால்' பாடல் அருமை. தலித் தலைவர் பூவராகவன் வரும் காட்சிகள் கூர்மையான சமூக - அரசியல் சலனங்களுடன் வெளிப்பட்டிருக்கின்றன. வெவ்வேறு குரல், வெவ்வேறு உடல் மொழி என்று வித்தியாசம் காட்டியிருக்கும் கமலின் அபாரமான நடிப்புப் பற்றித் தனியே சொல்ல வேண்டியதில்லை.

இவற்றுடன், தோட்டா தரணியின் வேலைப்பாடுகள், கிராஃபிக்ஸ் ஜாலங்கள், தேவி ஸ்ரீபிரசாத்தின் பின்னணி இசை, கோடிக்கணக்கில் பனத்தைக் கொட்ட அஞ்சாத தயாரிப்பாளர் எனப் பல சாதகமான அம்சங்கள் இருந்தும் தசாவதாரம் தரும் ஒட்டுமொத்த அனுபவம் ஏமாற்றமே.

ஏற்கனவே சாதித்த விஷயங்களில் திருப்தி அடையாமல் தன் தேடலை விரித்துக்கொண்டே போகும் கமலின் இந்தப் படம் அவரது கடின உழைப்புக்காகவும் துணிச்சலுக்காகவும் பேசப்படும். ஆனால் பத்து வேடங்களுக்கும் தவிர்க்க முடியாத முக்கியத்துவம் இருக்கும் வகையில் திரைக்கதையைச் செதுக்கியிருந்தால் இந்த உழைப்பு சிறந்த படமாகப் பரிமளித்து வரலாற்றில் சிறப்பான இடம் பிடித்திருக்கும்.

மேலும் June 16th, 2008

Previous:    முடிந்தும் முடியாமல் ...காவேரி!


மேலும்
Flowers - Many Congratulations R

Online Homeopathy Consulting!
BSE/NSE Live
Horoscope with 10 Year's Prediction
 

Copyright © 2008, Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Phone: 91-44- 420 24601; 420 71942; 420 71943 - cibs@chennaionline.com - Copyright and Disclaimer - Privacy Policy