குசேலன் படம் தொடங்கப்பட்ட சமயத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த இயக்குநர் பி. வாசு, அதன் பிறகு படம் பற்றி வாயே திறக்கவில்லை. பொதுவாகத் தான் இயக்கும் படத்தின் கதையையும் படப்பிடிப்பின்போது நடக்கும் சம்பவங்களையும் வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்ளும் பழக்கம் உடையவர் வாசு. ஆனால் அவரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் குசேலன் படம் பற்றி மூச்சுவிடாமல் இருந்தார்.
இரு மொழிகளில் தயாராகும் குசேலன் படத்தை எண்பத்தி இரண்டே நாட்களில் முடித்துவிட்ட வாசு, நேற்று (ஜூன் 18) பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். குசேலன் பற்றி என்னென்னவோ செய்திகள் வருகின்றன. அதையெல்லாம் படிக்கும்போது இப்படியெல்லாம் என் படத்தில் இருக்கிறதா? என்று எனக்கே வியப்பாக இருக்கிறது என்றார் வாசு.
குசேலன் பாடல்கள் பற்றி சுவையான ஒரு சம்பவத்தைப் பகிர்ந்துகொண்டார் இயக்குநர். பாடல்கள் ரஜினிக்கு மிகவும் பிடித்துவிட்டனவாம். ஆனால் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷைப் பார்த்ததும் அவர் அதிர்ந்து போனாராம். இவர்தான் இசையமைப்பாளரா, நம்பவே முடியலயே என்றாராம் திரும்பத் திரும்ப. இம்மாதம் 30-ந் தேதி சென்னையில் ஆடியோ வெளியீட்டு விழா நடக்கும் என்றார் வாசு.
இரு மொழிகளிலும் கிட்டத்தட்ட 32 நடிகர் நடிகைகள் நடித்திருக்கிறார்கள். சரி, படம் எப்போது ரிலீஸ்? ஜுலை இறுதியில் குசேலன் திரையரங்குக்கு வந்துவிடுவான் என்று தெரிகிறது.
|