குசேலன் படத்திற்காக பலமுறை பத்திரிகையாளர் சந்திப்புகள் நடந்திருக்கிறது. ஆனால் ஒரு முறைகூட படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர், நடிகைகள் பத்திரிகையாளர்கள் முன் வந்ததில்லை.
 படத்தின் இயக்குனர் பி.வாசுவே குசேலன் குறித்த எல்லா தகவல்களையும் பகிர்ந்து கொண்டார். ஆனால், திடீரென்று குசேலன் ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு வரும்படி நிருபர்களுக்கு அழைப்பு வர, ஆசையோடு போனவர்களுக்கு அதிர்ச்சி.
இந்த முறையும் பி.வாசு மட்டுமே பேசிக் கொண்டிருந்தார். சாந்தி திரையரங்கில் நடந்த படப்பிடிப்புக்கு முதல் நாள் இரவே ரஜினி வந்து நடித்துவிட்டு போய் விட்டாராம். அவர் போகட்டும். பசுபதி, மீனாவை கூட கண்களில் காட்டவில்லை. ரஜினி நடித்த முதல் நாள் காட்சியை மட்டும் அங்கிருந்த டெக்னீஷியன்களிடம் பேசி கறக்க முடிந்தது.
ரஜினி நடித்த படம் சாந்தி திரையரங்கில் திரையிடப்படுவது போல் காட்சி. அந்த முதல் நாள் காட்சிக்கே ரஜினியும் மாறு வேடத்தில் வந்து உட்காருவாராம். இப்படி ஒரு காட்சியை எடுத்துவிட்டு அவரை அனுப்பிய மறுநாள்தான் பத்திரிகையாளர் சந்திப்பு.
இரண்டாயிரம் ஜுனியர் ஆர்ட்டிஸ்டுகளுடன், நிஜ ரஜினி ரசிகர்கள் 400 பேரையும் அழைத்து வந்து படமாக்கிக் கொண்டிருந்தார் பி.வாசு. பொதுவாக கட்-அவுட்டுக்கு பால் ஊற்றுகிற காட்சியென்றால் சுண்ணாம்பு தண்ணீரை கலந்து ஊற்றி எடுப்பார்கள். இங்கே நிஜமாகவே லிட்டர் லிட்டராக பாலை ஊற்றினார்கள். படத்தின் கலெக்ஷன் தயாரிப்பாளரின் வயிற்றில் பால் வார்க்கும் என்பதால்தான் அப்படி செய்தார்களோ என்னவோ? (டிஎன்எஸ்)
|