தமிழ் சினிமாவில் கதைத் திருட்டு என்கிற விஷயம் பெரிய பிரச்சனையாகவே இருக்கிறது. தசாவதாரம் கதை என்னுடையது என்று நீதிமன்றத்துக்குப் போன இளைஞர், படமே வெளிவந்த பின்பும் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறார். இதற்கிடையில் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கவிருக்கும் பந்தயம் படத்தின் கதை என்னுடையது என்று நீதிமன்றத்தை நாடியிருக்கிறார் சுரேஷ் என்ற இயக்குனர்.
 இவர் எஸ்.ஏ.சி.யிடம் 15 ஆண்டுகளாக உதவி இயக்குனராக வேலை பார்த்தவராம். தெலுங்கில் ஜுனியர் என்.டி.ஆர் நடிக்க நாகா என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கியவர். அதன்பின் எஸ்.ஏ.சி.யின் அழைப்பின் பேரில் சென்னை வந்து விஜய்க்காக ஒரு கதையைத் தயாரித்தாராம். அதை முழு வசனத்துடன் எழுதி எஸ்.ஏ.சி.யிடம் கொடுத்ததாகவும், அந்த கதையைத்தான் இப்போது பந்தயம் என்ற பெயரில் எஸ்.ஏ.சி. எடுப்பதாகவும் குற்றம் சாட்டுகிறார் சுரேஷ். இதை நிருபிக்கும் விதத்தில் பல ஆதாரங்களை நீதிமன்றத்திலும் சமர்ப்பித்திருக்கிறாராம்.
சட்டத்தை வைத்துப் பல வெற்றிப் படங்கள் எடுத்தவர் எஸ்.ஏ.சி. இப்போது அவரே சட்டத்தின் முன் நிற்கிறார். தீர்ப்பு எப்படி இருக்குமோ?
|