சுந்தர்
சி நடித்த தலைநகரம், அர்ஜுன் நடித்த மருதமலை ஆகிய
இரண்டு வெற்றிப் படங்களுக்குப் பிறகு சுராஜ் இயக்கும்
படம் படிக்காதவன். பொல்லாதவன். யாரடி நீ மோகினி படங்களை
அடுத்து தனுஷ் நடிக்கும் படம், தாமிரபரணி படத்திற்குப்
பிறகு விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படம். ஏற்கனவே
பெரிய வெற்றிகளைப் பெற்ற கூட்டணி, படிக்காதவன் மூலம்
அடுத்த வெற்றியை குறிவைத்து இணைகிறது.இதில் தனுஷ் -
தமன்னா முதன் முறையாக நடிக்கிறார்கள். இதேபோல் தனுஷ்
படத்தில் முதல் முறையாக வடிவேலு நடிக்கிறார். 'அட்டாச்
ஆறுமுகம்' என்ற காமெடி ரோலில் பின்னி எடுப்பதுடன் படம்
முழுக்க வருகிறார். தனுஷ் படங்களிலேயே அதிக பொருட்
செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்படும் படம் இதுதானாம்.
சென்னை கிண்டியில் உள்ள கேம்ப-கோலா வளாகத்தில்
ரங்கநாதன் தெரு போன்ற பரபரப்பு மிகுந்த சாலையை
இப்படத்திற்காக செட்டாக அமைத்திருக்கிறார்கள். கடைகள்,
கட்டடங்கள் எல்லாம் மிகவும் தத்ரூபமாக
அமைந்திருக்கின்றன. 25 லட்ச ரூபாய் செலவில்
நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் இரண்டு மாதங்கள்
வேலை செய்து இதனை உருவாக்கி உள்ளார்களாம். இந்த
அரங்கத்தில் படப்பிடிப்பு தொடங்கி, தொடர்ந்து
விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும்
500-க்கும் மேற்பட்ட துணை நடிகர்-நடிகைகள்
பணிபுரிகிறார்கள்.
தனுஷ், தமன்னா, வடிவேலு, சுமன், ஷயாஜி ஷிண்டே, அகுல்
குல்கர்னி, நிரோஷா, சரண்யா, மயில்சாமி, கணேஷ்,
சுமன்ஷெட்டி, மதன்பாப், மணிகண்டன், கீர்த்தனா,
தேவதர்ஷினி, கராத்தே ராஜா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இசை மணிஷர்மா, கதை திரைக்கதை வசனம் எழுதி பரபரப்பாக
இயக்கி வருகிறார் சுராஜ். |