|
நம்மைச் சுற்றி நடப்பதைச் சற்று நேரம்
உற்றுப்பார்த்தால், எத்தனை அதிசயங்கள் உள்ளன என்பதை
அறிந்துகொள்ளலாம். நாமே ஒரு அதிசயம். நமது வாழ்க்கை
அதைவிடப் பெரிய அதிசயம். பூமி, சூரியன், சந்திரன்,
நட்சத்திரங்கள், மலை, ஆறு, மரம், குருவி, பிறப்பு,
மரணம்....எத்தனை கோடி அதிசயங்களைப் படைத்திருக்கிறான்,
பாருங்கள்? அமெரிக்காவில் அண்மையில் ஒரு அதிசயம்
நடந்தது பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்களா என்பது
எனக்குத் தெரியவில்லை. அல்சிடெஸ் மொரேனொ (Alcides
Moreno). வயது 37. அடுக்குமாடிக் கட்டிடங்களில் ஜன்னல்
கழுவும் வேலை பார்த்து வந்தார். டிசம்பர் 7-ஆம் தேதி
வழக்கம்போல, அவர் நியூ யார்க் மன்ஹட்டனில் ஒரு
அடுக்குமாடிக் கட்டிடத்தின் 47 -ஆவது மாடியில்
வெளிப்புறம் ஒரு உயரமான மேடை மீது அமர்ந்து ஜன்னல்
கழுவிக்கொண்டிருந்தார். திடீரென்று அந்த மேடை
சரிந்தது. கீழே தறையில் வந்து வீழ்ந்தார்.
அவரது சகோதரர் எட்கர் (வயது 30) அவருடன் அதே வேலை
செய்துகொண்டிருந்தார். 16 அடி அகலமுள்ள சாரம் சரிந்து
விழுந்து அவர் உயிரிஇழந்தார்.
பிழைத்தார்
அதிசயம். மொரேனொ பிழைத்துக்கொண்டார்!! தலைகீழாக
விழுந்தவர், நிமிடங்களில் எழுந்து உட்கார்ந்தார். நியூ
யார்க் ப்ரெபிட்டெரியன்-வெயில் கார்ணெல்
மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைக் குழுவினர் விரைந்து
வந்தார்கள். அவரது மூளை, நெஞ்சு, வயிற்றுப் பகுதிகளில்
கடுமையான காயம் ஏற்பட்டிருப்பதைப் பார்த்தார்கள். விலா
எலும்புகள், கை, கால்களில் எலும்பு முறிவு
ஏற்பட்டிருந்ததைப் பார்த்தனர். மருத்துவமனையில் ஆறு
வாரம் சிகச்சை. பதினாறு அறுவைச் சிகிச்சைகள்.
விபத்துக்குப் பிறகு மருத்துவமனைக்குக்
கொண்டுசென்றதும், அறுவைச்சிகிச்சை அறைக்கு
அழைத்துச்செல்ல நேரம் ஆகும் என்பதால், அவசரச்
சிகிச்சைப் பிரிவிலேயே வயிற்றில் அறுவைச்சிகிச்சை
நடத்தினார்கள்.
கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 18) அவர்
மருத்துவமனையிலிருந்து உடற்பயிற்சி மையத்துக்கு
அனுப்பிவைக்கப்பட்டார். பதினைந்து மருத்துவர்களும்,
செவிலியர்களும் அவரை வழியனுப்பிவைத்தார்கள்.
அவர்களுக்கு மொரேனொ வாயார, மனமார நன்றி
தெரிவித்துக்கொண்டார்.
நிற்க. அவர் நிற்க ஆரம்பிக்கவில்லை. பயிற்சிமையத்
தலைவர் அனுமதித்த பிறகுதான் அவர் நிற்பார். பின்னர்
ஒவ்வொரு அடியாக எடுத்துவைப்பார். வெகுவிரைவில் அவர்
முழு குணமடையவேண்டுமெனெ நாமும் விரும்புகிறோம். |