"இதற்குமேல் என்னால் தாங்க முடியாது. எவ்வளவுதான்
முயன்றாலும் திரும்பத் திரும்ப அதே எண்ணங்கள்தான்
மனதிற்குள் வந்து நுழைகின்றன. என்னால் என்னதான் செய்ய
முடியும்?", என்று அங்கலாய்க்கிறார்... இந்தியாவின்
மட்டுமல்ல ஆசியாவிலேயே இன்று முதல் இடத்தில் உள்ள
சானியா மிர்ஸா.21 வயதே ஆன இளம்பெண் அவர். எந்த
அளவுக்குத்தான் அவரால் தேவையற்ற கவலைகளை தாங்கிக்
கொள்ள முடியும். அவர் டென்னிஸ் விளையாட
ஆரம்பித்ததிலிருந்தே, அவருக்கு எண்ணற்ற சோதனைகள்.
எப்படியோ இதுவரை தாங்கிக் கொண்டு வந்தார். இனிமேல்
தாளமுடியாது என்று இப்போது கைவிரித்துவிட்டார்.
விளைவு? ...வீனஸ் வில்லியம்ஸ், செரீனா வில்லியம்
உட்பட பல்வேறு பிரபல டென்னிஸ் வீராங்கனைகள் கலந்து
கொள்ளும் நமது பெங்களூரு ஓபன் டென்னிஸ் போட்டிகளில்
சானியாவை பார்க்க முடியாது. இவ்வளவு சர்ச்சைகளையும்,
அதனால் ஏற்படும் மன அழுத்தத்தையும் என்னால் தாங்கிக்
கொள்ள முடியவில்லை என்று அவர் மனம்விட்டு
பேசியிருக்கிறார். ஒவ்வொரு தடவை நான் இந்தியாவில்
விளையாடும்போதும், ஏதேனும் ஒரு சர்ச்சை தோன்றுகிறது.
சும்மாயிராமல் சிலர், உப்புசப்பில்லாத சர்ச்சைகளை
கிளப்பிவிடுகிறார்கள். அதனால் விளையாட்டில் கவனம்
செலுத்த முடியவில்லை. எனவே பெங்களூரு போட்டிகளில்
கலந்து கொள்ள வேண்டாம் என்று எனது விளையாட்டுக்களை
கவனித்துக் கொள்ளும் நிர்வாகிகள் என்க்கு ஆலோசனை
கூறினார்கள்.
நம் நாட்டிற்கு பெருமை சேர்த்துவரும் ஒரு விளையாட்டு
வீராங்கனை எப்படி ஸ்கர்ட் அணிந்து கொள்கிறார் என்றோ,
அவர் எங்கு செல்கிறார் என்றோ, யாருடன் பேசுகிறார் என்றோ
தேவையில்லாத விஷயங்களை கிளப்பி, அவருடைய டென்னிஸ்
வருங்காலத்தையும் நம்நாட்டிற்காக அவர் செய்யவிருக்கும்
சாதனைகளையும் கெடுக்கவேண்டாம் என்பதே நல்லவர்களின்
விருப்பம்.... |