ஹோபர்ட் பிப்-26. முத்தரப்பு ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்தியா-இலங்கையிடையேயான இன்றைய போட்டியில், ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இந்தியா வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட இறுதிச் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. 26 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா ஏற்கனவே இறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டது.
இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று இந்தியா-இலங்கை மோதிய கடைசி லீக் சுற்று போட்டி நடைபெற்றது. இதில் டாசில் வென்ற இந்தியா முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது.
இலங்கை அணி 47.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன் எடுத்தது. அந்த அணியின் கபுகடேரா 57 ரன் எடுத்தார். ஜெயசூர்யா 34 ரன்களும் சங்ககாரா 33 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள்.
இந்தியா வெற்றிபெற 180 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு முதலில் ராபின் உத்தப்பாவும், சச்சின் டெண்டுல்கரும் களமிறங்கினர். 11 ரன்னில் உத்தப்பா ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து வந்த கவுதம் கம்பீர், சச்சின் இணைந்து அணியின் ஸ்கோரை தங்களது சிறப்பான பேட்டிங் மூலம் உயர்த்தினர். 54 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் குவித்த சச்சின் டெண்டுல்கர் முரளீதரன் பந்து வீச்சில் சில்வாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். கம்பீர் தனது அரை சதத்தை நிறைவு செய்து, 64 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
32.2 ஓவர்களில் இந்தியா தனது இலக்கை எட்டி, ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
|