ரோபோவுக்கு முன்பாக இன்னொரு படத்தில் நடித்து, குசேலன் கடனை அடைக்கப்போகிறார் ரஜினி என்ற வதந்திகள் கோலிவுட்டில் உலவ ஆரம்பித்திருக்கின்றன. இதை ஏ.ஆர். முருகதாஸ் இயக்குவார் என்றும் அந்த வதந்திக்கு இலவச இணைப்பு கொடுக்கிறார்கள்.
இப்படியெல்லாம் ஆளாளுக்குப் பேசிக்கொண்டிருக்க, அடுத்த மாதம் அமெரிக்காவில் ரோபோ படப்பிடிப்பைத் துவங்க இருக்கிறாராம் ஷங்கர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்றிருந்த ரஜினிக்கு, அங்கு வைத்தே சில காஸ்ட்யூம்களும், கெட்டப்புகளும் முடிவு செய்யப்பட்டன. புகைப்பட ஷுட்டிங்கும் எடுக்கப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து செப்டம்பர் 15-ந் தேதியில் இருந்து படப்பிடிப்பைத் துவங்கப் போகிறார் ஷங்கர். ஐஸ்வர்யா கால்ஷீட்டும் இருப்பதால், இரண்டு பாடல்களை பிரமாண்டமாகப் படம் பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதாம்.
ஏன் இந்தத் தேதிகளைத் தேர்வு செய்ய வேண்டும்? வேறொன்றுமில்லை. ஜோதிடத்தின் மேல் மிகுந்த நம்பிக்கை கொண்ட ரஜினியே முடிவு செய்த தேதி இது. இந்தத் தேதிக்குப் பிறகுதான் பொதுவாகவே கெட்ட கிரகங்கள் விலகுகின்றனவாம். அதிலும் ரஜினியைப் பொருத்தவரை ஆகஸ்ட்டிலிருந்து செப்டம்பர் 15 வரை ரொம்பவே படுத்தும் என்று அட்வைஸ் செய்யப்பட்டிருக்கிறது. அதைத்தான் நேரில் பார்க்கிறோமே?