சாமி இயக்கும் சரித்திரம் படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் துவங்கிவிட்டது. இந்த சாமிக்கு நேரில் வந்து வரம் கொடுத்திருக்கிறார் இசைஞானி இளையராஜா.
ஒவ்வொரு வருடமும் புரவிப்பாளையத்தில் அமைந்துள்ள தனக்குப் பிடித்தமான மகான் ஒருவரின் சமாதிக்கு வந்து வணங்குவது ராஜாவின் வழக்கம். இந்த முறையும் அதற்காக பொள்ளாச்சிக்கு வந்திருந்தவர், அருகில் சரித்திரம் படப்பிடிப்பு நடப்பதைக் கேள்விப்பட்டு நேரடியாகப் படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கே வந்துவிட்டாராம். இளையராஜாவின் திடீர் விசிட்டை நம்ப முடியாத அனைவரும் திகைத்துப் போய் நிற்க, "படம் நல்லா வரணும்" என்று ஆசிர்வாதம் செய்தாராம் இளையராஜா.
சரித்திரத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் ராஜ்கிரண், இளையராஜாவை வரவேற்று வணங்கிய பின், சாமியும் வணங்கினாராம். அப்போது உங்களின் இசையில் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்று தனது விருப்பத்தைச் சொல்ல, அதுக்கென்ன செஞ்சுட்டா போச்சு என்று புன்முறுவலோடு சம்மதித்தாராம் ராஜா.
முதல் ஷாட் வைப்பதற்கு முன்பு எதிர்பாராமல் கிடைத்த ஆசீர்வாதத்தை நல்ல சகுனமாக நினைத்து சந்தோஷத்தில் திளைக்கிறது மொத்த யூனிட்டும்.