ஏ.ஆர். ரஹ்மான், 'விக்கு' வினாயகராம் என்று மாபெரும் இசை மேதைகள் வந்திருந்தார்கள் வெண்ணிலா கபடி குழு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு. அதற்குக் காரணம் இருந்தது. இப்படத்தின் இசையமைப்பாளர் செல்வகணேஷ், வினாயகராமின் இசை வாரிசு. கபடி விளையாட்டில் 'கேட்ச்' பிடிக்கிற மாதிரி மனசைக் கவ்விக்கொண்டது கணேஷின் இசையில் திரையிடப்பட்ட இரண்டு பாடல்களும்!
"வினாயகராம் குடும்பமே ஒரு ஞானக்குடும்பம். அவரது வீட்டிலிருந்து இந்திய சினிமாவுக்கு ஒரு அருமையான மியூசிக் கம்போசர் கிடைச்சிருக்கார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்" என்றார் ஏ.ஆர். ரஹ்மான்.

விழா நடந்த தினமான அக்டோ பர் 2 ந்தேதி, காந்தி ஜெயந்தி என்பதால், காந்தியின் கொள்கைகளை நினைவூட்டினார் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் இராம. நாராயணன். "இந்தியாவின் இதயம் கிராமங்களில்தான் இருக்கிறது என்றார் மகாத்மா காந்தி. சமீபத்தில் வந்து பெரும் வெற்றி பெற்ற படங்களும் கிராமத்துக் கதைகளை உள்ளடக்கியவைதான். பருத்தி வீரன், சுப்ரமணியபுரம் வரிசையில் இந்த வெண்ணிலா கபடி குழு படமும் இடம்பிடிக்கும்" என்றார்.
சீயான் விக்ரம், டைட்டிலுக்குப் பொருத்தமாக கபடி கபடி கபடி... என்று பாடியபடியே தனது உரையை முடிக்க, அரங்கத்தில் விசில் சத்தம் காதைப் பிளந்தது.
மேடையில் பேசியவர்களின் வார்த்தைகளில் இருந்து கிரகித்துக்கொண்ட முக்கியமான விஷயம், லகான் படத்திற்கு முன்பே இந்தக் கதையை ஸ்கிரிப்ட் வடிவில் வைத்திருந்தாராம் படத்தின் இயக்குனர் சுசீதரன். தென்னகத்திலிருந்து ஒரு லகான் என்றார்கள் இந்தப் படத்தை. சந்தோஷம்தானே?