விசு டைப்பில் குடும்பக் கதைகளை இயக்கிவருபவர் டி.பி. கஜேந்திரன். திடீரென்று டிராக் மாறி, காமெடிக் கதை எடுக்கிறேன் பேர்வழி என்று சீனாதானா 007 என்ற படத்தை எடுத்து பிரசன்னாவின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போட்டவர். தற்போது இவர் எடுத்து வரும் 'மகனே என் மருமகனே' என்ற படத்தில் விவேக், மிதுன் ஆகிய இருவரும் இரட்டை ஹீரோக்களாக நடித்துவருகிறார்கள். இப்படத்தில் உடல் உறுப்புகளை தானம் செய்வதை மையமாக வைத்திருக்கிறாராம் இவர்.
இதுவரைக்கும் ஓ.கே. ஆனால் சமீபத்தில் நிகழ்ந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தைத் தனது படத்தோடு முடிச்சுப் பேதட்டு விளம்பரப்படுத்திக் கொள்வதுதான் நெருடல். விபத்தில் மரணம் அடைந்த ஹிதேந்திரன் என்ற இளைஞனின் சோகம் நாடறிந்த விஷயம். விபத்தில் இறந்த தனது மகனின் இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகளைக் குறிப்பிட்ட நேரத்தில் அகற்றிப் பிறருக்கு தானம் செய்தார்கள் அவனது பெற்றோர்கள். இந்த ஈர சம்பவத்தின் வேதனை இன்னும் மறையவில்லை. அதற்குள், எனது படத்தின் கருவும் இப்படி ஒரு உடல் தானம் சம்பந்தப்பட்ட விஷயம்தான் என்று பேட்டியளித்திருக்கிறார் டி.பி. கஜேந்திரன். ஹிதேந்திரனின் அகால மரணமும், அவனது பெற்றோர்களின் புனிதமான தியாகமும் வெறும் பிலிம் சுருளுக்குள் அடங்கிவிடும் விஷயங்கள் அல்ல.
கஜேந்திரன் போன்றவர்கள் இனிமேலாவது தமது விளம்பரங்களுக்கு இது போன்ற வேதனைகளையும் தியாகத்தையும் பயன்படுத்திக்கொள்ளாமல் இருக்க வேண்டும்.