தமிழ் சினிமாவில் எத்தனையோ காதல் கதைகள். இதில் மறுபடியும் காதல் என்றொரு படத்திற்கு பிரமாண்டமாகப் பூஜை போட்டார்கள். வேதா என்ற படத்தை தயாரித்த வாசு பாஸ்கர் இப்படத்தில் பிரமோஷன் ஆகி, தயாரிப்பதோடு இயக்கவும் செய்கிறார். இவரோடு இணைந்து படத்தைத் தயாரிப்பது பாலிவுட் சினி புரடக்ஷன். இந்நிறுவனம் பாலிவுட்டில் நிறைய படங்களை எடுத்திருக்கிறதாம். பொதுவாக பாலிவுட்டிலிருந்து தமிழுக்கு வருகிற தயாரிப்பாளர்கள் வெற்றி பெறுவதில்லை என்றொரு சென்ட்டிமென்ட் இருக்கு. இதை நான் நிச்சயம் மாற்றிக் காட்டுவேன் என்றார் அந்நிறுவனத்தின் இயக்குனர் சரோஜா பாபி.
அனிருத் என்ற புதுமுகம் நடிக்கிறார். இவர் ஏற்கனவே பல மலையாளப் படங்களில் நடித்தவராம். இரண்டு கதாநாயகிகளில் ஒருவரான ஜோஸ்னாவுக்கு முதல் படத்திலேயே பலமான ஆசீர்வாதம் கிடைத்திருக்கிறது. ஜோஸ்னாவின் அம்மா சரோஜா, பிலிம் இன்ஸ்டியூட்டில் ரஜினி, சிரஞ்சீவியோடு படித்தவராம். மகளைத் தமிழில் அறிமுகப்படுத்துவதற்கு முன் ரஜினியிடம் ஆசி வாங்க அழைத்துச் சென்றாராம். அவரும் வாயார வாழ்த்தியதுடன், உன் மகளைப் பார்த்துக்கொள்வது எங்க பொறுப்பு என்றாராம்.
காலையில் இருந்தே பூஜைக்கு ரஜினி வருவார் என்று வதந்திகள் எழ, அத்தனை பேரின் கண்களும் வாசலை நோக்கியே இருந்தன. ஆனாலும் வர வேண்டிய நேரத்தில் வரவில்லை அவர்.