இந்த தீபாவளி அத்தனை சுரத்தில்லாமல்தான் நகரும் போலிருக்கிறது. விஜயின் வில்லு பட வேலை இன்னும் மிச்சமிருக்கிறது. எப்படியாவது தீபாவளிக்கு வந்துவிட வேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்த சிலம்பாட்டம், சிம்புவின் தலையீட்டால் அடிக்கடி ரீ ஷுட் செய்யப்பட்டு வருவதால், தீபாவளிக்கு வர மாட்டோ ம் என்று தெளிவாகக் கூறிவிட்டார்கள். தனுஷின் படிக்காதவன் வந்துவிடும் என்று நினைத்துக்கொண்டிருந்தால், அதுவும் தீபாவளிக்கு இரண்டு வாரங்கள் கழித்துதான் வருகிறதாம்.
கந்தசாமி, விக்ரமே நினைத்துப் பார்க்காத அளவுக்கு இழுத்துக் கொண்டே போகிறது. இந்த தீபாவளிக்கு எப்படியாவது கொண்டு வந்துவிடுங்கள் என்று தாணு எவ்வளவோ பிரஷர் கொடுத்தும் சுசி கணேசனால் முடியவில்லை. இன்னும் படப்பிடிப்பு முடியவே நிறைய நாட்கள் இருக்கின்றனவாம்.
ரஜினி, கமல், விஜய், விக்ரம், தனுஷ், சிம்பு இப்படி முக்கியமானவர்கள் ஒதுங்கிக்கொண்டாலும், ஆறுதல் தர வருகிறார் சூர்யா. வாரணம் ஆயிரம் நிச்சயம் ரிலீஸ் என்கிறார்கள். ஆக இந்த வருடம் தனிக்காட்டு ராஜா சூர்யாதான்! கூடுதலாக இன்னொரு தகவல். சூர்யாவின் கால்ஷீட் கேட்டுப் போகிறவர்களுக்கு அதிர்ச்சியான செய்தியும்கூட. 2012இல்தான் கால்ஷீட் தர முடியுமாம் சூர்யாவால். அதுவரைக்கும் கதையோடு இயக்குனர்களையும் முடிவு செய்து அக்ரிமென்டும் போடப்பட்டுவிட்டதாம்.