கடந்த ஞாயிறு அன்று சென்னையில் தன்னுடைய பிறந்த நாளை எளிமையான முறையில் கொண்டாடிய சினேகா, பிறந்த நாளை ஒட்டிப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். கவர்ச்சியாக நடிப்பது, விருதுகள் வாங்குவது, திருமணம் என்று பல கேள்விகளுக்கும் தனது மந்திரப் புன்னகை மாறாமல் பதிலளித்தார்.
முன்னதாக, கீழ்பாக்கத்தில் உள்ள பாலவிஹார் ஆதரவற்றோர் இல்லத்துக்கு அரிசி, பருப்பு மூட்டைகளை வழங்கினார்.
தேசிய விருது வாங்க வேண்டும் என்பதே என் லட்சியம் என்று சொன்னவர், இப்போது நடிக்கும் எந்தப் படத்திலும் அதுபோன்ற சவாலான வேடம் இல்லை என்பதையும் தெரியப்படுத்திவிட்டார். கையில் ஆறு படங்கள் இருக்கின்றனவாம். எல்லாமே ஜாலியான வேடங்கள்.
'வைஜெயந்தி ஐ.பி.எஸ்' ரீமேக் படத்தில் போலீஸ் வேடத்தில் நடிப்பதற்காகப் பயிற்சிப்போகிறாராம். விஜயசாந்தி போல நீங்களும் அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்டதற்கு, ஆக்ஷன் வேடத்தில் நடிப்பதால் அரசியலுக்கு வருவேன் என்பது அர்த்தமில்லை என்றார்.
கவர்ச்சி என்ற பெயரில் ஆபாசமாக நடிக்க மாட்டேன் என்று சொன்னவர், பாண்டி படத்தில்கூட எல்லை மீறி நடிக்கவில்லை என்று சொன்னார்.
விபத்தில் மூளை செயலிழந்த ஹிதேந்திரனின் இதயம் இன்னொரு சிறுமிக்குப் பொருத்தப்பட்ட செய்தி குறித்தும் தனது உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டார். இந்தச் சம்பவம் என்னைப் பெரிதும் உருக வைத்தது. இதய தானத்துக்கு ஒப்புக்கொண்ட அவரது பெற்றோருக்கு தலைவணங்குகிறேன் என்றார் சினேகா. இந்தச் சம்பவம் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது என்றூம் அவர் கூறினார்.
திருமணத்தைப் பற்றிய கேள்விக்குப் பதிலாக ஒரு புன்னகையை உதிர்த்தவர், கல்யாணத்துக்கு இப்போ என்ன அவசரம் என்று கேட்டார். கல்யாணம் செய்துகொள்வதாக இருந்தால் உங்களிடம் சொல்லிவிட்டுத்தான் செய்துகொள்வேன் என்றும் சொன்னார்.
Click here for Archives