1980-களில் தமிழ் சினிமாவில் கோலோச்சிய சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கைக் கதை படமாகிறது. இந்திப் படத் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் இச்சம்பவத்தை கொண்டு தமிழிலும் இந்தியிலும் சில்க்கைப் பற்றிய படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளார். பல்வேறு படங்கள், டிவி தொடர்களை தயாரித்துவரும் ஏக்தா கபூர் இந்தி நடிகர் ஜிதேந்திராவின் மகள்.
சில்க் ஸ்மிதா புகழின் உச்சியில் இருந்தபோது ரஜினி, கமல் நடிக்கும் படங்கள் உள்ளிட்ட எல்லாப் படங்களிலும் அவரது கவர்ச்சி நடனம் இடம்பெற்றாக வேண்டும் என்பது எழுதப்படாத விதி. சில படங்களில் கதாநாயகியாகவும் பல படங்களில் துணைக் கதாநாயகியாகவும் எண்ணற்ற படங்களில் வெறும் கவர்ச்சி நடனக் காட்சியிலும் நடித்த ஸ்மிதா பத்து ஆண்டுகளுக்கும் மேல் ஓய்வொழிச்சல் இல்லாமல் உழைத்தார். அவரைப் பற்றிய செய்தியோ கிசுகிசுவோ வராமல் பத்திரிகைகளின் சினிமாப் பக்கங்கள் வருவது அரிது. பெயர், புகழ், பணம் என்று எல்லாம் இருந்தும் சில்க் ஸ்மிதாவின் சொந்த வாழ்க்கை துயரம் நிரம்பியது. தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்குத் துயரத்தின் பிடியில் இருந்தார் இந்த நட்சத்திரம். 1996இல் இவர் தற்கொலை செய்துகொண்டார். அதற்கான காரணம் என்ன என்பது இன்று வரை தெளிவாகவில்லை.
புகழ் வெளிச்சமும் சோகங்களும் மர்மங்களும் நிரம்பிய சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கைக் கதையை திரைப்படமாக்க ஏக்தா கபூர் முடிவுசெய்திருக்கிறார். சில்க் ஸ்மிதாவின் வேடத்தில் பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத் நடிக்கக்கூடும் என்று தெரிகிறது.
சில்க்கின் புகழ் என்னும் அற்புதமும் அவரது தனிப்பட்ட வாழ்வு என்னும் மர்மமும் இந்தப் படத்தில் துல்லியமாகப் பிரதிபலிக்குமா?
Click here for Archives