
சென்னை, நவ.5 (டிஎன்எஸ்)
தமிழக அரசின் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கும் திட்டத்தின்கீழ், 5ஆம் கட்டமாக 2009-2010 ஆண்டில், மேலும் 40 லட்சம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கொள்முதல் செய்யலாம் என்றும் 2010 பிப்ரவரி தொடங்கி டிசம்பர் வரை பொது மக்களுக்கு வழங்குவது என்றும் முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் அமைக்கப்பட்ட இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்குவது குறித்த சட்டமன்றக் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவின் 16ஆவது கூட்டம் நவம்பர் 5ஆம் தேதி காலை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இன்று (5.11.2009) நடைபெற்ற சட்டமன்றக் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டத்தில், தமிழக அரசின் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கும் திட்டத்தின்கீழ், நான்காம் கட்டத்தில் 8 லட்சத்து 37 ஆயிரத்து 500 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கூடுதலாகக் கொள்முதல் செய்யலாம் என்றும்;
ஐந்தாம் கட்டமாக 2009 - 2010 ஆண்டில், மேலும் 40 லட்சம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளைக் கொள்முதல் செய்யலாம் என்றும், இக்கொள்முதல் தொடர்பாக 2009 நவம்பர் மாத முதல் வாரத்தில் சர்வதேச ஒப்பந்தப் புள்ளிகளைக் கோருவது என்றும், 2009 டிசம்பர் மாத மத்தியில் ஒப்பந்தப் புள்ளிகளைத் திறப்பதென்றும், டிசம்பர் மாத மூன்றாம் வாரத்தில் ஒப்பந்தப் புள்ளிகளை முடிவு செய்வதென்றும்;
2010 பிப்ரவரி தொடங்கி டிசம்பர் வரை 40 லட்சம் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளையும் பொது மக்களுக்கு வழங்குவது என்றும், இத்திட்டத்தின் நான்காம் கட்டத்தில் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்குதற்கு முடிவுகள் மேற்கொண்ட போது நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளி நெறிமுறைகள் மற்றும் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கான தொழில்நுட்பக் குறியீடுகளையே தற்போதைய ஐந்தாம் கட்ட கொள்முதலுக்கும் பின்பற்றுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இலவச வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகள் வழங்கும் திட்டம் அண்ணா பிறந்த நாளானா 15.9.2006 அன்று தொடங்கி வைக்கப்பட்டு, முதற்கட்டமாக 30 ஆயிரம் இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளும், இரண்டாவது கட்டமாக 25 லட்சம் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளும், மூன்றாம் கட்டமாக 37 லட்சத்து 50 ஆயிரம் இலவச வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகளும் வழங்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து நான்காம் கட்டமாக 41 லட்சத்து 62 ஆயிரத்து 500 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கொள்முதல் செய்ய ஆணைகள் வழங்கப்பட்டு, 31.10.2009 வரை 26 லட்சத்து 81 ஆயிரத்து 899 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் பொது மக்களுக்கு விநியோகிப்பதற்காக மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளன.
நான்கு கட்டங்களிலும், மொத்தம் 2,267 கோடியே 87 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் 1 கோடியே 4 லட்சத்து 42 ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு வழங்க அனுமதிக்கப்பட்டு, 2,036 கோடியே 69 இலட்சத்து 81 ஆயிரத்து 103 ரூபாய் செலவில் இதுவரை 85 லட்சத்து 15 ஆயிரத்து 343 குடும்பங்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் மேலும் தொடர்ந்து வழங்கப்பட்டுவருகின்றன.
இக்கூட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் துணை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், சட்டமன்றக் கட்சிகளின் தலைவர்கள் டி. சுதர்சனம் (காங்கிரஸ்), சி.கோவிந்தசாமி (இந்திய கம்யூனிஸ்ட் மார்க்ஸிஸ்ட்), வை.சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்ட்), எச். அப்துல் பாசித், சட்டமன்ற உறுப்பினர், (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்), பூவை மு.ஜெகன் மூர்த்தி, சட்டமன்ற கட்சித் தலைவர் (புரட்சி பாரதம்) மற்றும் டி. ரவிகுமார், சட்டமன்ற உறுப்பினர் (விடுதலைச் சிறுத்தைகள்) ஆகியோரும்,
தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா, தலைமை செயலாளர் கே.எஸ். ஸ்ரீபதி, நிதித்துறை முதன்மைச் செயலாளர் கு. ஞானதேசிகன், தகவல் தொழில் நுட்பவியல் துறை செயலாளர் பி.டபிள்யூ.சி டேவிதார். வருவாய்த் துறை முதன்மைச் செயலாளர் என்.எஸ். பழனியப்பன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, முதன்மை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் என். சுந்தரதேவன், மற்றும் தமிழ்நாடு மின்னணு நிறுவன மேலாண்மை இயக்குநர் டாக்டர் சந்தோஷ் பாபு ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(டிஎன்எஸ்)
Nov 05, 2009
* Do not use semicolon(;)