வாஷிங்டன், நவ.4 (டிஎன்எஸ்)
இந்தியாவிலுள்ள ராணுவ பயிற்சிக் கல்லூரி மற்றும் டேனிஷ் பத்திரிகை ஒன்றின் கட்டிடங்கள் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பினர் திட்டமிட்டிருந்ததாக அமெரிக்கப் புலனாய்வு (எஃப்.பி.ஐ.) அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் கைது செய்யப்பட்ட டேவிட் கோல்மன் மற்றும் தஹவூர் ஹூசைன் ராணா ஆகியோர் அத்திட்டத்தில் இடம்பெற்றிருந்ததாக எஃப்.பி.ஐ. தெரிவித்துள்ளது.
ராணாவின் ஜாமீன் மனுவை எதிர்த்து சிகாகோ நீதிமன்றத்தில் எஃப்.பி.ஐ. தாக்கல் செய்துள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. சமுதாயத்துக்கு ராணா மிகவும் ஆபத்தானவர். அவரை வெளியில் விட்டால் நாட்டைவிட்டு வெளியேறும் வாய்ப்புள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கும்.
இந்தியா மற்றும் டென்மார்க்கில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாக ராணாவுடன் அவரது பள்ளி நண்பர் டேவிட் கோல்மனும் கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது.
(டிஎன்எஸ்)
Nov 04, 2009
* Do not use semicolon(;)