புதுடெல்லி, நவ.6 (டிஎன்எஸ்)
கோதுமைக்கான குறைந்தபட்சக் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ. 20 அதிகரிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு ரூ. 1,080 ஆக இருந்தது இந்த ஆண்டு ரூ.1,100 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டு குறைந்தபட்சக் கொள்முதல் விலை ரூ.1,080 ஆக உயர்த்தப்பட்டது. அதற்கு முந்தைய ஆண்டு ரூ.1,000 ஆக இது இருந்தது.
கடந்த ஆண்டு கோதுமை விளைச்சல் 805.8 லட்சம் டன்களாகவும் அரசு கொள்முதல் 250 லட்சம் டன்களாகவும் இருந்தது.
ரபி பருவத்தில் கொள்முதல் செய்யப்படவுள்ள இதர உணவு தானியங்களின் விலையையும் அரசு சற்றே உயர்த்தியிருக்கிறது. சிலவற்றுக்குக் கடந்த ஆண்டு வழங்கிய அதே விலையை வழங்குவது என்று முடிவு செய்திருக்கிறது. பட்டாணியின் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.30 உயர்த்தப்படுவதால் இனி குவிண்டாலுக்கு ரூ.1,760 கிடைக்கும்.
கடுகு கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ. 1,830 ஆகவும் மசூர் பருப்பின் விலை குவிண்டாலுக்கு ரூ.1,870 ஆகவும் நீடிக்கும்.
உதட்டுச்சாயம் உள்ளிட்ட சாயத் தயாரிப்புக்குப் பயன்படும் சாஃப் மலர்களின் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.30 உயர்த்தப்பட்டு ரூ.1,680 ஆக நிர்ணயிக்கப்படுகிறது.
பார்லியின் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ. 70 உயர்த்தப்பட்டு ரூ.750 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்தகவல்களை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் கூட்டத்துக்குப் பிறகு டெல்லியில் நேற்று தெரிவித்தார்.
வறட்சி, வெள்ளம் காரணமாக வேளாண் உற்பத்தி இந்த ஆண்டு குறையும் என்றாலும் உணவு தானியங்கள், எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகள், காய்கறி, பழங்கள் ஆகியவற்றின் விலை உயர்வு காரணமாக விலைவாசி ஏறிவருவதால் கோதுமைக் கொள்முதல் விலையை அரசு அதிகமாக உயர்த்தவில்லை என்று தெரிகிறது. சாகுபடிச் செலவு அதிகரித்து வரும் வேளையில் அரசின் இந்த முடிவை விவசாயிகள் வரவேற்பார்களா என்று தெரியவில்லை.
(டிஎன்எஸ்)
Nov 06, 2009
* Do not use semicolon(;)