
ஹைதராபாத், நவ.5 (டிஎன்எஸ்)
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஹைதராபாத்தில் இன்று நடக்கிறது.
பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 7 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடி வருகிறது.
இதில் முதலாவது மற்றும் 4ஆவது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியாவும், 2 மற்றும் 3ஆவது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதையடுத்து இந்த தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 5ஆவது ஒரு நாள் போட்டி ஹைதராபாத்தில் இன்று (வியாழக்கிழமை) பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது. இதையொட்டி இரு அணியினரும் நேற்று தீவிர பயிற்சி மேற்கொண்டனர்.
இந்த தொடர் ஆரம்பித்ததில் இருந்தே ஆஸ்திரேலிய அணியில் ஒவ்வொரு வீரர்களாக காயமடைந்து வெளியேறி வருகின்றனர். தொடர் தொடங்குவதற்கு முன்பாக மைக்கேல் கிளார்க், பிராட் ஹேடின், பெர்குசன், நாதன் பிராக்கன் ஆகியோர் காயத்தால் விலகினர்.
தொடர் தொடங்கிய பிறகு பிரெட்லீ, ஜேம்ஸ் ஹோப்ஸ், பீட்டர் சிடில், டிம் பெய்ன் ஆகிய வீரர்கள் தாயகம் திரும்பி விட்டனர். காயம் பிரச்சினை ஆஸ்திரேலியாவுக்கு தொடர்ந்து தலைவலியாக இருந்து வருகிறது.
இந்த சூழலில் தற்போது மேலும் ஒரு ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் காயமடைந்திருக்கிறார். அவரது பெயர் ஹென்ட்ரிகஸ். ஆல்-ரவுண்டரான இவருக்கு மொகாலி ஒரு நாள் போட்டியின் போது, பீல்டிங் செய்கையில் வலது தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால் இருவரும் நாடு திரும்ப உள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஹோப்ஸ் தொடர்ந்து ஆட முடியாத நிலை ஏற்பட்ட போது தான், ஹென்ட்ரிகஸ் சேர்க்கப்பட்டார். இப்போது அவரும் தொடரின் பாதியிலேயே வெளியேறி இருக்கிறார்.
இதை தொடர்ந்து சிடில் மற்றும் ஹென்ட்ரிகஸ் ஆகியோருக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு, நியூசவுத்வேல்ஸ் வேகப்பந்து வீச்சாளர் பர்ட் காக்லி ஆகியோர் புதிதாக அணிக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் ஞாயிற்றுக்கிழமை கவுகாத்தியில் நடக்கும் 6ஆவது ஒரு நாள் போட்டிக்குள் அணியில் இணைந்து விடுவார்கள்.
ஹென்ட்ரிகஸ் இல்லாததால் இன்றைய ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் கிளின்ட் மெக்கே களம் இறங்குவார் என்று தெரிகிறது.
கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக மொகாலி ஆட்டத்தில் ஆடாத கவுதம் கம்பீர் உடல்தகுதி பெற்றுவிட்டார். அதனால் அவர் இன்றைய போட்டியில் களமிறங்குகிறார். பலமான பேட்டிங் வரிசையை கொண்டுள்ள இந்திய அணி மீண்டும் அதிரடியை வெளிப்படுத்த வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஐதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த ஆட்டம் பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. தூர்தர்ஷன் மற்றும் நியோ கிரிக்கெட் சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
(டிஎன்எஸ்)
Nov 05, 2009
* Do not use semicolon(;)