சென்னை, நவ.5 (டிஎன்எஸ்)
ஊனமுற்றோருக்கு உதவி உபகரணங்கள் மற்றும் ஊனமுற்றோருக்கு சிறந்த வகையில் சேவை புரிந்தோருக்கு மாநில விருதுகள் ஆகியவற்றிற்கு நவம்பர் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது தொடர்பாக ஊனமுற்றோருக்கான மாநில ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஒவ்வோர் ஆண்டும், டிசம்பர் மாதம் 3ஆம் தேதி அனைத்து நாடுகள் ஊனமுற்றோர் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டும் தமிழகத்தில் ஊனமுற்றோர் தினவிழா டிசம்பர், 3ஆம் தேதி அனுசரிக்கப்படவுள்ளது.
இதனையொட்டி ஊனமுற்ற மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், ஊனமுற்றோருக்கு உதவி உபகரணங்கள் மற்றும் ஊனமுற்றோருக்கு சிறந்த வகையில் சேவை புரிந்தோருக்கு மாநில விருதுகள் ஆகியன வழங்கப்படவுள்ளன.
மிகச் சிறப்பாக பணியாற்றி, சுயதொழில் புரிந்து வரும் கை, கால் ஊனமுற்றோர், பார்வையற்றோர், காதுகேளாதோர், மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நபர்கள், கை, கால் ஊனமுற்றோர், பார்வையற்றோர், காதுகேளாதோர், மன வளர்ச்சி குன்றியோர் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோருக்கும், மிகச் சிறந்த வகையில் சிறப்புக் கல்வி, பயிற்சி அளிக்கும் சிறப்பு ஆசிரியர்கள், ஊனமுற்றோருக்கு மிகச் சிறப்பாக மறுவாழ்வு உதவிகளை அளித்து வரும் தொண்டு நிறுவனங்கள், ஊனமுற்றோருக்கு தன்னலமற்ற சேவை புரிந்து வரும் சமூகப் பணியாளர்கள், ஊனமுற்றோருக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு வழங்கி வரும் தொழிலதிபர்கள், அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், ஊனமுற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பான முறையில் கல்வி அளித்து வரும் தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து தக்க படிவத்தில் விண்ணப்பங்கள் வருகிற 20-11-2009-க்குள் வரவேற்கப்படுகிறது.
இதற்கான விண்ணப்பப் படிவங்களை தாங்கள் வசிக்கும் மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலகத்திலிருந்தோ அல்லது ஊனமுற்றோருக்கான மாநில ஆணையர் அலுவலகம், 15/1, மாதிரிப் பள்ளிச் சாலை, ஆயிரம்விளக்கு, சென்னை-600 006 என்ற அலுவலகத்திலிருந்தோ நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(டிஎன்எஸ்)
Nov 05, 2009
* Do not use semicolon(;)