Tamilவிளையாட்டு

இந்தியா – இங்கிலாந்து இடையிலான 4 வது டெஸ்ட் – மீண்டும் மைதானத்துக்குள் நுழைந்து சேட்டை செய்த ரசிகர்

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் யார் வெல்வார்கள் என்பது ஒரு பக்கம் இருந்தால், ஒவ்வொரு போட்டியின் போதும் ஜார்வோ என்னும் நபர் வருவாரா மாட்டாரா என்று எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது.

டேனியல் ஜார்விஸ் என்னும் இங்கிலாந்து நாட்டுக்காரர், இப்படி ஆட்டம் நடக்கும்போதே மைதானத்துக்குள் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இதற்கு முன்னர் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியின்போதும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போதும் மைதானத்துக்குள் திடீரென்று நுழைந்து சலசலப்பை ஏற்படுத்தினார் ஜார்விஸ் என்னும் ஜார்வோ.

தற்போது மீண்டும் அவர் இன்றைய போட்டியின் போது மைதானத்துக்குள் நுழைந்து பந்துவீச முயன்றுள்ளார். தன்னை ஒரு இந்திய வீரர் போலவே எண்ணிக் கொள்ளும் ஜார்வோ, இந்திய அணி போடும் ஜெர்ஸி துணியையே அணிந்து கொண்டு மைதானத்துக்குள் ஒவ்வொரு முறையும் ஓடி வருகிறார்.

இன்றும் இந்திய ஜெர்ஸியில் தான் என்ட்ரி கொடுத்தார் ஜார்விஸ். அவர் இப்படி சர்வதேச போட்டி நடக்கும்போது மைதானத்துக்குள் வரம்பை மீறி வருவது கண்டனங்களைப் பெற்று வருகிறது. அதே நேரத்தில் ஜார்வோ வந்தாலே சிரிப்புக்குப் பஞ்சம் இருக்காது.