Tamilசெய்திகள்

உக்ரைனில் ரசாயனத் தாக்குதல் நடத்த தயாராகி வரும் ரஷ்யா – நேட்டோ கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் தகவல்

 

உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு குறித்து விவாதிக்க பெரும்பாலான நேட்டோ உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் மற்றும் பிரதமர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு அடுத்த வாரம் நடைபெறுகிறது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய நேட்டோ கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், உக்ரைனில் ரசாயன தாக்குதலை நடத்த ரஷியா தயாராகி வருவதாக தெரிவித்தார்.

இதனால் நேட்டோ உறுப்பு நாடுகள் கவலை அடைந்துள்ளதாக அவர் கூறினார். உக்ரைனில் உயிரி ஆயுத ஆய்வகங்கள் இருப்பதாக ரஷியா தவறான குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதை காரணம் காட்டி ரஷியா ரசாயன தாக்குதலை நடத்தலாம் என்றும், நேட்டோ இது குறித்து மிகவும் விழிப்புடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ரஷ்யா அத்தகைய சர்வதேச சட்டத்தை மீறினால் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

எனினும், ரஷியா உக்ரைனில் ரசாயனத் தாக்குதல் நடத்தினால் நேட்டோ தரப்பில் ரஷியாவிற்கு ராணுவ பதிலடி கொடுக்கப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளிக்க அவர் மறுத்து விட்டார்.

உக்ரைன் எல்லையில் உள்ள நேட்டோ நாடுகளின் படைகளுக்கு மேலும் வலுவூட்டும் வகையில், கிழக்குப் பகுதியில் தயார் நிலையிலும், அதிக ஆயுதங்களுடன் கணிசமான அளவு நேட்டோ படைகளையும் சேர்க்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.