Tamilசினிமா

உணர்ச்சிகரமான சஸ்பென்ஸ் த்ரில்லர் ‘பிஹைண்ட் ‘!

ஒரு தாயின் பாசப் போராட்டத்தை வெளிப்படுத்தும் திகில் படமாக ‘பிஹைண்ட் ‘என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது.

இப்படத்தை அமன் ரஃபி எழுதி இயக்கி உள்ளார். ஷிஜா ஜினு படத்திற்கான கதையை எழுதி தனது பாவக்குட்டி கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில்  தயாரித்துள்ளார்.

இதில் பாசமுள்ள உணர்ச்சிகரமான தாயாக சோனியா அகர்வால் நடித்துள்ளார் . லியா என்கிற பாத்திரத்தில் சோனியா அகர்வால் சிறப்பாக நடித்துள்ளார்.இவர் தென்னிந்திய முன்னணி நடிகர்களான விஜய், தனுஷ், ஜெயம் ரவி, சிம்பு, சுதீப் ஆகியோருடன் நடித்துப் புகழ் பெற்றவர்.

சோனியா அகர்வாலின் கணவராக  கதையின் கதாநாயகனாக ஜினு இ தாமஸ் நடித்துள்ளார்.அவரது மகளாக மினு மோல் நடித்துள்ளார்.

ஒரு தாய் தனது குழந்தைக்கு அமானுஷ்யமான ஆபத்து வந்து இருப்பதை உணர்கிறாள். தாய்மை தனது குழந்தையைத் தொடர்கிற
கண்ணுக்குத் தெரியாத அந்த  ஆபத்தை உணர்ந்து கொள்கிறது. ஆனால் அந்தத் தாயின் கணவன் அதை ஒரு மாயை என்று கூறி அலட்சியப்படுத்துகிறான்.ஆனால் தாய் ஆபத்தினை உணர்ந்து காப்பாற்றுவதில் கவனமாக இருக்கிறாள்.ஒரு கட்டத்தில் கணவனும் அந்த அபாயம் உண்மைதான் என்று உணர்ந்து கொள்கிறான். அப்படிப்பட்ட சூழலில் தன் குழந்தைக்கு ஆபத்தை விளைவிக்கப் பின் தொடரும் அந்தத் தீய சக்தியை எதிர்த்து தாய் தீவிரமாகப் போராடுகிறாள் . அவள் தனது குழந்தையை மீட்டாளா? அந்த ஆபத்து எத்தகையது? அது யாரால் ஏற்படுகிறது போன்ற கேள்விகளுக்கு விடை சொல்வது தான் பிஹைண்ட் திரைப்படம்.

இது ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படம். அதில் உணர்ச்சிகரமான காட்சிகளும் உள்ளன.மூச்சைப் பிடித்துக் கொள் பின்னால் பதுங்கி இரு என்கிற பரபரப்போடு இந்தப் படம் இருக்கும்.