உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி – கமல்ஹாசன் அறிவிப்பு
தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 6, 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.
கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு நேரடி தேர்தலும், மாவட்ட ஊராட்சி தலைவர், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியத் தலைவர், ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவர், கிராம ஊராட்சித் துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு நேரடி தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளை கொண்டு மறைமுக தேர்தலும் நடத்தப்படுகிறது. மொத்தம் 27,003 பதவி இடங்களுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது.
இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப்போட்டியிடுவதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கமல்ஹாசன் டுவிட்டர் பதிவில், ‘உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடுகிறது.9 மாவட்டங்களிலும் பரப்புரைப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன். களத்தில் சந்திப்போம். வெற்றி நமதே’ என கூறியுள்ளார்.