கன்னியாகுமரில் உள்ள திருவள்ளூவர் சிலையை பார்க்க 5 மாதங்கள் தடை!
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது. கடந்த 2000 -ம் ஆண்டு 133 அடி உயர திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது. அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி இந்தச் சிலையை திறந்து வைத்தார்.
தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் படகில் சென்று இந்தச் சிலையை கண்டுகளித்து வருகின்றனர். இதற்கிடையே, கன்னியாகுமரி கடல் நடுவே அமைக்கப்பட்டுள்ள 133 அடி திருவள்ளுவர் சிலைக்கு ரூ.1 கோடி செலவில் ரசாயனக் கலவை பூசும் பணியினை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
3 ஆண்டுக்கு ஒரு முறை ரசாயனக் கலவை பூசப்பட்டு வருகிறது. இறுதியாக, கடந்த 2017-ம் ஆண்டு திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசப்பட்டது. சிலிக்கான் எனப்படும் ரசாயனக் கலவை பூசும் பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது. சிலையில் உள்ள வெடிப்புகளில் சுண்ணாம்புக் கலவை பூசப்பட்டு பின்னர் காகிதக் கூழ் கொண்டு சிலையில் படிந்துள்ள உப்புக்கரிசல் நீக்கப்படுகிறது. அதன்பின், ஜெர்மன் நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட சிலிக்கான் எனப்படும் ரசாயனக் கலவை பூசப்படுகிறது.
இந்நிலையில், இந்த பணியால் நேற்று முதல் வரும் நவம்பர் 2-ம் தேதி வரை 5 மாதங்களுக்கு திருவள்ளுவர் சிலையைப் பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அறிவித்துள்ளது.