Tamilசெய்திகள்

கொடநாடு கொள்ளை, கொலை வழக்கில் என்னை சேர்க்க முயற்சி – எடப்பாடி பழனிசாமி பேச்சு

சட்டசபையில் நடந்த தர்ணா போராட்டத்துக்கு பிறகு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

கொடநாடு எஸ்டேட்டில் உள்ள இல்லத்துக்கு ஜெயலலிதா சென்று ஓய்வு எடுப்பது வழக்கம். அந்த இல்லத்தில் கொள்ளை கும்பலை சேர்ந்த சயன் மற்றும் கூட்டாளிகள் கொள்ளையடிக்க முயற்சித்த போது காவலாளி மரணம் அடைந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு சயன் உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது.

குற்றவாளி சயனுக்கு சம்மன் அனுப்பி ரகசிய வாக்குமூலம் பெற்றுள்ளதாகவும், அதில் என்னை சேர்க்க முயற்சி நடப்பதாகவும் பத்திரிகைகளில் தகவல் வெளியாகி உள்ளது. இந்த வழக்கு வருகிற 27-ந்தேதி விசாரணைக்கு வரும் நிலையில் திட்டமிட்டு தி.மு.க. அரசு அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது.

கொடநாடு வழக்கில் என்னை சேர்க்க சதி நடக்கிறது. இந்த வழக்கில் குற்றவாளிகள் கைதான போது அவர்களை ஜாமீன் எடுத்தது தி.மு.க. வழக்கறிஞர்கள் தான். அப்போது அவர்கள் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டனர்.

தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் தி.மு.க. வழக்கறிஞர்களே அரசு வழக்கறிஞர்களாகவும் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றனர். திட்டமிட்டு அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக என்னை பழி வாங்குகிறார்கள்.

சி.ஆர்.பி.சி. 313-வது சட்டப்பிரிவின்படி சயனிடம் வாக்குமூலம் பெற்ற போது அவர் இதுதொடர்பாக எந்த தகவலையும் கூறவில்லை. ஆனால் தி.மு.க. அரசு திட்டமிட்டு என் மீது வீண் பழி சுமத்த முயற்சிக்கிறது.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் பல சோதனைகளை கடந்து கட்சியை வழிநடத்தி வருகிறோம். எந்த அச்சுறுத்தலுக்கும் நாங்கள் பயப்படமாட்டோம். தேர்தல் நேரத்தில் 505 வாக்குறுதிகளை தி.மு.க. அறிவித்தது. அதனை நிறைவேற்ற முடியாத நிலையில் பிரச்சனைகளை திசை திருப்ப இந்த நாடகத்தை அரங்கேற்றி பொய் வழக்கு போட முயற்சிக்கிறார்கள்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சயன், மனோஜ், வாளையார் ரவி ஆகியோர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. ஆனால் இது போன்ற குற்றவாளிகளுக்கு ஆதரவாக தி.மு.க. அரசு செயல்படுகிறது. எதிர்க்கட்சி தலைவரான எனக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலையை நினைத்து பாருங்கள். அவர்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. எந்த அச்சுறுத்தலாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது.

கேள்வி:- நீங்கள் வெளிநடப்பு செய்த பிறகு முதல்- அமைச்சர், அவர்களுக்கு மடியில் கனம் உள்ளது. அதனால் பயப்படுகிறார்கள். கோர்ட்டு அனுமதியுடன் தான் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று கூறி இருக்கிறாரே?

பதில்:- பொய்யான தகவலை அவர் தெரிவித்துள்ளார். அவரது மடியில் தான் கனம் உள்ளது. எந்த சூழ்நிலையிலும் எங்களை முடக்க முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.