டெல்லியில் மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு!
ஒமைக்ரான் வைரஸ் பரவல் வேகம் எடுத்துள்ள நிலையில், கொரோனா பாதிப்பு நாள்தோறும் குறைந்து வருகிறது.
மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், காலை 8 மணிவரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,358 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.
கடந்த 24-ந் தேதி 7,189, மறுநாள் 6,987, 26-ந் தேதி 6,531 ஆகவும் பாதிப்பு இருந்தது. இந்நிலையில் நேற்று மேலும் குறைந்துள்ளது. மொத்த பாதிப்பு 3 கோடியே 47 லட்சத்து 99 ஆயிரத்து 691 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 1,636 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அம்மாநிலத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு கொரோனா பரவல் விகிதம் 4 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
தலைநகர் டெல்லியில் நேற்று 331 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இது கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவில் தினசரி பாதிப்பில் அதிகம் ஆகும்.
கொரோனா பாதிப்பால் கேரளாவில் 236 பேர் உள்பட நாடு முழுவதும் 293 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,80,290 ஆக உயர்ந்தது.
கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 6,450 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 42 லட்சத்து 43 ஆயிரத்து 945 ஆக அதிகரித்துள்ளது. தற்போது ஆஸ்பத்திரிகளில் 75,456 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
நாடு முழுவதும் இதுவரை செலுத்தப்பட்ட 142 கோடியே 47 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது.
இதில் நேற்று மட்டும் 72,87,547 டோஸ் தடுப்பூசிகள் அடங்கும்.
இதற்கிடையே நேற்று 10,35,495 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
மொத்த பரிசோதனை எண்ணிக்கை 67.41 கோடியாக உயர்ந்துள்ளது.