வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறுவதை வரவேற்ற டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இந்த அறிவிப்பை விவசாயிகள் வரவேற்று கொண்டாடிவருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்கள் பலர் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
அவ்வகையில், வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் முடிவை டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
பிரகாஷ் திவாஸ் அன்று மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. மூன்று சட்டங்களும் நீக்கப்படுகின்றன. வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி, 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் வீரமரணம் அடைந்தனர். அவர்களின் தியாகம் என்றும் அழியாமல் இருக்கும். விவசாயிகள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து விவசாயத்தையும் விவசாயிகளையும் எப்படிக் காப்பாற்றினார்கள் என்பதை வரும் தலைமுறையினர் நினைவு கூர்வார்கள். விவசாயிகளுக்கு தலைவணங்குகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.