X

அக்னிபாத் திட்டத்தை அரசியலாக்க கூடாது – கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு

இந்திய சுதந்திரத்தின 75-வது ஆண்டு கொண்டாட்டங்களையொட்டி புதுவையில் சிறப்பு தூய்மை பணிகள் நடந்து வருகிறது. இன்று காலை கவர்னர் தமிழிசை புதுவை பாரதி வீதி மற்றும் நேரு வீதி பகுதிகளில் நடைபெறும் தூய்மை பணிகளை பார்வையிட்டு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார். தொடர்ந்து லாஸ்பேட்டை நாவலர் நெடுஞ்செழியன் பள்ளி முதல் விமான நிலையம் வரையிலும் நடைபெறும் பணிகளை பார்வையிட்டார்.

இதைத்தொடர்ந்து வில்லியனூர் பைபாஸ் சாலை, வீராம்பட்டினம் கடற்கரை பகுதி, பாகூர் கன்னியகோவில் சாலை சந்திப்பு பகுதிகளில் தூய்மை பணிகளை பார்வையிட்டு பணிகளை வேகப்படுத்தினார். ஆய்வின்போது கவர்னர் தமிழிசை கூறியதாவது:-

புதுவையில் நேற்று முதல் சுத்தப்படுத்தும் பணியை தொடங்கி உள்ளோம். பல்வேறு இடங்களில் உள்ள பிரச்சினைகள் குறித்து என்னிடம் புகார் தெரிவித்தனர்.

இதை அரசு மட்டுமே செய்யக்கூடிய பணி அல்ல. அனைவரும் புதுவையை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். பொதுமக்களின் பங்களிப்பு அவசியம்.

கடற்கரையில் சுத்தப்படுத்தும் பணியின்போது சாப்பிட்ட பொருட்களின் குப்பைகள்தான் அதிகமாக இருந்தது. சாப்பிடுவது எவ்வளவு முக்கியமோ? அதேபோல குப்பைகளையும் குப்பை தொட்டியில் போடுவதும் முக்கியம். பிரதமர் தூய்மை இந்தியா திட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறார். அதில் நமது பங்களிப்பும் அவசியம் இருக்க வேண்டும்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அனைவரும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். இதுகுறித்து இன்று மாலை ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட உள்ளது.

தடுப்பூசி போடாதவர்கள், குழந்தைகள், பூஸ்டர் தடுப்பூசியை அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும். நாம் கட்டாயப்படுத்தி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்துவது தேவையில்லை. 2 ஆண்டில் கொரோனா பாதிப்பு எப்படி இருந்தது? என்பதை நாம் கண்கூடாக கண்டுள்ளோம்.

எனவே, அனைவரும் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய மார்க்கெட் கட்டப்பட உள்ளது. வியாபாரிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு, அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். சாலையோரத்தில் கடைகள் அகற்றப்படும்.

காவிரியில் அணை கட்டக்கூடாது என மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தெளிவாக ஆலோசனை நடத்தப்பட வேண்டும்.

அக்னிபாத் திட்டம் குறித்து முப்படை ராணுவ தளபதிகள் நாட்டுக்கு இளைஞர் படை தேவையாக உள்ளதை கருத்தில் கொண்டு நாட்டின் பாதுகாப்பு கருதியும் ஓராண்டாக திட்டமிட்டு வடிவமைத்தனர்.

இதனால் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள். ராணுவ வீரர்கள் போல அக்னி வீரர்கள் தேவை எனவும் தெரிவித்துள்ளனர். எனவே, இதை அரசியலாக்குவதை விட, நாட்டின் பாதுகாப்பு கருதி அரசு முடிவெடுக்கிறது என்ற எண்ணத்தோடு அணுக வேண்டும் என்பதே என் கருத்து.

கவர்னர் மாளிகை மக்கள் எளிதில் அணுகும் மாளிகையாகவே உள்ளது. அதிகளவு தடுப்புகள் அகற்றப்பட்டுவிட்டது. கடற்கரை சாலையில் உள்ள தடுப்புகள் மக்களின் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

லாஸ்பேட்டையில் தூய்மைப்பணியை பார்வையிட சென்ற கவர்னர் தமிழிசை தேசிய மாணவர் படை தலைமையகத்தையும் பார்வையிட்டார்.

அப்போது துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொண்டிருந்த என்.சி.சி. மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.