X

அடுத்த சாட்டை- திரைப்பட விமர்சனம்

அன்பழகன் இயக்கத்தில், சமுத்திரக்கனி நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிப் பெற்ற படம் ’சாட்டை’. இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘அடுத்த சாட்டை’ எப்படி இருக்கிறது, விமர்சனத்தை பார்ப்போம்.

அரசு பள்ளி மற்றும் ஆசிரியர்களிடம் இருக்கும் குறைபாடுகளை சுட்டிக் காட்டியப் படம் ‘சாட்டை’. தற்போது வெளியாகியிருக்கும் ‘அடுத்த சாட்டை’ படமும் ஒரு வகையில் அதே பார்மெட் தான் என்றாலும், இங்கு பள்ளி கல்லூரியாக மாறியிருக்கிறது.

அப்பா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் கடமைக்கு பணியாற்றுவதோடு, ஜாதி வெறிப் பித்தவர்களாகவும் இருக்கிறார்கள். அவர் அவர் ஜாதிக்கு ஏற்றவாறு வண்ணக் கயிறுகளை கையில் கட்டிக் கொண்டிருப்பவர்கள், மாணவர்களிடமும் அதை புகுத்தி விடுகிறார்கள். ஆனால், இவர்களைப் போல அல்லாமல், மாணவர்களின் எதிர்காலத்தில் அக்கறைக் கொண்டு, அவர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் சில ஆசிரியர்களும் அக்கல்லூரியில் பணியாற்றுகிறார்கள். அவர்களில் ஒருவர் தான் தமிழ் பேராசிரியரான சமுத்திரக்கனி.

சமுத்திரக்கனியின் நடவடிக்கை பிடிக்காமல் அவருக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுக்கும் கல்லூரி தலைமை ஆசிரியரான தம்பி ராமையாவின் தொடர் பிரச்சினைகள் ஒரு பக்கம், ஜாதி பிரிவினையோடு இருக்கு மாணவர்களை சரிப்படுத்தும் பணி மறுபக்கம், என்று இருக்கும் சமுத்திரக்கனிக்கு, அக்கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றுபவருடன் காதல் ஏற்பட, இந்த மூன்றிலும் அவர் எப்படி வெற்றிப் பெற்றார், மாணவர்களையும், பேராசிரியர்களையும் எப்படி திருத்துகிறார், என்பது தான் படத்தின் கதை.

சமுத்திரக்கனி என்றாலே கருத்துக்களின் பேக்டரி, என்று சொல்லும் அளவுக்கு, தான் நடிக்கும் படங்கள் அனைத்திலும், கிடைக்கும் வாய்ப்புகளில் கருத்துக்களை சொல்லும் சமுத்திரக்கனி, இந்த படம் முழுவதையுமே தனது கருத்துக்களால் நிரப்பியிருக்கிறார்.

ஒரு பக்கம் பேராசிரியர்கள், மறுபக்கம் மாணவர்கள், என்று இரு தரப்பினரிடையும் இருக்கும் குறைகளை சரி செய்வதையே தனது பணியாகக் கொண்டு செயல்படும் சமுத்திரக்கனியை சுற்றி முழு படமும் நகர்வதால், படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை திரை முழுவதும் நிரம்பியிருக்கிறார்.

தம்பி ராமையாவின் மகனாக நடித்திருக்கும் யுவன், அவர் காதலிக்கும் சக மாணவியான அதுல்யா ரவி, ஸ்ரீராம், ஜார்ஜ் மரியன் என்று அனைவரும் தங்களது வேடத்தில் திறம்பட நடித்திருக்கிறார்கள்.

கல்லூரியின் தலைமை ஆசிரியராக, வில்லத்தனம் கலந்த நகைச்சுவை வேடத்தில் நடித்திருக்கும் தம்பி ராமையாவின் வில்லத்தனத்தில் இருக்கும் மிரட்டலும், காமெடிக் காட்சிகளில் இருக்கும் நகைச்சுவையும் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.

கல்லூரி படித்தாலும், உதவித்தொகை பெறும் விண்ணப்பத்தை கூட பூர்த்தி செய்ய தெரியாத மாணவர்கள், வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால், அவர்களுக்கு புத்தகப் படிப்பு மட்டும் போதாது, செயல்முறை படிப்பும் தேவை என்பதை படம் வலியுறுத்துகிறது.

படத்தில் இடம்பெறும் பல வசனங்கள் கைதட்டல் பெறுகிறது. குறிப்பாக சென்சாரால் மியூட் செய்யப்பட்ட வசனங்களால் ஒட்டு மொத்த திரையரங்கே அதிர்கிறது.

வியாபார நோக்கத்தில் அல்லாமல் சமூக சீர்த்திருத்த நோக்கத்தில் இப்படத்தை தயாரித்த டாக்டர்.பிரபு திலக் மற்றும் சமுத்திரக்கனி, படத்தை இயக்கிய அன்பழகன் ஆகியோரை பாராட்டினாலும், படத்தில் அடுத்து என்ன நடக்கும், என்பதை முன்கூட்டியே யூகிக்க கூடிய விதத்தில் இருக்கும் திரைக்கதை. ஏற்கனவே சமுத்திரக்கனி படத்தில் பார்த்த பல காட்சிகள், என்று ஒரு குறிப்பிட்ட பார்மெட்டில் படம் இருப்பது, படத்திற்கு பெரிய பலவீனம்.

முதல் பாதி படம் மெதுவாக நகர்ந்து நம்மை சோதித்தாலும், இரண்டாம் பாதியில் வரும் மாணவர்களின் விபத்து, அதையொட்டி வரும் ஜாதி பிரச்சினை, அதை தீர்க்க சமுத்திரக்கனி மேற்கொள்ளும் நடவடிக்கை ஆகியவை படத்திற்கு விறுவிறுப்பை கூட்டியிருக்கிறது.

’சாட்டை’ படத்தில் இருந்த எதார்த்தங்கள், இந்த ‘அடுத்த சாட்டை’ படத்தில் மிஸ்ஸிங். அதிலும், சமுத்திரக்கனியின் பேச்சை கேட்டு ஒட்டு மொத்த கல்லூரியும் ஒரே நாளில் மாறுவது, போன்ற விஷயங்கள் க்ளீன் ஷேவாக இருக்கிறது.

மொத்தத்தில், சாட்டை என்றால் பள்ளி, அடுத்த சாட்டை என்றால் கல்லூரி, என்பதை தவிர இரண்டு படங்களுக்கும் பெரிதாக வேறு வித்தியாசங்கள் இல்லை என்றாலும், சமூக விழிப்புணர்வுக்கானப் படம், என்ற இரண்டு படங்களுக்குமான ஒற்றுமைக்காக இப்படத்தை ஒரு முறை பார்க்கலாம்.

-ரேட்டிங் 2.5/5