அடைம் அவுட் கொடுத்த விவகாரம் – வங்காளதேச அணிக்கு கண்டனம் தெரிவித்த இலங்கை வீரர் மேத்யூஸ்

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று டெல்லியில் நடந்த போட்டியில் இலங்கையை 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசம் தோற்கடித்தது. இப்போட்டியில் இலங்கை வீரர் மேத்யூஸ் ‘டைம் அவுட்’ முறையில் அவுட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

2023-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்கான விதிப்படி ஒரு வீரர் ஆட்டமிழந்தால் அடுத்து வரும் பேட்ஸ்மேன் 2 நிமிடங்களுக்குள் பந்தை எதிர் கொள்ள வேண்டும். மேத்யூஸ் உடனடியாக மைதானத்துக்கு வந்தாலும் பந்தை எதிர்கொள்வதில் தாமதம் ஏற்பட்டது. அவரது ஹெல்மெட்டில் பிரச்சினை இருந்ததால் மாற்று ஹெல்மெட் கொண்டு வரும்படி மற்ற இலங்கை வீரர்களிடம் கூறினார்.

இதில் தாமதம் ஏற்பட்டதால் வங்காளதேச கேப்டன் ஷாகிப்-அல்-ஹசன், நடுவர்களிடம் அதை சுட்டிகாட்டி டைம் அவுட் கேட்டார். இதையடுத்து மேத்யூசுக்கு டைம் அவுட் கொடுக்கப்பட்டது. இதனால் அவர் அதிருப்தியுடன் வெளியேறினார்.

இது குறித்து கருத்து தெரிவித்த மேத்யூஸ், “வங்காளதேச அணி விளையாடிய விதம் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. ஷாகிப்-அல்-ஹசன் மற்றும் வங்காளதேச அணியின் செயல் வெளிப்படையாக அவமானகரமானது. பீல்டிங்குக்கு இடையூறு அல்லது பந்து வீசுவதற்கு முன்பே கிரீசைவிட்டு நான் வெளியேறி இருந்து அவுட் கொடுத்திருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை. நான் இரண்டு நிமிடங்களில் களத்தில் இருந்தேன். நான் கிரீசில் இருந்த போது தான் எனது ஹெல்மெட் உடைந்தது. அதை நடுவர்களும் பார்த்தனர். அப்போது எனக்கு 5 வினாடிகள் இருந்தன. நான் ஹெல்மெட்டை காட்டிய பிறகு வங்காளதேச அணியினர் மேல்முறையீடு செய்ததாக நடுவர்கள் கூறினார்கள்.

எனது இரண்டு நிமிடங்கள் முடிவடையாததால், பொது அறிவு எங்கே என்று கேட்டேன். இதை விளக்குவதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. எனது 15 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு அணியோ அல்லது வீரரோ இவ்வளவு கீழ்நிலையில் இருப்பதை பார்த்ததில்லை. துரதிருஷ்டவசமாக ஹெல்மெட்டின் பட்டை உடைந்தது. அந்த சமயத்தில் இதுபோன்று (டைம் அவுட்) வேறு அணியும் செய்யும் என்று நான் நினைக்கவில்லை. எனது உபகரணம் செயலிழந்தது. இது ஒரு பாதுகாப்பு பிரச்சினை. ஹெல்மெட் இல்லாமல் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாது.

ஷாகிப்-அல்-ஹசன் மீதும் வங்காளதேச அணி மீதும் மிகுந்த மரியாதை வைத்திருந்தேன். நீங்கள் அனைவரும் வெற்றி பெற விளையாடுங்கள். அது விதிகளுக்குள் இருந்தால் பிரச்சினை இல்லை. ஆனால் நான் இரண்டு நிமிடங்களுக்குள் களத்தில் இருந்தேன். அதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது. விக்கெட் வீழ்ந்ததில் இருந்து நான் கிரீசுக்குள் நுழையும் வரையும் எனது ஹெல்மெட் உடைந்த பிறகு இன்னும் 5 வினாடிகள் மீதி இருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதேபோல் நடுவர்கள் மீது இலங்கை கேப்டன் குசல் மெண்டிஸ் அதிருப்தி தெரிவித்துள்ளார். 146 ஆண்டு கால சர்வ தேச கிரிக்கெட் வரலாற்றில் டைம் அவுட் முறையில் அவுட் ஆன முதல் வீரர் மேத்யூஸ் ஆவார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports