அணைகளை தெர்மாகோல் கொண்டு மூடி வைத்துள்ளோம் – அமைச்சர் துரைமுருகன் பேச்சால் சட்டசபையில் சிரிப்பலை

தமிழக சட்டசபையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், மதுரை மாநகருக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்பட வேண்டும் என்றும், அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் எனவும், மதுரை மாநகரில் சாக்கடை நீரும் குடிநீருடன் கலந்து வரக்கூடிய நிலையில் அரசு பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் எனவும் சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜூ கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, கம்பத்தில் இருந்து மதுரைக்கு நீர் கொண்டு செல்லும் பணியை அ.தி.மு.க. ஆரம்பித்தாலும் கிணறு தோண்டும் அனுமதியை பெறாமல் இருந்ததாகவும், 160 எம்.எல்.டி தண்ணீர் கொண்டு வர பணிகள் நடைபெற்று வருகிறது என்றும், கடந்த ஆட்சியில் 60 கிலோ மீட்டருக்கு பைப் லைன் போடாமல் விட்ட நிலையில் தற்போது அந்த பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருவதாகவும், 15 கிலோ மீட்டர் பைப் லைன் போட வேண்டிய பணிகள் உள்ளதால் அந்த பணிகளும் விரைவில் நிறைவு பெற்று முதலமைச்சர் சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைப்பார் எனவும் கூறினார்.

அப்போது குறுக்கீட்டு பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நிச்சயமாக தண்ணீர் கிடைக்கும் என்றும், அணைகள் காலியாகாமல் இருக்க தெர்மாகோல் கொண்டு மூடி வைத்துள்ளோம். எனவே கவலைப்பட வேண்டாம் என கூறியதால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news