அதிமுக மாநாட்டுக்கு சென்னையில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் தொடண்டர்கள் மதுரை புறப்பட்டனர்

அ.தி.மு.க. சார்பில் மதுரையில் எழுச்சிமிகு மாநாடு 20-ந்தேதி நடைபெறுகிறது. கடந்த ஒரு மாதமாக இதற்கான ஏற்பாடுகள் இரவு-பகலாக நடந்து வருகிறது. மாநாட்டில் 15 லட்சம் தொண்டர்கள் பங்குபெற வேண்டும் என்ற இலக்கின் அடிப்படையில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் வாகனங்களை ஒழுங்கு செய்துள்ளனர்.

பஸ், வேன், கார்களில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 50 ஆயிரம் பேர் செல்வதற்கு ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள் திட்டமிட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், பாலகங்கா, ஆதிராஜாராம், டி.ஜி.வெங்கடேஷ் பாபு, ஆர்.எஸ். ராஜேஷ், தி.நகர் சத்யா, வி.என்.ரவி, அசோக் ஆகியோர் சென்னையில் இருந்து தொண்டர்களை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தி.நகர் சத்யா மற்றும் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர் தனியாக சிறப்பு ரெயில் ஒன்று ஏற்பாடு செய்துள்ளனர். இந்த ரெயில் குளுகுளு வசதியுடன் 3-ம் வகுப்பு படுக்கை பெட்டிகளாக விடப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு அனுமதி பெற்று ஐ.ஆர்.டி.சி. மூலம் புக்கிங் செய்யப்பட்டுள்ளது. 1,200 பேர் இதில் பயணம் செய்கிறார்கள். 14 ஏ.சி. பெட்டிகளும், ஒரே ஒரு சாதாரண 2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டியுடன் நாளை (19-ந் தேதி) இரவு 10 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படுகிறது. இந்த சிறப்பு ரெயிலுக்கான முழு தொகையும் 2 மாவட்ட செயலாளர்கள் செலுத்தியுள்ளனர்.

மேலும் சிறப்பு ரெயில் தவிர பிற ரெயில்களிலும் அ.தி.மு.க.வினர் மதுரை செல்ல ஒரு மாதத்திற்கு முன்பே முன்பதிவு செய்துள்ளனர். தென் சென்னை, வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் ஏற்பாட்டில் 4 பஸ்கள், 30 வேன்கள், 98 கார்களில் பயணம் செய்கிறார்கள்.

மாவட்ட செயலாளர் பாலகங்கா தலைமையில் 8 பஸ்கள், 20 வேன்கள் மற்றும் ரெயில்களில் தொண்டர்கள் செல்கிறார்கள். இந்நிலையில், அ.தி.மு.க சார்பில் மதுரையில் நடைபெற உள்ள எழுச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, சென்னை எழும்பூரில் இருந்து சிறப்பு ரெயில் புறப்பட்டது. அதில் சுமார் 1,200 அதிமுக தொண்டர்கள் மதுரை புறப்பட்டு சென்றனர். இதேபோல மாநாடு முடிந்து இரவு 10 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலையில் எழும்பூர் வந்து சேருகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news