அதிமுக-வுக்கு தக்க பாடம் புகட்டுவோம் – வைகோ ஆவேசம்

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

விக்கிரவாண்டி தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகமும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடுவதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் முறையே தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் முழு அளவில் களத்தில் பணியாற்றும்.

தமிழகத்தை எல்லா வகையிலும் வஞ்சித்து வருகிற மத்திய பா.ஜ.க. அரசின் துரோகங்களுக்கு துணையாகச் செயல்படும் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு இடைத்தேர்தலில் மக்கள் உரிய பாடம் கற்பிப்பார்கள்.

மாநில உரிமைகள் அனைத்தையும் டெல்லியின் காலடியில் அடகுவைத்து விட்டு அடிமைச் சேவகம் புரியும் எடப்பாடி பழனிச்சாமி அரசை ஆட்சிப் பீடத்திலிருந்து தூக்கி எறிய வேண்டும் என்ற கொந்தளிப்பு தமிழக மக்கள் உள்ளத்தில் எப்போதோ எழுந்துவிட்டது. அதற்கு முன்னோட்டமாகத்தான் பாராளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் நல்ல தீர்ப்பு அளித்தார்கள்.

தற்போது விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களிலும் மக்கள் விரோத அதிமுக வேட்பாளர்களை தோற்கடிக்க வேண்டும் என்று வாக்காளப் பெருமக்கள் காத்திருக்கின்றார்கள்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களில் மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு ம.தி. மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு மூச்சுடன் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

புதுவை மாநிலத்தில் காமராஜர் நகர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ்கட்சி வேட்பாளரின் வெற்றிக்கு ம.தி.மு.க. புதுவை மாநில நிர்வாகிகள், கழகக் கண்மணிகள் களப்பணி ஆற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news